கட்டுரைகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் வழக்கறிஞருக்கு நூற்றாண்டு விழா!

– எஸ்.காசிவிஸ்வநாதன்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி இருபெரும் ஆளுமைகளை கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்தது. பேராசிரியர் நா. வானமாமலை, வழக்கறிஞர் என்.டி வானமாமலை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்ற பெருமையை இருவரும் பகிரங்கமாக பறைசாற்றியவர்கள். 22.9.1922 – ம் நாள் பிறந்தவர் தோழர் வழக்கறிஞர் என்.டி.வான மாமலை அவர்களுடைய நூற்றாண்டு தொடங்கி விட்டது.
கல்கத்தாவில் பிரபல தொழிலதிபராக திகழ்ந்த என்.எஸ்.திருமலாச்சாரி- அமிர்தவல்லி அம்மாள் ஆகியோரின் ஒரே மகன் .தோழர் என்.டி.வி என்று அன்போடு தோழர்களால் அழைக்கப்படுகின்ற வானமாமலை மிகப் பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பது வயது வரை வீட்டிலேயே கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் கல்கத்தாவில் உள்ள ஒரு ஆங்கிலோ தமிழ் பள்ளியில் நான்காவது வகுப்பில் சேர்க்கப்பட்டார். 2 ஆண்டுகள் அங்கு கல்வி கற்றார். தந்தை ரசாயன தொழிலில் ஈடுபட்டவர்.
அவரது பாட்டியின் உடல்நிலை ஆபத்தாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு தந்தையுடன் அவருடைய சொந்த ஊரான நாங்குநேரி திரும்பினார். பாட்டியின் மறைவுக்குப் பின்பும் சித்தப்பா சித்தியின் பராமரிப்பில் வளர்ந்தார். இவருடைய பூணூல் கல்யாணம் நான்கு நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்தக் காலத்தில் பிரசித்திபெற்ற பெற்றிருந்த புல்லாங்குழல் மகாலிங்கம் நாதஸ்வர வித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரின் கச்சேரிகள் நடைபெற்றன. என்.டி.வி காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மிகுந்த செல்வாக்குள்ள குடும்பம் என்பதற்கு சான்றாக இதனைக் கூறுவார்கள்.
1936இல் நாங்குநேரி ஜில்லா போர்டு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பாகத் தேறினார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் இன்டர்மீடியட்டும் அதைத்தொடர்ந்து பிஎஸ்சியும் படித்து தேறினார். சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து சட்டப் பட்டம் பெற்றார். பிரபல வழக்கறிஞரும் அட்வகேட் ஜெனரல் ஆகவும் திகழ்ந்த கே. ராஜ் ஐயரிடம் ஜூனியராக சென்றார்.
சட்டக் கல்லூரியில் படித்து வரும் போது ஹரோல் பிளாஸ்கி எழுதிய ‘சோவியத் யூனியனில் சட்டமும் நீதிமன்றமும்’ என்ற நூலைப் படித்தார். தொடர்ந்து ‘ரஷ்யாவைப் பற்றிய உண்மைகள்’ உட்பட பல நூல்களைப் படித்ததனால் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டார். இரண்டாவது உலகப் போரின்போது சோவியத் மக்கள் நிகழ்த்திய வீரதீரச் செயல்களை கண்டு சோவியத் யூனியனின் தீவிர ஆதரவாளர் ஆனார்.
காங்கிரஸ் கட்சியினுடைய தீவிர ஆதரவாளரான ராமசாமியுடன் நெருங்கிய நட்பு நாங்குநேரி திரும்பியபின் ஏற்பட்டது. பேராசிரியர் நா. வானமாமலை, பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளராக செயல்பட்ட தோழர் வி. எஸ். காந்தி இளைஞர்கள் பலருடன் சேர்ந்து தேசிய வாலிபர் சங்கத்தை அமைத்தார். ரேஷன் வினியோகம், அரசினுடைய வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்களோடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். சாத்தூர் பிச்சைக் குட்டி, மேகநாதன், திருச்செந்தூர் கோசல்ராம், திருநெல்வேலி கணபதி ஐயப்பன் ஆகியோரை அழைத்து வந்து கூட்டங்களை நடத்தினார்கள். இக் கூட்டங்களில் பேசியதனிலால் என்.டி.வி.,நா. வானமாமலை, வி. எஸ். காந்தி ஆகியோர் பின்னாளில் சிறந்த ஆளுமைகளாக உருவானார்கள். திருநெல்வேலி சிந்துபூந்துறை சண்முகம்பிள்ளை அண்ணாச்சியை அழைத்து வந்து கூட்டங்களை போட்டார்கள். அண்ணாச்சி மட்டுமல்ல தோழர்கள் கே. பாலதண்டாயுதம், ப. மாணிக்கம் ஆகியோருடைய தொடர்பும், நா. வானமாமலையின் நட்பும் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையின் பொதுவுடைமை இயக்கப் பார்வையை வலுப்படுத்தியது.
1946 ஆம் ஆண்டு சென்னையில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டு மூன்று மாதங்கள் சென்னையில் தொழில் செய்தார். கப்பற்படை எழுச்சி ஆதரவு ஊர்வலத்தில் பங்கேற்று கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று தோழர்களுடன் கலந்து உரையாடினார். மார்க்சிய நூல்களை படித்தார். நாங்குநேரி திரும்பிய வானமாமலைக்கு விக்கிரமசிங்கபுரம் தொழிலாளர்களிடைய போராட்டம் புது உத்வேகத்தை தந்தது. தேர்தலில் வேட்பாளராக நின்ற தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி சிங்கை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இதற்கான அத்தாட்சியை பெறுவதற்காக விக்கிரமசிங்கபுரம் சென்ற என்.டி. வானமாமலை, வி.மீனாட்சி நாதனின் அத்தாட்சியை பெற்று திரும்பினார்.
கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட வேண்டும் என்பது இவரது பேரவா. ஆனால் 1946இல் சிங்கை செபஸ்தியான் கொலை வழக்கு இவரது வாழ்க்கையை மாற்றியது. தோழர்கள் வா. மீனாட்சி நாதன், நல்லசிவம், சீனிவாசன்,இ. தளவாய், அனந்தகிருஷ்ணன், கே.பி.எஸ் மணி எம். கே சாமி போன்ற தலைவர்கள் உட்பட 18 தோழர்கள் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு அடிஷனல் முதலாவது வகுப்பு மாஜிஸ்ட்ரேட் பாஸ்கரத் தொண்டைமானின் ( இவர் தோழர் தொ.மு.சி. ரகுநாதனின் அண்ணன்) நீதிமன்றத்தில் ஆரம்பமாயிற்று. பூர்வாங்க விசாரணை நாலைஞ்சு வாரம் நடந்தது. பெரிய வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் கட்சி சில நம்பிக்கையான வழக்கறிஞர்கள் தேவை என்று தேடிகிட்டு இருந்த நேரம். பெரிய வழக்கறிஞர்களுக்கு நம் சார்பில் விஷயங்களை சொல்றதுக்கு நல்ல ஜூனியர் வழக்கறிஞர்கள் தேவையாக இருந்தது. இந்த குறைபாட்டை போக்க நம் கட்சி தோழர்களும், தலைவர்களும் வற்புறுத்தி கேட்டதற்காக என்.டி. வானமாமலை முதன்முறையாக வக்கீல் கோட்டை மாட்டிக் கொண்டு வழக்கில் ஆஜரானார். சிறந்த படிப்பாளி. சட்ட நுணுக்கங்களை நன்றாக தெரிந்தவர். எடுத்த வழக்குகளை வெற்றிகரமாக ஜெயிப்பதில் அசாத்திய திறமைசாலி. வழக்கறிஞராக மாற விரும்பாவிட்டாலும் நீதிமன்றத்திற்குள் ஆயிரம் ஆயிரம் அப்பாவி மனிதர்களுக்காக வழக்கறிஞராக வலம் வந்தார். ஏற்றுக்கொண்ட வழக்குகள் அனைத்திலும் வெற்றியை தேடித்தந்தவர்.
1948 – 50 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளின் மீது நெல்லை சதி வழக்கு புனையப்பட்டது. அத்தோடு கூடவே மதுரை சதி வழக்கு, ராமநாதபுரம் சதி வழக்கு போன்றவை புனையபட்டது. இவ் வழக்குகளில் தோழர்கள் என்.டி. வானமாமலையும், பாளை. சண்முகமும் கட்சித் தோழர்களுக்காக ஆஜரானார்கள்.
பல தோழர்களின் உயிர்கள் காக்கப்பட்டன. என்.டி.வியிடம் பேசிக்கொண்டிருந்த போது ஒரு முறை அல்ல பல முறை சொல்லியிருக்கிறார். “வழக்கறிஞர் என்ற முறையில் எத்தனை எத்தனையோ வழக்குகளையும் , எத்தனை எத்தனையோ தைரியசாலிகளை நான் கண்டுள்ளேன். எனினும் தூக்கு தண்டனை விதிக்கப்படும் நிலையில் இருந்த சிங்கை தோழர் கே.பி.எஸ் மணி மற்றும் தூக்கு மேடை ஏறிய தோழர் பாலு ஆகியோரை பற்றிய உயர்ந்த எண்ணம் என்னுள் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது. தமக்கு தூக்கு தண்டனை கிடைக்கப் போகிறது என்று தெரிந்தும் அது பற்றி சிறிதும் கவலைப்படாமல் உறுதியுடன் அவர்கள் இருந்தார்கள். இவர்களது மன உறுதியும் கொள்கை பிடிப்பும், தைரியமும் நினைக்கும் தோறும் என்னை உணர்ச்சியைப் வைக்கிறது”
கேபிஎஸ் மணிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. தப்பினார். ஆனால் தோழர் பாலு மதுரை சிறையில் தூக்கிலிடப்பட்டார்.” இதனை சொல்லும் பொழுதெல்லாம் என். டி.வி யின் கண்களில் கண்ணீர் துளிகள் இருக்கும்.
எண்ணற்ற கொலை வழக்குகள், கிரிமினல் வழக்குகளில் நமது நூற்றுக்கணக்கான தோழர்கள் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், சென்னை சிறைகளில் வாடினார்கள். வழக்குகளில் ஆஜராக கூடாது என்று அச்சுறுத்தல் பல முனைகளிருந்தாலும் அதைப் பற்றி கவலை கொள்ளாது என்.டி.வி வழக்குகளை நடத்தினார். அவரையே கைது செய்தார்கள். சிறைச்சாலைக்குள் அடைத்தார்கள். எனினும் சற்றும் நிலை குலையாது கட்சி தோழர்களை காப்பாற்றுவதற்காகவும், தண்டனை காலத்தை குறைப்பதற்காகவும் நீதிமன்றங்களில் தீவிரமாகப் போராடினார். மோகன் குமாரமங்கலத்தின் ஜூனியராக பணியாற்றி அவர் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என்.டி. வானமாமலையே நேரடியாக வழக்குகளில் ஆஜரானார். மிகச் சிறந்த வழக்கறிஞராக செயல்பட்டார். எம்ஜிஆர் – எம். ஆர். ராதா வழக்கில் ராதாவிற்காக ஆஜராகி அவருடைய தண்டனை காலத்தை மிகவும் குறைத்தார். நீதிபதியாக பதவியேற்க பல முறை வற்புறுத்திய பிறகும்கூட இவர் உழைக்கும் மக்களுக்காக வழக்குகளில் ஆஜராவதையே விரும்பினார். சிரித்த முகமுடைய இவர் அன்பாகப் பேசும் தன்மை கொண்டவர். நீதிமன்றங்களில் இவர் வாதாடுகிறார் என்றால் அனைவரும் திறண்டு விடுவார்கள். நீதிபதிகளே வியக்கும் அளவுக்கு இவருடைய வாதத் திறமை அமையும். எதிர்த்தரப்பு வழக்கறிஞர் உங்களையும் கவரும் தன்மையுடையது. இனிய பேச்சு முறையில் யாரையும் புண்படுத்தாத வகையில் தனது வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பார்.
இந்திய சோவியத் நட்புறவு கழகத்தின் மாநில பொதுச்செயலாளராக, தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவருடைய காலத்தில் குமரியிருந்து சென்னைக்கு உலக அமைதிக்கான சமாதான யாத்திரை பொன்னீலன் தலைமையில் நடைபெற்றது. கட்சி கட்டுப்பாட்டு குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் கட்சியினுடைய கட்டளைகளை என்றைக்கும் மீறியது இல்லை. இவரது மனைவி பட்டதாரி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. அமிர்த கோமளவல்லி என்ற பெயருடைய மகள் கணவருடன் அமெரிக்காவில் பணிபுரிகிறார்.
கொள்கைக்காக வாழ்ந்த மிகச்சிறந்த மாமனிதர் தோழர் என்.டி. வானமாமலையின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்துவோம்.
தொடர்புக்கு: 94434 68710

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button