கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி,பல் மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை குறைத்திட வேண்டும்! – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி,பல் மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட வேண்டும்!
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதை கைவிட வேண்டும்!
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் 01/04/2022 அன்று சென்னை ஊடகவியலாளர் சந்திப்பின் போது விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி பின்வருமாறு:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தமிழக அரசே 2013 ஆம் ஆண்டு முதல் ஏற்று நடத்திவருகிறது.அப்பல்கலைக் கழகத்தில் இருந்த ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளை, தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையிலிருந்து , மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை வரவேற்புக்குரியன.
ஆனால்,இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் ,தமிழ்நாடு அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைக்கப்படவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இக்கல்லூரி களி ன் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ₹13,610, பி.டி.எஸ் படிப்புக்கு ₹11,610, மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசே ஏற்று நடத்திவரும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் (இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில்) எம்.பி.பி.எஸ் பயிலும் மாணவர்களுக்கு ரூ 4 லட்சமும், பிடிஎஸ் மாணவர்களுக்கு ரூ 2.5 லட்சமும், கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இக்கல்லூரி மாணவர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
அவர்களின் போராட்டங்களின் போது தி.மு.க தலைமை ஆதரவை தெரிவித்தது.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இம்மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தது. இந்நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் கல்விக் கட்டணம் குறைக்கப்படாதது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவலையையும்,வேதனையையும் அளித்துள்ளது.
எனவே, ஏற்கனவே இரண்டாம் , மூன்றாம் நான்காம் ஆண்டுகளில்படித்துவரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ,இதர தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக முன்வர வேண்டும்.கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களை வகுப்புகளுக்கு 31.03.2022 முதல் அனுமதிக்காதது,வருகைப் பதிவேட்டில் இருந்து மாணவர்கள் பெயர்களை நீக்குவதாக சுற்றறிக்கை அனுப்பி மிரட்டுவது போன்றவற்றை உடனடியாக கைவிட வேண்டும்.
கட்டணம் கட்டவில்லை எனக் கூறி சான்றிதழ் தர மறுப்பது சரியல்ல. மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடித் தீர்வை காணவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இந்த சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,பெற்றோர் சங்கத்தின் சார்பில் சார்லஸ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர். இவண்,டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் 9940664343 9444181955