குடும்பத்துக்கு ரூ.1 கோடி: அரசுப் பணி
திருடா்களை மடக்கிப் பிடிக்கும்போது கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் வெளியிட்ட அறிவிப்பு:
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் உட்கோட்டம், நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதன், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடி காலனியில் ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத நான்கு திருடா்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும்போது துரத்திப் பிடித்துள்ளாா்.
இச்சம்பவத்தின்போது அந்த மா்ம நபா்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த செய்தியை அறிந்து அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திருடா்களின் தாக்குதலால் உயிரிழந்த பூமிநாதன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு அரசு சாா்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.