கார்ப்பரேட் நலன் காக்க, உழைக்கும் மக்களுக்கான மானியங்களை அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க
கே. முருகன்
நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ‘இலவசம்’ தவறு என்று கூறி, விவாதத்தைத் தொடக்கி வைத்துள்ளார். இந்த விஷயம் நாடு முழுவதும் ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது. அதுவும், பாஜக தலைவர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான உபாத்யாயா என்பவர் இலவசங்கள் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் திருவாளர் மோடியின் கருத்தை ஆழ்ந்து பார்க்க வேண்டும்.
உபாத்யாயாவின் இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் விவாதம் நடத்தத் தொடங்கியது. இதில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் உபாத்யாயா, உணவு பாதுகாப்பு சட்டப்படி பொது விநியோகத் திட்டத்தில் ஏழைகளுக்கு மானிய விலையில் அரிசி வழங்குவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மின்சாரம், விவசாய விளைபொருள் ஆதரவு விலை, ஊட்டச்சத்து குறைபாடு களைதல் ஆகிய திட்டங்களுக்கு அரசு வழங்கும் மானியங்களை இலவசம் என்று தனது வழக்கில் பட்டியலிட்டு, அவைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் வரிச்சலுகை, வங்கிக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் அரசாங்கத்தால் வழங்கப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை இலவசங்கள் என்று பட்டியலில் கூறாமல் விட்டது அவரது உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், இலவசமாக/குறைந்த விலையில் நிலம், தண்ணீர், வரிச்சலுகை, பல லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி – இவைகளை இலவசமாகப் பார்க்காமல் ஏழைகளுக்கு வழங்கும் நலத்திட்டங்களை இலவசம் என்று பட்டிலிட்டுள்ளது பா.ஜ.கவின் உள்நோக்கத்தை அம்பலமாக்கியது.
பா.ஜ.கவின் பொருளாதார கொள்கை காரணமாக ஏற்பட்டுள்ள தோல்விகளை மறைக்கவும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ஜனநாயக, மதசார்பற்ற தன்மையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் திசை திருப்பி மக்களின் கவனத்தை மாற்றவும், அவ்வப்போது இது போன்றதொரு விவாதத்தை உருவாக்குதில் மோடி வல்லவர் என்பதை 2014 ஆம் ஆண்டு
முதல் நாம் பார்த்து வருகிறோம்.
உலக பொருளாதாரத்தில் 6வது இடம் பெற்றுள்ளதாக பா.ஜ.க பெருமை பேசி திரியும் நமது நாட்டில், செல்வந்தர்கள் (60 பில்லியனர்கள் – கோடீஸ்வரர்கள்) மேலும் மேலும் செல்வந்தர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் அதிகரித்து வருவது தொடர்கதை ஆகிவிட்டது. பா.ஜ.க சொல்லும் ‘வல்லரசு இந்தியா’ உலக வறுமைக்கோடு அட்டவணைப் பட்டியலில் 116 நாடுகளில் 101வது இடத்தில் உள்ளது.
செல்போன் எளிமையாகக் கிடைக்கிறது என்று முதலாளித்துவ ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்ற நமது நாட்டில்,1991ல் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயம் (LPG) கொள்கையால் ஏழை, எளிய உழைக்கும் மக்களின் துன்பம் அதிகரித்துள்ளது. 8 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் நிலைமை மேலும் மோசமடைந்து உள்ளது. பாஜக அரசு 2019ஆம் ஆண்டு பெரு நிறுவனங்களுக்கு செய்த வரி குறைப்பால் 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளில் 1.84 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இதனால் 20 அமைச்சகம் மற்றும் துறைகளுக்கு நிதி இரட்டிப்பாக்க முடியவில்லை என நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழுவின் 2022 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதியால் வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் வேலை, உணவு தானியம் ஆகியவற்றை கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் அளித்திருக்க முடியும். இதைச் செய்யாததன் விளைவு – நகர்புற அமைப்புசாரா தொழிலாளர்களும், கிராமப்புறத்தில் உள்ள மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
சுருங்கி வரும் வேலை வாய்ப்பு, குறைந்த ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாத நிலைமை என்று அனைத்து தாக்குதல்களுக்கும் இடையில் சாதாரண உழைக்கும் மக்களால் உருவானதே நாட்டின் செல்வ வளங்கள் என்பதைப் பா.ஜ.க உணராமல், சட்டப்படியான தற்போதைய அரசு மானியங்களையும் ரத்து செய்வதற்குத் துடிக்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரிகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான உற்பத்தி வரிகள் ஆகியவற்றில் சாதாரண மக்களின் பங்கு 0.5 முதல் 3.௦ சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையா?.
பா.ஜ.கவின் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி 2017 ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சொத்துவரியை ரத்து செய்ததினால் 2021-22ல் மட்டும் 1.53 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பிஸ்கட் என்று 2.56 லட்சம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரிச் சலுகையை அறிவித்தார்.
மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறையில் நிறுவனங்களில் வாங்கியிருந்த கடன் 10 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 7 வருட பாஜக ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செய்த சொத்து வரிச்சலுகையால் நடப்பு நிதி ஆண்டில் ஒன்றிய அரசு பட்ஜெட்டின் நிதிப் பற்றாக்குறை 6.7 சசதவீதமாகும்.
நாட்டில் பொது விநியோக திட்டம் மற்றும் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்கு 2.6 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆனால், கார்ப்பரேட் வரிச்சலுகைகள் மற்றும் வங்கிக் கடன் தள்ளுபடி ஆகியவை 13.9 லட்சம் கோடி ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இராணுவ துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. சுகாதார கட்டமைப்பு, ஏழை மக்களுக்கான சுகாதார மேம்பாடு ஆகிய திட்டங்களுக்கு ஆப்பிரிக்க சப் சகாரன் நாடுகளைவிட மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது.
கியூபா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில், இடதுசாரி கட்சிகள் ஆட்சியில் அனைவருக்கும் கல்வியும், சுகாதாரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதாக கூறிவரும் பா.ஜ.க வின் முதலாளித்துவ கொள்கையில் கல்வியும் சுகாதாரமும் ஏழைளுக்கு எட்டாக்கனியாகி உள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு பெறும் உரிமை ஆகியவை உழைக்கும் மக்களின் சமூக உரிமைகளே! அவை சலுகைகளோ, இலவசங்களோ அல்ல! இவை யாவும் இடதுசாரி கட்சிகளின் வீரம் செறிந்த போராட்டங்களின் விளைவாக ஏழை மக்களுக்குக் கிடைக்கப் பெற்றவை ஆகும்.
சமூக நலத்திட்டங்களை நிறுத்திவிட்டு, உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யத் துடிக்கும் பாசிச பா.ஜ.கவின் செயல்திட்டத்தை என்ன விலை கொடுத்தேனும் முறியடிப்போம்! களம் புகுவோம் தோழர்களே!
(ஆதாரம்: இணையதள தகவல்கள்).
தொடர்புக்கு: 7603930397