கள்ளக்குறிச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட குறவர்களுக்கு நடந்தது என்ன?
நடராஜன் சுந்தர்
பிபிசி தமிழுக்காக
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து பேரில் மூவரை குற்ற ஆதாரங்கள் அடிப்படையில் கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மூலமாக கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதி நகைக்கடைகளின் 38 சவரன் நகையை மீட்டதாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தர்மராஜ் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் நவம்பர் 17ஆம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபரான சக்திவேல் அன்றிரவு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை கள்ளக்குறிச்சி கொங்கராபாளையம் கிராமத்தில் சென்று பிபிசி தமிழ் சந்தித்தது.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி அன்று இரவு சுமார் 11.30க்கு மேல் வீட்டிற்கு திடீரென சென்ற காவல் துறையினர் கணவர் பிரகாஷ் மற்றும் உறவினர்கள் செல்வம் மற்றும் தர்மராஜ் ஆகிய மூவரை எந்த காரணமும் தெரிவிக்காமல் அடித்து அரை நிர்வாணத்துடன் இழுத்துச் சென்றதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி கூறுகிறார்.
“அடுத்த இரண்டு நாட்கள் காவல் துறையினர் அவர்களை எங்கு வைத்து விசாரணை செய்கிறார்கள் என்பது தெரியாமல் சின்னசேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களை தேடி அலைந்தோம். பிறகு அவர்களை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம்.
யாரிடம் உதவி கேட்பது என்பதும் தெரியவில்லை. யாரிடம் பேசுவது என்றும் தெரியவில்லை. எங்களுக்கு உதவி செய்யவும் எவரும் இல்லை,” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார் புவனேஸ்வரி.
குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தினர்
இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை (நவம்பர் 17) அன்று மூன்றாவதாக நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சக்திவேலை நகைகள் வேறொரு நபரிடம் கொடுத்ததாக ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தி காவல் துறையினரால் கடுமையாக தாக்கியதாக சக்திவேலின் மாமியார் இளஞ்சியம் தெரிவித்தார்.
“நிறைமாத கர்ப்பிணியான எனது மகள் ஒருசில நாட்களில் குழந்தை பெற்றெடுக்கபோகும் இந்த சூழலில் அவரின் கணவர் மீது தவறாக குற்றம் சாட்டி அவரை கைது செய்துள்ளனர்.
எதற்கு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்? குறவர்கள் என்றால் திருடர்களா? எந்த குற்றம் நடந்தாலும் குறவர்களை குற்றம் சாட்டுகின்றனர். எங்கு சென்றாலும் எங்களது ஆட்களை பிடிக்கின்றனர். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்களும் வியாபாரம் பார்த்து, கூலி வேலை செய்து தான் வாழ்கிறோம். தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே எங்களால் வாழ்க்கையை ஓட்ட முடியும்,” என்றார் இளஞ்சியம்.
இந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்று விடுவிக்கப்பட்ட செல்வம் மற்றும் பரமசிவத்தை பிபிசி தமிழ் சந்தித்து பேசியது.
கண்ணை கட்டிவிட்டு காரில் கூட்டிச் சென்றனர்
அப்போது பேசிய செல்வம், “நவம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சின்ன சேலத்தில் உள்ள எனது பேரனின் பிறந்தநாள் விழாவிற்காக மகள் புவனேஸ்வரி வீட்டிற்கு சென்றிருந்தேன். பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு அங்கேயே தூங்கிவிட்டேன். அப்போது இரவு திடீரென கூட்டமாக வந்த காவல் துறையினர் என்னையும் மருமகன் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் ஆகிய மூவரையும் எதுவும் சொல்லாமல் தனி தனி காரில் ஏற்றினர்.
காரில் எங்களது கண்களை கட்டிவிட்டு அன்று இரவில் இருந்து காரில் வைத்து சுற்றிக்கொண்டே இருந்தனர். எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று எதுவுமே தெரியவில்லை. பிறகு காட்டுப் பகுதியில் எங்களை அடிப்பதற்காக அழைத்து சென்றனர். ஆனால் அங்கே மழை வரவும் எங்களை அங்கிருந்து வேறொரு பகுதிக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் எங்கள் மூவரை ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அந்த திருமண மண்டபத்தில் எங்கள் மூவரையும் கட்டி வைத்து உதைத்தனர். நாங்கள் செய்யாத தவறை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். இதை ஒப்புக்கொண்டால் மட்டுமே உங்கள் அனைவரையும் விடுவோம் என்றனர். மறுத்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அவர்கள் அடித்த அடியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மறுகணம் அவர்களை அடிக்கும் அடியை பார்க்க முடியவில்லை. இதைப்பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளும் மனநிலைக்கு எங்களை ஆளாக்கினர்,” என்றார் அவர்.
“இதில் தர்மராஜ் என்பவரை தனியாக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். அவர் கத்தும் அலறல் சத்தம் மட்டும் தான் எங்களுக்கு கேட்டது. கண்கள் கட்டப்பட்டு இருந்ததால் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.” என்றார்.
மேலும் அலறல் சத்தத்தைக் கேட்டுத் துடிதுடித்துப் போனதாக கூறுகிறார் செல்வம்.
“மேற்கொண்டு என்னுடன் இருந்தவர்கள் கையை சுவரில் வைக்கச் சொல்லி கேட்டுள்ளனர். அந்த கை ரேகையை வைத்து, அவர்கள் கொள்ளை அடித்ததாக கூறப்படும் வீட்டில் கை ரேகை இருந்ததாக அடித்தனர். இந்த கை ரேகையைக் கொண்டு மற்ற பகுதிகளில் உள்ள வழக்குகளையும் உங்கள் மீது போட்டு தலையெழுத்தை மாற்றுவோம். ஆகவே நாங்கள் சொல்வதை செய்யவேண்டும் என்று கூறி மிரட்டினர்.
இதனைத் தொடர்ந்து நாங்கள் நகை கடையை காட்டுவோம், நீ தலையை மட்டும் ஆட்டினால் போதும் என்றனர். நாங்கள் எதற்கு செய்யாத ஒன்றை செய்ததாக கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்யவேண்டும். எங்களிடம் கேள்வி எழுப்பக்கூடாது என்று கூறி திட்டினர்.” என்று வேதனையுடன் தெரிவித்தார் செல்வம்.
என்ன சொல்கின்றனர் காவல்துறையினர்?
நவம்பர் 14ஆம் தேதி இரவு மூன்று பேரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குடும்பத்தினர் கூறியது குறித்து கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலக்ஷ்மியிடம் பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஞாயிற்றுக்கிழமை இரவு நாங்கள் அவர்களை அழைத்து செல்லவில்லை,” என்று அவர் தெரிவித்தார்
“இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்கள் நவம்பர் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 3 மணிக்கு பிரகாஷ், தர்மராஜ் மற்றும் செல்வம் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி சின்னசேலம் ரயில்வே கேட் அருகே விசாரணைக்காக அழைத்து வந்தோம். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அன்று இரவு சக்திவேல் மற்றும் பரமசிவம் ஆகிய இருவரையும் இரவு சுமார் 8 மணிக்கு விசாரணைக்காக அழைத்து வந்தோம். விசாரணைக்கு பிறகு இதில் இருவரை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம்,” என்று தெரிவித்தார்.
விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றதாகவும், கடுமையாக தாக்கியதாகவும் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் கூறியது குறித்து அவரிடம் கேட்டபோது,
“விசாரணைக்கு அழைத்து சென்ற நபர்களை கண்ணை கட்டி அழைத்து செல்லவில்லை. மேலும் கண்ணை கட்டினால் அவர்களால் எப்படி நகை கடைகளை அடையாளம் காட்ட முடியும். அவர்களது கையில் லாக்கப் மட்டுமே செய்திருந்திருந்தோம். அழைத்து வரப்பட்ட நபர்கள் முக்கியம் என்பதால் விசாரணையின் போது குற்றவாளி தப்பித்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே கைகளில் லாக்கப் போடப்பட்டது. காவல் நிலையத்தில் அவர்களது கைகளில் லாக்கப் செய்யப்படவில்லை. பொதுவாக விசாரணை கைதிகளுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் மட்டுமே பின்பற்றப்பட்டன. மேலும் அவர்கள் மீது எந்த விதமான துன்புறுத்தலும் காவல் துறை தரப்பில் கொடுக்கப்படவில்லை,” எனக் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலைவர் ராஜா கூறுகையில், “இவர்கள் மீது வேண்டுமென்றே பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று பேரையும், அடுத்ததாக செவ்வாய்க்கிழமை மீண்டும் இருவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து மாஜிஸ்ரேட் அன்று இரவு மூன்று காவல் நிலையங்களில் ஆய்வு செய்தார்.
பின்னர் அன்று நள்ளிரவு இரண்டு நபர்களை விட்டுவிட்டனர். அதில் மீதமிருந்த மூன்று நபர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் மறுநாள் மூன்று பேரை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது போல ஆவணங்களை தயார் செய்தனர். இந்த மூன்று நபர்களில் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் இருவரை பிற்பகலும், மூன்றாவது நபரான சக்திவேலை இரவும் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தினர். இவர்கள் உடம்பு முழுவதும் அடி இருக்கிறது. அதை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளனர். அதை கவனத்தில்கொண்டு அவர்களுக்கு முதலுதவி அளித்து நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிட்டார்,” என்று கூறினார்.
‘பழங்குடி மக்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் சுமத்தப்படுகின்றன’
இந்த விவகாரம் குறித்து சமூக செயல்பாட்டாளர் முருகப்பன் தெரிவித்ததாவது, “இதுபோன்ற குற்ற வழக்குகளில் காவல் துறையினர் பழங்குடியின மக்களைத்தான் உள்ளே கொண்டுவருகின்றனர். அதிலும் குறிப்பாக குறவர், இருளர், ஒட்டன் என்ற மூன்று பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர்களைதான் காவல் துறையினர் பொய் வழக்குகளில் கைது செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களை காவல் துறையினர் கொண்டு சென்று அடித்தாலோ, கொன்றாலோ இவர்களுக்காக கேட்க யாரும் வர மாட்டார்கள்.
இதனை சாதகமாக பயன்படுத்தி பொய்யான வழக்குகளை இவர்களை மீது போடுகின்றனர். பல திருட்டு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளைக் காவல் துறையால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும். மேலும் பல வழக்குகளில் யார் திருடியது, எவ்வளவு திருடியது என்று காவல் துறைக்குத் தெரியும். அதில் காவல் துறையினர் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்காக இதுபோன்று பழங்குடியின மக்களை அழைத்து சென்று பொய்யான வழக்குகளை அவர்கள் மீது போடுகின்றனர்,” என்கிறார் முருகப்பன்.
உளுந்தூர்பேட்டை கிளை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டவர்களில் ஒருவரான சக்திவேலுக்கு நவம்பர் 18ஆம் தேதி மாலை நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி காவல் துறையினர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அங்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.