கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி
கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகாவில் பதவிகாலம் நிறைவுபெற்ற 5 நகராட்சிகள், 19 நகர சபைகள், 34 பேரூராட்சிகள் ஆகிய 58 நகர உள்ளாட்சிகளின், 1,185 வார்டுகளுக்கு பொதுத்தேர்தல்; 9 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதுபோலவே 57 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது.
பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. சிக்கமகளூரு, கதக் பெட்டகேரி, ஹெப்பகோடி ஆகிய மூன்று நகராட்சிகளை பாஜக, தனி பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.
ஹொஸ்பேட், ஷிரா நகராட்சிகளில் காங்கிரஸ் அதிக வார்டுகளில் வென்றுள்ளது. மொத்தமுள்ள 19 டவுன் சபைகளில் காங்கிரஸ், அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. டவுன்சபைகளில் சந்தாபுராவை பாஜகவும், பிடதியை மஜதவும் கைப்பற்றியுள்ளன.
தேர்தல் நடந்த 34 பேரூராட்சிகளில் 386 பதவிகளிலும் காங்கிரஸ் அதிக இடங்கள் வென்றுள்ளது. பாஜக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுயேச்சைகள் 3வது இடத்திலும்; மஜத, நான்காம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான சிக்காவியின் பங்காபுரா பேரூராட்சியின் 23 வார்டுகளில், 14 ல் காங்கிரஸ் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெறும் 7ல் மட்டுமே வென்றது.