குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டு அலங்கார ஊர்திகளுக்கு தடை – தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
வருடம் தோறும் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளும், கலைக்குழுக்களும் பங்கேற்கும். இதில் சிறப்பான முத்திரை பதித்து விருதுகளும், பரிசுகளும் பெற்று, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த நிலையில் வரும் 26.01.2022 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு பங்கேற்க அனுமதியில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார் ஆகிய தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊர்திகள் அனுமதிக்கப்படக் கூடாது என உத்தரவு போட்டது யார்? என்ன காரணம்?
தமிழ்நாடு தயாரித்துள்ள விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி ஒன்றிய அரசு என்ன நினைக்கிறது. ராணி வேலுநாச்சியார் காலனி ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து போராடி சாதனை படைத்தவர். தியாக வேங்கை வ.உ.சிதம்பரனார் காலனி ஆதிக்கத்தை எல்லா முனைகளிலும் எதிர்த்துப் போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 30 வயதில் 40 ஆண்டுகால தீவாந்திர சிறை தண்டனை பெற்றவர். பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை, தனது கனல் மூட்டும் கவிதைகளாலும், கருத்தாயுதம் தரும் கட்டுரைகளாலும் எழுச்சியூட்டிய புரட்சியாளர் மகாகவி பாரதியார் காலத்தை வென்று வாழ்பவர்.
இவர்களது தியாக வாழ்வை சித்தரிக்கும் ஊர்திகளுக்கு குடியரசு தின அணி வகுப்பில் இடமில்லை எனில் தமிழகம் கொந்தளிக்கும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.
உடனடியாக தமிழ்நாடு அரசின் ஊர்திகள் அனுமதி அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவமதிக்கும் ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஒன்றிய அரசின் வன்மப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கட்சி அமைப்புகளை கேட்டுக் கொள்வதுடன் இப்போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.