கியூபா மீது அமெரிக்காவின் மறைமுக போர்
கியூப புரட்சியின் மீது அமெரிக்காவின் மறைமுகப் போர் தொடருகிறது. மதச் சுதந்திரத்தை முடக்கும் நாடுகளின் பட்டியல் ஒன்றை அமெரிக்கா தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனா, ரஷ்யா, ஈரான், பர்மா, வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் கியூபாவும், நிக்காரகுவாவும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் அடுத்தடுத்த அரசாங்கங்கள் கியூபா மீது தொடர்ந்து விதித்து வரும் தடைகள் போதாதென்று தற்போது ஜோ பிடன் அரசாங்கமும் கியூபாவை மேலும் ஒரு குற்றப் பட்டியலில் சேர்த்துள்ளது. மதச் சுதந்திரத்தை முடக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபா சேர்க்கப்பட்டுள்ளதை அமெரிக்க உள்நாட்டு விவகாரத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கென் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து, கியூப வெளியுறவுத் துறை அமைச்சர் ப்ருனோ ரோட்ரிகுஷ் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உடனடியாக கருத்து தெரிவித்துள்ளார். “கியூப மக்களுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பும் அமெரிக்காவின் மோசமான கொள்கையைத் தொடர்ந்து தற்காத்துக் கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கம் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறது. கியூபாவில் மதச் சுதந்திரம் உள்ளது என்பது கியூபாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். கியூபா குறித்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் கொண்டிருக்கும் மதிப்பீடும் அதையே உறுதிப்படுத்துகிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா தன்னிச்சையாகத் தயாரித்துள்ள இந்தப் பட்டியலில் கியூபா சேர்க்கப்பட்டுள்ளது சாதாரணக் குறியீடு அல்ல. ஒவ்வொரு முறையும் இது போன்ற பட்டியலில் சேர்க்கப்படுவது, அந்நாட்டு பொருளாதாரத்திற்கு எதிரான தடை நடவடிக்கையை உணர்த்துகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபா சேர்க்கப்பட்ட போது, அந்நாட்டின் நிதி நிலைமை மீது மிக மோசமான தாக்கத்தை அந்த நடவடிக்கை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற நடவடிக்கைகள், அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் தனித்த நடவடிக்கைகள் அல்ல; கியூப புரட்சிக்கு எதிரான அமெரிக்காவின் மறைமுக போர்!