கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 22 வது சர்வதேச கூட்டம்: பிரதான நெறிமுறைகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும்
கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 22 வது சர்வதேச கூட்டம் கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் கடந்த மாதம் 27 முதல் 29 வரை நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசிய செயலாளர் டாக்டர் கே நாராயணா இந்தச் சர்வதேச நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ரஷ்ய – உக்ரைன் போர், உலகளாவிய பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் வேலையின்மை, விலையேற்றம், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள், பொது சுகாதாரம் என்று பிரச்சனைகள் தீவிரமாகி, உலக மக்களைத் தேச எல்லைகள், மொழி, மதம், இனம், சாதி என்ற பாகுபாடுகள் இன்றி பாதித்து வருகிறது. இந்தச் சூழலில், பல்வேறு நாடுகளைச் சார்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் பிரச்சனைகளை எதிர்கொண்டு முறியடித்து, சோசலிசத்தை நோக்கி முன்னேற, பரஸ்பரம் தங்கள் நடைமுறை அனுபவங்களை இந்தக் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்; வருங்கால கடமைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர். இந்த நிகழ்வின் முக்கியத்துவம் கருதி ‘ஜனசக்தி’ ( நவ 6 – 12 ) இதழில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. அதன் நீட்சியாக, இந்தக் கூட்டத்தில் வகுத்தளிக்கப்பட்ட பிரதான நெறிமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தகவல் பின்வருமாறு:
1) அமைதியை வலியுறுத்தியும், ஏகாதிபத்திய போர், அணு ஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதம், அந்நிய இராணுவ தளங்கள், நேட்டோ உள்ளிட்ட ஏகாதிபத்திய இராணுவ கூட்டமைப்புகளுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி மக்களை அணிதிரட்ட வேண்டும்.
‘போர் வேண்டாம்’ எனும் முழக்கத்தை முன்வைத்து செப்டம்பர் 21 ஆம் நாளை உலக சமாதான தினமாகக் கொண்டாட வேண்டும்.
உலக சமாதான கழக கூட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்.
உக்ரைன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வலியுறுத்தும் ஆக்கப்பூர்வமான மற்றும் நடைமுறைக்குப் பொருத்தமான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.
2) நாம் எற்றுக் கொண்டுள்ள இலட்சியங்கள் மற்றும் கோட்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இளைஞர்களின் தீவிர அரசியல் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக,
ஆகஸ்ட் 12 – சர்வதேச இளைஞர் தினத்தைக் கொண்டாட வேண்டும்.
நவம்பர் 17 – சர்வதேச மாணவர் தினத்தைக் கொண்டாட வேண்டும்.
3) மார்க்சிய லெனினிய தத்துவார்த்த கோட்பாடுகளையும், அதன் நடைமுறைக்கான கருத்தாக்கங்களையும், சோஷலிச விழுமியங்களையும் பரஸ்பரம் ஆய்ந்து அறிந்து, புரிந்து கொள்ள, பரப்புரை செய்திட கருத்தரங்கங்களையும், இன்ன பிற நிகழ்வுகளை நேரடியாகவும், இணைய வழி மூலமாகவும் நடத்த வேண்டும். இந்த இலக்கை அடைய, பின்வரும் நினைவேந்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ளலாம்:
சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டதன் நூற்றாண்டு கொண்டாட்டம்.
கார்ல் மார்க்ஸின் 140 வது நினைவு நாள் அனுசரிப்பு (மார்ச் 14, 1883)
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிரசுரம் செய்யப்பட்டதன் 175 ஆம் ஆண்டு கொண்டாட்டம் (பிப்ரவரி 21, 1848)
கியூபாவில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 முதல் 12 வரை இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் தத்துவார்த்த பிரசுர வெளியீடுகள் முதலாவது சர்வதேச கூட்டம் நடைபெறவுள்ளது.
4) பாசிசம், கம்யூனிச எதிர்ப்பு, சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியம் ஆற்றிய மகத்தான வரலாற்றுப் பங்களிப்புகளைப் பற்றிய தவறான தகவல்கள் ஆகியவற்றைக் கண்டிப்பது, சிலி நாட்டில் அதிபர் சால்வடோர் அலந்தே ஆட்சிக் கவிழ்ப்பின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல்.
5) சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8) மற்றும் சர்வதேச தொழிலாளர் தினம் (மே 1) ஆகியவற்றை முன்னிட்டு மக்களைப் பெருந்திரளாக அணிதிரட்ட வேண்டும்.
6) தொழிற்சங்க உரிமை, ஊதிய உயர்வு, மேம்பட்ட பணிச் சூழல் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வரும் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோரின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு மற்றும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
7) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை வலியுறுத்தி நடைபெறும் போராட்ட இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்; முதலாளித்துவ உற்பத்தி மற்றும் நுகர்வு முறையை மறுதலிக்க வேண்டும்.
8) அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்பு, பொருளாதார தடைகள், ஏகாதிபத்திய தலையீடுகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைத்து மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
9) தங்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்தவும், கிழக்கு ஜெருசேலத்தைத் தலைநகரமாகக் கொண்ட ஒரு இறையாண்மைமிக்க சுதந்திர நாட்டை அடைந்திடவும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வரும் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
10) ஏகாதிபத்திய அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் அமைப்புகளை, குறிப்பாக, உலக தொழிற்சங்க சம்மேளனம், உலக சமாதான கழகம் உள்ளிட்ட அமைப்புகளை மேலும் பலப்படுத்த வேண்டும்.
11) தங்களது ஜனநாயகப்பூர்வ அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் கம்யூனிஸ்டுகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அனைத்து பிரிவு மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
12) சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 23 வது கூட்டத்தைத் துருக்கி நாட்டில் வெற்றிகரமாக நடத்திட, உலகின் அனைத்து பிராந்தியங்களில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கு இடையேயான கலந்துரையாடல், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும்.