இந்தியா

குடியரசுத் தலைவர் பதவி: பழங்குடியினருக்குப் பரிசா? பாதகமா?

த.லெனின்

இந்திய ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த அணிமகுடம் குடியரசுத் தலைவர். நாட்டின் சட்டங்கள், உலக நாடுகளுடனான ஒப்பந்தங்கள், அரசின் அறிவிப்புகள் அனைத்தும் அவர் பெயரிலேயே வரும். முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் செயல்படுவர் குடியரசுத் தலைவர். ஆனால், மோடி அரசு இதையும் மாற்றி இராணுவத்தைச் சார்ந்த ஒருவரையே அந்தப் பதவிக்கும் அமர்த்தியுள்ளது. இது நமது பெருமைமிகு ஜனநாயகத்திற்கு பெரும் கரும்புள்ளியை ஏற்படுத்திற்று.

இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலையைக் கடந்த 2002ஆம் ஆண்டு இன்றைய பிரதமர் மோடி, அன்றைய குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது நிகழ்த்தியதை நாடே அறியும். உலகச் சமூகமே அதிர்ந்துபோன அந்நிகழ்வுக்குப் பிறகுதான், ஒரு இஸ்லாமியரான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களை குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவித்து தன்னைப் புனிதராக்கிக் கொள்வதற்கான முயற்சியை பா.ஜ.க. எடுத்தது.

விண்வெளித்துறையில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தியவர், நமது தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்றெல்லாம் பிரச்சாரங்கள் அதற்கு பக்கபலமாக எழுந்தபோது, இந்த ஆரவாரத்தில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ்.-ன் இஸ்லாமிய இனஅழிப்பைக் கரைத்துவிடக்கூடாது என்று தான் இடதுசாரிகள் முடிவெடுத்தனர். இதன் விளைவாக, தோல்வி நிச்சயம் என்றாலும், வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின், இந்திய இராணுவப் படையின் பெண்கள் அணி கேப்டனாக பணியாற்றிய விடுதலைப் போராட்ட வீரர் லட்சுமி ஷேகலை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது.

கும்பல் வன்முறைக் குண்டர்களால் மாட்டுக்கறி உணவுப் பிரச்சினையில் சிறுபான்மையினர் அடித்துக் கொல்லப்படுவதும், தலித்துகள் நரவேட்டையாடப்படுவதும், அதனை கனத்த மவுனத்தின் மூலம் ஆமோதித்த மோடி, அமித்ஷா கூட்டாளிகளின் முந்தைய ஆட்சியில்தான் ஒரு தலித்தான ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தது. காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகள் இணைந்து புகழ்பெற்ற தலைவரான பாபு ஜெகஜீவன் ராவின் மகளான மீரா குமாரை வேட்பாளராக அறிவித்தன. ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். ஆனால், நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவராக காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.கே.ஆர்.நாராயணன் அவர்களே ஆவார். 90களில் மிக வீச்சோடு உலகமய, தனியார்மய, தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை அன்றைய காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தியபோது குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் “உலகமயம் என்கிற அதிவிரைவுச் சாலையில் ஏழை எளியவர்களும் பயணம் செய்ய வேண்டும். அவர்களை அழித்துவிடக் கூடாது” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார். ஆனால் ராம்நாத் கோவிந்தோ நாட்டின் குடியரசுத் தலைவராக ஆனபோதும், பூரி ஜெகநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்யும் உரிமைகூட அவருக்கும் அவரது துணைவியாருக்கும் மறுக்கப்பட்டதை நாடே அறிந்து அதிர்ந்தது.

நாடு முழுவதும் கும்பல் வன்முறையும், வெறுப்பு அரசியலின் வெப்பமும் பெரும் வீச்சாக கிளம்பிய போதும், தன்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக அமைதி காத்து நாட்டின் அரசியல் சாசன விழுமியங்களை காக்கும் தனது பொறுப்பை கைவிட்டவர்தான் ராம்நாத் கோவிந்த் .

இஸ்லாமியர்கள் படுகொலையானபோது, அதிலிருந்து தப்பிக்க இஸ்லாமியர் ஒருவரை வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க. தலித்துகள் வேட்டையாடப்பட்ட போது ஒரு தலித்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கியது. நாடு முழுவதும் வனத்தில் வாழும் பழங்குடி மக்கள் வனத்திலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கனிம வள வேட்டைக்காக வனங்களிலிலிருந்து பழங்குடிகளை வெளியேற்றி, சுமார் 45 லட்சம் பழங்குடிகளை உள்நாட்டிலேயே அகதிகளாக ஆக்கியது பா.ஜ.க. ஆட்சி. ஆனால், இப்போது பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவரான திரௌபதி முர்மு என்பவரை வேட்பாளராக்கி தனது “மாரிச”த்தனத்தின் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சொல்லி வைத்தாற்போல, ஊடகங்கள்தோறும் பா.ஜ-.க.வினரும், சங் பரிவாரத்தினரும் சமூக நீதி, சமூக நீதி என்று ஆரவாரம் செய்கின்றனர். ஆனால், உண்மை என்ன? சமூக நீதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்? சமூக நீதி தகுதியற்றவர்களை வேலைக்கு அமர்த்திவிடும், திறமைக்கு எதிரானது என்று ஆரவாரக் கூச்சலிட்டவர்கள்தான் இவர்கள். ‘மண்டல் குழு’ பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாது என்று டெல்லியை இரத்த களறியாக்கியது இந்த வானரப் படைதான்!

உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் இன்றுவரை தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களின் சட்டரீதியான இடஒதுக்கீடைப் பெற முடியவில்லை. இதற்காக பா.ஜ.க. அரசு செய்தது என்ன?

மருத்துவப் படிப்பில் நீட் தேர்வைக் கொண்டுவந்து சாதாரண ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவைச் சிதைத்தது. அதுவும் மருத்துவ மேற்படிப்பில் ஏற்கனவே இருந்த இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடை அமல்படுத்த மறுத்தது. உச்சநீதிமன்றம் சென்று அந்த உரிமையைப் பெற்ற பிறகே இன்று அத்துறையில் இடஒதுக்கீடு உறுதிப்பட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்புகளை, காலிப் பணியிடங்களை இன்றும் நிரப்பாது “வேலை தடையாணையை” தொடர்வதன் மூலம் ஒன்றிய அரசின் சுமார் 60 லட்சம் காலிப் பணியிடங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதான் பா.ஜ-.க. ஆர்.எஸ்.எஸ்.-ன் சமூக நீதி!

திரௌபதி முர்மு ஒடிசாவின் மயூர்பஞ் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பகுதிதான் புலிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போராடிய சந்தால் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்தான் இவர். முதலில் பள்ளி ஆசிரியராகவும், பின்பு அரசுப் பணியிலும் இருந்த அவர், அதிலிருந்து ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வின் பழங்குடிகளுக்கான துணை அமைப்பான பழங்குடி மோர்ச்சாவின் துணைத் தலைவராக இருந்து செயல்பட்டவர். இவர் ராய்ரங்பூரில் கவுன்சிலராக இருந்தபோதுதான், அப்பகுதியில் பழங்குடி மக்களுக்காகப் பணியாற்றி, தொழுநோயாளிகளுக்கு சேவை செய்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியாரும், அவரது இரண்டு குழந்தைகளும் ஜீப்பில் வைத்து சங் பரிவார குண்டர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டு உயிரிழந்தனர். ஆனால், பழங்குடி பெண்ணான இவர் இதற்காக மனம் பதைபதைக்கவில்லை. ஒரு சிறு கண்டனத்தைக் கூட இந்தச் சம்பவத்திற்கு எதிராக இவர் பதிவு செய்யவே இல்லை.

2000 -2009ல் ராய்ரங்பூரில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ.க. – பிஜூ ஜனதா தள கூட்டணி அரசில் இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தார். முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தனக்கு வீடு இல்லை, வங்கியில் சிறிய இருப்பு கொஞ்சமும், கொஞ்சம் நிலமும் இருப்பதாக அன்று அவர் அறிவித்தது அன்று பேசுபொருளாக ஆனது. பின்பு அவர் ஜார்கண்ட் மாநிலத்தின் கவர்னராகச் செயல்பட்டார். கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கொண்டு வந்த வன உரிமைச் சட்டம் பழங்குடிகளுக்கு மிகச் சிறந்த உரிமைகளை வழங்கியது. அந்தச் சட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் விதத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து வன வளத்தை அம்பானி, அதானிகளுக்கு பந்தி வைப்பதற்கு முயன்றது. அதற்காக, 45 லட்சம் பழங்குடியினர் வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 12 இலட்சம் பழங்குடியினருக்கு மேல் வாழ்விட பட்டா மறுக்கப்பட்டது. இந்தச் சட்டம் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சி வனப் பகுதிகளில் ஒரு உள்நாட்டுப் போரையே உருவாக்கியது. அந்தப் போரில் வனங்களின் இயற்கை வளங்களையும், விலங்குகளையும், வனங்களின் பாதுகாவலர்களான பழங்குடியினரையும் பலியிட்டுத் தனது கார்ப்பரேட் விசுவாசத்தை நிரூபித்தது பா.ஜ.க.

ஜார்கண்டில் சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம், சந்தல் பர்கானா குத்தகைச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்து முந்தைய காங்கிரசின் வன உரிமைச் சட்டத்திற்கு எதிராக அம்மாநில பா.ஜ.க. அரசு முயன்ற போது, வாய்மூடி நின்றவர் தான் திரௌபதி முர்மு. இதற்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடைபெற்ற போதும், அதனை நிறைவேற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் குடியரசுத் தலைவர் அதை திருப்பி அனுப்பி வைத்தார்.

சிறையில் இறந்துபோன, ஸ்டேன் சுவாமி கடந்த 40 ஆண்டுகளாக ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் வாழும் பழங்குடி மக்களுக்காக அரும்பாடுபட்டவர். அவர்களது சுயசார்பு பொருளாதார மேம்பாட்டிற்காக துணை நின்றவர். 1997ல் சமத்தா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பழங்குடியினரின் நிலங்களில் உள்ள கனிம வளங்களை எவரும் அபகரிக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு அளித்தது. ஆனால், ஜார்கண்ட் மாநில பா.ஜ-.க. அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து, பழங்குடியினரின் நல்ல வளமான நிலங்களை அரசே தனியார் நிறுவங்களுக்கு அளித்து கனிம வளங்களை அபகரிக்க வழி வகுத்தது. இதை எதிர்த்து தான் ஸ்டேன் சாமி தொடர்ந்து போராடினார். ஆனால் அன்றைய கவர்னர்.. இன்றைய குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு… இந்த பகல் கொள்ளைக்குப் பக்கபலமாக நின்றார். இதில் எங்கே இருக்கிறது சமூக நீதி?

சரி அது இருக்கட்டும் ஜார்கண்ட் முழுக்க முழுக்க பழங்குடிகள் நிறைந்த மாநிலம். பா.ஜ.க.தான் ஆட்சி செய்தது. ஆனால், பழங்குடி அல்லாத ரகுபார் தாஸை தான் முதல்வராக ஆக்கி அழகு பார்த்தது பா.ஜ.க. அப்போது எங்கே போனது சமூக நீதி? பா.ஜ.க.வின் இந்த குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் அறிவிப்பு நடைபெற உள்ள ஐந்து மாநிலத் தேர்தலோடு ஒட்டிப் பிணைந்தது. ஜார்கண்டை ஒட்டியுள்ள குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சந்தால் பழங்குடியினர் அதிக அளவில் வசித்து வருவதை கவனத்தில் கொண்டே இந்த காய் நகர்த்தல் நிகழ்ந்திருக்கிறது. இதற்குப் பெயர் சாணக்கியத்தனமல்ல. சகுனித்தனம்.

ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவர் அரசராகிவிடுவது இல்லை. ஆனால், அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகி விடுகிறது என்ற துருக்கிய பழமொழிதான் நினைவில் நிழலாடுகிறது!

ஆனால், மறுபக்கத்திலோ, எதிர்க்கட்சிகள் அறிவித்த குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா, இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஒன்றிய அமைச்சராக இருந்து அனுபவம் பெற்றவர், தான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நின்று செயல்படுவேன் என்று உறுதியளித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து இவரை ஆதரிப்பதன் மூலம் பா.ஜ.க.வின் அடாவடி அரசியலுக்கு முடிவு கட்டிட ஒரு ஆரோக்கியமான பாதையை ஏற்படுத்தியுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளின் மூலம் அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் நடத்தப்படும் தேர்தல் ஆகும்.

இந்திய ஜனநாயகத்தைப் பலப்படுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் விதத்தில் உரிய மாற்றங்கள் வேண்டும் என்ற கோரிக்கையும் இன்றைய ஜனநயாகத்தை வலுப்படுத்தும் வாதமே ஆகும். எனவே, குடியரசுத் தலைவர் தேர்தல், வெற்றி தோல்விக்கான ஒரு தேர்தல் அல்ல. நாட்டின் கண்ணியம், ஜனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மை ஆகியவற்றைக் காக்கும் ஓர் உன்னதப் போர்! ஜனநாயகமா? மதவெறி சர்வாதிகாரமா? என்பதற்கான போர்! அதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ள இது மிகச் சரியான தருணம்.

தொடர்புக்கு: 94444 81703

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button