தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.மாசிலாமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
குறுவை நெல்பயிர் பாதிப்பிற்கான இழப்பீட்டை கர்நாடகா அரசிடம் கோரிட.. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட.. உச்சநீதிமன்றத்தில் வழக்கிட வேண்டும்..
தற்போது 20 சதத்திற்கும் மேல் டெல்டாவில் பயிர்கள் கருகிவிட்டது. காய்ந்த பயிர்களைவேறு வழியின்றி மாடுகள்மேய்ந்துவருகின்றன. ஆகஸ்டு மாதம் முதல் சம்பா விதையிட வேண்டிய விவசாயிகள் கையறு நிலையில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசரமாக விசாரித்து தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டிய உச்சநீதிமன்றம் 6ஆம் தேதி விசாரிப்பதாக ஒத்திவைத்தது. தற்பொழுது அதை மீண்டும் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருபது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் தீர்ப்பின்படி தண்ணீர் கிடைத்தால் தான் பெரிய பாதிப்பில் இருந்து மீள முடியும். மேட்டூரில் தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு முழுமையாகப் பாதுகாத்திட முடியாது.
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் தலைமையில் நடந்த 7வது காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு 9000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை கர்நாடகம் மறுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒன்றிய அரசு அமைத்த பிரதமர் தலைமையிலான ஆணையத்தின் தீர்ப்பையே கர்நாடகம் மீறியது என்பது தான் வேதனை.
2013 ஆம் ஆண்டு பங்கீட்டின் படி கர்நாடகம் தண்ணீர் கொடுக்காத நிலையில்.. இதை விட கடுமையான பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட பொழுது தமிழக அரசின் சார்பில் 2013 மே 28 ல் 2450 கோடி ரூபாய் விவசாயிகளுக்காக இழப்பீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் வழக்கு போடப்பட்டது. அந்தச் சூழலிலும் தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை என கர்நாடக அரசு மறுத்து விட்டது.
இந்த நிலையில் தான்.. தீர்ப்பின் படி காவிரி நீரைப் பங்கீடு செய்திட காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென 2013 மார்ச் 19 அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ மேற்பார்வைக் குழு அமைக்க உத்தரவிட்டது. அதன் பின்னரும் பல ஆண்டுகளில் கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுத்த நிலையில்தான் 2016 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வாகும் என மறுபடியும் தமிழக அரசு முறையிட்டது.
இடைக்கால தீர்ப்பு வெளியானது முதல் பெரும்பகுதி ஆண்டுகளில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு வழக்காடி தான் தமிழகத்திற்குரிய நீர் பங்கீடு ஓரளவு கிடைத்து வந்துள்ளது.
மேகதாது அணை கட்ட தமிழகம் அனுமதித்தால் இப்படியான பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கர்நாடக முதல்வர் தற்பொழுது கூறுகிறார். மேகதாதுஅணை கட்டப்பட்டால் இப் பிரச்சனை வேறொரு புதிய சிக்கலை கொடுக்குமே தவிர.. பிரச்சனை தீராது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் தண்ணீர் கேட்டு போராடும் நிலைக்கு ஒரு முடிவு வேண்டும்..
காவிரிஆணையம் தன்னாட்சி பெற்றது தான். ஆனால் ஆணையத்தின் தலைவரோ ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வளத்துறை உயர் அலுவலர். இவர் ஒன்றிய அரசை கவனத்தில் கொண்டுதான் முடிவெடுப்பார் என்பது நிதர்சனம் மற்றும் கடந்த கால வரலாறு. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில்கூட, ஒன்றிய அரசு எந்த அறிவுறுத்தலையும் ஆணையத்திற்கு கொடுக்கவில்லையே, ஏன்…?
இப்படி எத்தனை ஆண்டுகள் நாம் போராடுவது.. இப்படியான இக்கட்டான நிலைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட.. எதிர்காலத் தேவைகளையும் கணக்கில் கொண்டு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என விழைகிறோம். ‘
மேட்டூர் அணை நீர் இருப்பை கொண்டு சூல்கட்டும் மற்றும் கதிர் வரும் நிலையில் உள்ள குறுவையை பாதுகாத்திட உரிய அளவு தொடர்ந்து நீர் திறந்து கள அலுவலர்கள் மூலம் கண்காணிப்பு செய்திட வேண்டும். கருகி காய்ந்து; மற்றும் இனி பிழைக்க வாய்ப்பு இல்லாது பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடியை கணக்கெடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் வழங்கிட வேண்டும். விவசாயிகள் தன்னம்பிக்கையோடு சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள சிறப்புத் திட்டங்களை வழங்கிடவேண்டும்.
விவசாயிகளின் நம்பிக்கைக்கு மேற்கண்ட திட்டங்களை தமிழக அரசு உடனடியாக அறிவித்திட வேண்டும். தீர்ப்பின்படி தண்ணீர் கொடுக்காத நிலையில் டெல்டாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெல் பயிர் பாதிப்பிற்கான இழப்பீடை கர்நாடகா அரசு கொடுத்திட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தனி முறையீடு செய்திட வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் தீர்ப்பின்படி தண்ணீர் பெற்றிட.. தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.