கணினி உதவியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் 17 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இந்தக் கணினி உதவியாளர்களை, அரசின் இளநிலை உதவியாளர்களாக நியமனம் செய்வது என தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ஊரக வளர்ச்சித்துறை இதுவரை அமலாக்கவில்லை.
இப்பணியில் சேர்ந்து 17 ஆண்டுகளாகி விட்டதால் பணியாளர்கள் அனைவரும் 45 வயதைத் தாண்டிய நிலையை எட்டியுள்ளனர். இந்த நிலையிலும் பணிநிரந்தரம் என்பது நடைபெறவில்லை எனில் எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பு இல்லாத அவலநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை அரசின் கவனத்துக்கு சுட்டிக்காட்டி, ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் கோரிக்கை மீது மாண்புமிகு முதலமைச்சர் தலையிட்டு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.