ஒன்றிய பா.ஜ.க அரசாங்கத்தின் அதிகார துஷ்பிரயோகம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
அரசாங்க அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
எதிர்கட்சித் தலைவர்கள் மீது, குறிப்பாக, பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களைச் சார்ந்த தலைவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு நிறுவனம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் கட்டவிழ்த்துவிடப்படுவது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க அல்லாத கட்சிகளின் ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்காக அரசு எந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஊழல் எதிர்ப்பு எனும் பெயரில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாரபட்சமான நிலைப்பாட்டைக் கட்சி நிராகரிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே ஊழல் செய்தவர்கள் என்பது போலவும், ஆளும்கட்சியைச் சார்ந்த தலைவர்கள் எவரும் ஊழலில் ஈடுபடாதவர்கள் என்பது போலவும் கருதி அரசாங்கம் செயல்படுகிறது.
அனைத்து விதமான ஊழல்களையும் ஒழிப்பதற்கான போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருந்து வருகிறது.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.