கே.அண்ணாமலை மலிவான செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை
தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள, நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கோரும் மசோதா உட்பட பல மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்படும் பகுதியினர் ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக வழி முறையில் போராடி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் திருவாவடுதுறை மடத்திற்கு செல்லும் வழியில் மயிலாடுதுறையில் சில அமைப்பினர் அமைதியாக ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் பயண வழியில் எந்தவொரு சிறு இடையூறும் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆளுநர் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்பதை முதலமைச்சர் சட்டப் பேரவையில், விரிவாக விளக்கி தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், பாஜகவின் தமிழ்நாடு தலைவர் திரு.கே.அண்ணாமலை ஏதோ பெரிய விபரீதம் ஏற்பட்டுவிட்டது போல் கூக்குரல் எழுப்பி வருகிறார். அவரது ஆதரவாளர்கள் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரிடம் நேரில் புகார் கொடுத்து, என்ன செய்கிறோம் பார்! என மிரட்டி வருகிறார்.
பாஜகவின் மதவாத, சனாதானாக் கொள்கைக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணி திரட்டும் பணியில் திமுகழகத் தலைவர், முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயலாற்றி வருவதால், நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் எழுச்சி கொண்டு வருவதால் பாஜகவினர் அஞ்சி நடுங்கி வருகின்றனர். அவர்களது அச்சத்தை மறைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசை மிரட்டும் வாய்ச்சவடால் அரசியலில் திரு.கே.அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். முன்னாள் காவல்துறை அலுவலர் சட்டம் அறிந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மோதலையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் மலிவான அரசியலில் ஈடுபடுவதை பாஜக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது. கே.அண்ணாமலையின் சட்ட அத்துமீறலை கண்டித்து ஜனநாயக சக்திகள் களம் இறங்கி போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.