காவல்துறை அத்துமீறல் தொடர்கிறது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன் (45), இவர் மனைவியுடன் கருப்பூரில் வசித்து வருகிறார். இவரையும், இவரது மனைவி அம்சலாவையும் கடந்த 08.01.2022 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்துறையினர் விசாரணைக்காக அடித்து, இழுத்துச் சென்றுள்ளனர்.
பிரபாகரன் – அம்சலா தம்பதியை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் தனியிடத்தில் வைத்து கடுமையாகச் சித்தரவதை செய்து திருட்டு வழக்கை ஏற்கும்படி நிர்பந்தித்துள்ளனர். காவல்துறையின் கடுமையான தாக்குதலில் பிரபாகரன் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு, உயிராபத்தான நிலையில் பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, பிரபாகரன் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு அவரது உடல்நிலை படுமோசமானதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அங்கு பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூரம், இப்போது சேந்தமங்கலம் காவல்துறையால் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் அதிகார அத்துமீறல் தொடர்வதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த சம்பவம் வெளிவந்தவுடன் சில காவலர்கள் மீது தற்காலிக பணிநீக்கம் என்ற மென்மையான நடவடிக்கை மேற்கொண்டிருப்பது போதுமானது அல்ல. அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
பிரபாகரன் – அம்சலா ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற்று, அம்சலாவின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதுடன், காவல்துறையின் அதிகார அத்துமீறல்களை தடுக்கும் நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.