தமிழகம்

குடியரசுத் தலைவரின் தேர்தல் பரப்புரை!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரைத் தொடக்கி வைத்து குடியரசுத் தலைவர் உரையாற்றியுள்ளார். பழங்குடியின சமூகத்தில் இருந்து நாட்டின் உயர்ந்த பெண் என்ற பெருமை பெற்றவர் ஆற்றும் முதல் உரை அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடக்கி வைத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலில் நொறுங்கிப் போன சிறு, குறு தொழில்களுக்குப் புத்துயிரூட்டும் செய்தி ஏதும் இடம்பெறவில்லை. வேலையில்லாதோர் எட்டு சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவது குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. பன்னாட்டு குழும நிறுவனமான அதானி குழமங்களின் பங்கு மதிப்பு ஊதிப் பெருக்கப்பட்டதும், கணக்கியல் மோசடிகளும் வெளியாகியுள்ள நிலையிலும் நவதாராளமய பொருளாதார கொள்கையின் தீய விளைவுகள் குறித்து குடியரசுத் தலைவர் உரை கவலைப்படவில்லை.

பல மாநிலங்களில் கூட்டாட்சி கோட்பாடுகள் தகர்க்கப்படும் முறையில், ஆளுநர்கள் செயல்படுவது குறித்து கவனம் செலுத்தவில்லை. இது போன்ற நிகழ்கால நிலவரத்தைப் பிரதிபலிக்காத குடியரசுத் தலைவர் உரை, அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது போன்றவைகளைக் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்து, அடிமைத்தனத்தின் அடையாளங்களை முற்றிலுமாக அகற்றிவிட்டதாகப் பெருமை பேசுகிறது. நாட்டு மக்கள் வாழ்க்கை நிலைகளைக் கருத்தில் கொள்ளாத குடியரசுத் தலைவர் உரை, அடுத்த ஆண்டு வரும் தேர்தல் பரப்புரை தொடக்கவுரையாக அமைந்துள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button