காவிரி படுகை பகுதியில் நிலக்கரி சுரங்கமா? ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
கடலூர் மாவட்டம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூன்று நிலக்கரி சுரங்கங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கு வேளாண் நிலங்களை வழங்கிய விவசாயிகள் அதற்குரிய இழப்பீடும், மறுவாழ்வுக்கான ஏற்பாடும் இல்லாமல் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து புலம் பெயர்ந்து சென்று, சொல்லவொணாத் துயரத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காவிரி படுகைப் பகுதியில் படிப்படியாக தொடர்ந்து மேலும் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டுமொத்த டெல்டா பகுதியினையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளதுடன் கடுமையான பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த 2020 பிப்ரவரி மாதம் காவிரி படுகை பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பது தொடர்பான, ஒன்றிய அரசு நடத்தி வரும் ஆய்வுகளைத் தடுக்க இயலாது என அஇஅதிமுக அரசு கூறிவிட்டது. இப்போதும் ஆய்வுப் பணி நடப்பதால், சுரங்கம் அமைக்க அனுமதி கொடுத்து விட்டதாக கருதக் கூடாது என்று விளக்கம் அளிக்கப்பதும் குழப்பம் ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை திருச்சி முதல் நாகை வரை ரூ1000 கோடி செலவில் வேளாண் தொழில் பெருந்தடம் – திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தபடும் என்ற செய்தி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் விழுந்த பேரிடியாக அமைந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு காவிரி படுகை பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிகளுக்கான ஆய்வுப் பணிகளும் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு வலுவாக அழுத்தம் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.