கன்ஹையா லால் படுகொலை: டி ராஜா கண்டனம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் சுமார் 48 வயதான தையல்காரர் கன்ஹையா லால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் கன்ஹையா லால் வெளியிட்ட பதிவுகள் காரணமாக, கடந்த சில நாட்களாகவே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் வேலைக்குச் செல்வதைக் கூட அவர் தவிர்த்து வந்துள்ளார்.
மீண்டும் கன்ஹையா லால் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். இந்நிலையில், வாடிக்கையாளர் போல் வந்த இருவர், அவரைத் தாக்கி, கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். வீடியோ காட்சி அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்தப் படுகொலை குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி ராஜா ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
உதய்பூர் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்; கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
அடிப்படைவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அது சகிப்புத்தன்மை, கருத்துக் சுதந்திரம், மத நம்பிக்கை உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானதாகும்.
சமுதாய நல்லிணக்கத்தைப் பாதுகாத்திட, அடிப்படைவாதிகளைத் தனிமைப்படுத்திட, அமைதியை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இவ்வாறு டி ராஜா ட்விட்டரில் கூறியுள்ளார்.