காங்கிரசின் இரட்டை வேடம் கலைந்தது! சத்தீஸ்கர் மாநிலத்தில் தடையை மீறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதயாத்திரை தொடங்கியது!
காங்கிரசின் இரட்டை வேடம் கலைந்தது: சத்தீஸ்கர் மாநிலத்தில், (அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையிலும்) தடையை மீறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதயாத்திரை தொடங்கியது!
இந்தியாவின் தென் மாநிலங்களில் “பாரத ஒற்றுமை யாத்திரை” எனும் முழக்கத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசி மகாசபையின் சார்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மணிஷ் குஞ்சம் தலைமையில் ஆதிவாசி மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 108 கிலோமீட்டர் தொலைவு பாதயாத்திரை நடத்த அம்மாநில அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
ஆதிவாசி மக்கள் பாரதத் தாயின் மக்கள் இல்லையா? அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்தில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்? பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் சூழலில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று (20.09.2022), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மணிஷ் குஞ்சம் மற்றும் ஆனி ராஜா தலைமையில் ஆதிவாசி மகாசபையின் பாதயாத்திரை (அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையிலும்) தொடங்கியது.