கேப்ரியல் போரிக் தலைமையிலான அமைச்சரவை அறிவிப்பு – பெண்கள் பெரும்பான்மை
24 பேர் கொண்ட அமைச்சரவையில் 14 பெண்கள்
சிலி நாட்டில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றார். சிலி நாட்டின் வருங்காலத்திற்கான தனது தொலைநோக்கு திட்டத்தை ஏற்காத பகுதியினரையும் உள்ளடக்கிய சிலி நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் பணியாற்றுவேன் என்று கேப்ரியல் போரிக் அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக, அவரது புதிய அமைச்சரவை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை சிலி நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றவர்களில், 35 வயதேயான கேப்ரியல் போரிக் தான் மிகவும் இளையவர் ஆவார். அவரது 24 பேர் கொண்ட அமைச்சரவையில் 14 பெண்கள் இடம்பெற்றுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கதாகும். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவரின் சராசரி வயது 49 ஆகும். சிலி நாட்டு அரசியல் வரலாற்றில் பெண்கள் பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ள முதல் அமைச்சரவை இதுவே ஆகும்.
‘மாயா பெர்னாண்டஸ் ஹாலந்தே‘ என்ற பெண்மணியை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்துள்ளார் போரிக். இவர், 1973 ஆம் ஆண்டு வலதுசாரி ராணுவ நடவடிக்கையால் நீக்கப்பட்ட இடதுசாரி அதிபரான ‘சால்வடோர் ஹாலந்தே’வின் பேத்தி ஆவார். சர்வாதிகார ஆட்சிக்காலங்களில் எண்ணற்ற சலுகைகளையும், ஒப்பந்தங்களையும் அனுபவித்து வந்த ராணுவத்துறையில் இவர் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு நாடு கடத்தப்பட்ட மாயா பெர்னாண்டஸ் குடும்பத்தினர் கியூபாவில் வாழ்ந்து வந்தனர். 1990 ஆம் ஆண்டில் சிலி நாட்டிற்கு மீண்டும் திரும்பினார்.
அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிரப் பிரிவின் முன்னாள் தலைவரான இஷ்கியா சைச்செஸ் என்ற பெண்மணி சிலியின் உள்நாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காவல்துறையையும் நிர்வகிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சிமிகு தலைவரும், மாணவர் போராட்டத்தில் முன்னணித் தலைவராக விளங்கிய கேமிலா வாலிஜோ (வயது 33) அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் சிறப்புமிகு ஆளுமையாக விளங்கி வரும் இவர், உலகின் கவனத்தைக் கவர்ந்திழுக்கும் புரட்சிகரப் பெண் என்று அறியப்படுகிறார்.
அதிபர் கேப்ரியல் போரிக் அமைச்சரவையில் பெண்கள் பெரும்பான்மை வகிப்பது அந்நாட்டு அரசியல் நிர்ணய சபையில் திகழும் பாலின சமத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. அந்நாட்டு அரசியல் நிர்ணய சபையில் 50 சதவிகிதம் பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றில் பாலின சமத்துவம் இந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது இதுவே முதல்முறை ஆகும். அரசியல் நிர்ணய சபையின் தலைவராக மரியா எலிசா குவிந்தேரோஸ் பொறுப்பு வகித்து வருகிறார்.
மாயா பெர்னாண்டஸ் ஹாலந்தே உள்ளிட்ட மூன்று கம்யூனிஸ்டுகள் அதிபர் கேப்ரியல் போரிக் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து சிலி கம்யூனிஸ்ட் கட்சி பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளது: ” சிலி மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.”