காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரின் வரம்பு மீறிய செயல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கர்நாடக மாநில அரசு காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும் எதிராக மேகேதாட்டு அணை கட்டுவதில் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது.
காவிரி நதி நீர் பகிர்வில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பு மீதான மேல் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவில் 14.75 டிஎம்சி குறைத்தும், பெங்களூரு பெருநகரத்தின் குடி தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு 4.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக ஒதுக்கீடு செய்தும் 2018 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. மேலும் ஒரு மாநிலத்தில் ஓடும் ஆற்றுத் தண்ணீர் அந்த மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல, அது தேசத்தின் சொத்து என்று தெளிவுபடுத்தி, காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்புள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரி நீராதாரத்தில் கர்நாடக அரசு எந்தவொரு மாறுதலும் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இறுதியானது என்று கூறிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்தது. இதன் 16-வது கூட்டம் வரும் 17.06.2022 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேகேதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு ஆரம்ப நிலையில் இருந்து ஆட்சேபணையும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர் கூடி எடுத்த முடிவுகளை ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சரிடம் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் குழு பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் நேரில் தெரிவித்துள்ளது.
இவைகள் அனைத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறியிருப்பது ஆணையத்தின் அதிகார வரம்பை மீறிய செயலாகும். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆணையம் அதன் நிகழ்ச்சி நிரலில் இருந்து மேகேதாட்டு அணை குறித்த பொருளை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.