கிரீஸ் நாட்டில் எழுச்சிமிகு போராட்டங்கள்
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், சுய தொழில் புரிவோர், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் பேரணி:
அனைத்து தொழிலாளர் போராட்ட முன்னணி All-Workers Militant Front (PAME) 86 வது தெசலோனிகி சர்வதேச வர்த்தக கண்காட்சி திறப்பு விழா நடைபெறும் தெசலோனிகியில், பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் பழைமைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்திய மாபெரும் பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர், விவசாயிகள், ஓய்வூதியம் பெறுவோர், இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
“சமகால உரிமைகளுக்கான போராட்ட அமைப்பு ” “Organization and Struggle for contemporary rights” என்ற முழக்கத்தின் கீழ் தெசலோனிகி நகரத்திலிருந்தும், வடக்கு கிரீஸின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள், “பழமைவாத அரசாங்கத்திற்கு புதிய ஜனநாயகம்” (ND) என்ற போர்க்குணமிக்க செய்தியை அனுப்பியுள்ளனர்.
பேரணியின் முன்னணியில், “மலமதினா” ஒயின் தொழிற்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள், பச்சை நிற டி-சர்ட் அணிந்து, மிகப்பெரிய பதாகையை ஏந்தியபடி, சமீபத்திய பணிநீக்கங்களைத் திரும்பப் பெறவும், கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
ஒய்.எம்.சி.ஏ சதுக்கத்தில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், “தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரே குரல், ஒரே முஷ்டி” போன்ற பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் நகரின் மையப்பகுதி வழியாக ஊர்வலமாகச் சென்றனர். அதே நேரத்தில், மக்களைப் பயமுறுத்தும் முயற்சியில் மற்றும் நகரத்தில் அச்சம் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் முயற்சியில், மிட்சோடாகிஸின் அரசாங்கம் 5,000 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அனுப்பியது. எனினும், மக்கள் எழுச்சியை ஒடுக்க முடியவில்லை.
பேரணியில் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் (KKE) CC பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் கௌட்சௌம்பாஸ் தலைமையிலான கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஏதென்ஸ் நகரில் இலவச கல்விக்காக மாணவர் போராட்டம்:
ஏதென்ஸ் நகரின் மையப் பகுதியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி செப்டம்பர் 8 அன்று நடைபெற்றது.
உயர்கல்வி நிறுவனங்களில் தீவிரமாகி வரும் அடக்குமுறைகளை மாணவர்கள் தங்களின் போராட்டம் மூலம் பகிரங்கமாகக் கண்டனம் செய்தனர். நிறுவனங்கள் போல் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களைக் கண்டிப்பது மற்றும் தங்களின் கல்விக்கான உரிமைகளை நிலைநிறுத்துவது ஆகியவையே இப்போராட்டத்தின் நோக்கமாகும்.
மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம், இரவு நேர திருடனைப் போல், பிறர் அறியா வண்ணம், போலீசாரைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை பெரும்பாலான மாணவர்கள் கண்டித்துள்ளனர். உடனடியாகப் போலீஸாரைத் திரும்பப் பெறவேண்டும் என்று மாணவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
பல்கலைக்கழக போலீஸ் அமைப்பை ஸ்தாபிக்க அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள 50 மில்லியன் யூரோவை மாணவர்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்றப் பயன்படுத்த வேண்டும். பேராசிரியர்கள் நியமனம், மாணவர் குடியிருப்புகள், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றுக்காக அந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த எதேச்சதிகார, அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான ஒரு போராட்டத்தை மாணவர்களும் இளைஞர்களும் மேற்கொள்ளவேண்டும் என்று கட்சி அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு மாணவர் போராட்டம் குறித்து கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கருத்து தெரிவித்துள்ளது