ஓ.பன்னீர்செல்வத்தால் போடிக்கு என்ன லாபம்?- தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி
போடி எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வத் தால் அத்தொகுதிக்கு என்ன லாபம் என்று திமுக தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேனி மாவட்டம் போடி அருகே சிலமரத்துப்பட்டியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் முன்னிலை வகித்தார். பெரியகுளம் எம்எல்ஏ சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
போடி எம்எல்ஏவாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அந்த தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. தனது தொகுதி குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் ஆண்டின் 365 நாட்களும் சென்னையிலேயே இருக்கிறார். தேர்தல் வந்தால்தான் தொகுதிக்கு வருகிறார். போடி தொகுதியில் பல இடங்களில் சாலை, கழிப்பறை, வடிகால் போன்ற அடிப்படை வசதி களில் பெரும் குறைபாடு உள்ளது.
முதல்வராக, துணை முதல்வராக இருந்துள்ளதுடன் இத்தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாகவும் இருக்கிறார். இருந்தும் போடி தொகுதிக்கு அவரால் எந்த பலனும் இல்லை.
முதல்வர் ஸ்டாலின் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.