இந்தியா

ஒன்றிய அரசுத் துறைகளில் நிரப்பப்படாத சுமார் 25% பணியிடங்கள்!

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் (Sanctioned Strength) 40.35 லட்சம் ஆகும். 2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி இவற்றுள் 9.79 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக மக்களவையில் ஜுலை 20 அன்று தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய செலவினத் துறையின் ஊதிய ஆய்வுப் பிரிவின் ஆண்டறிக்கையின் அடிப்படையில் ஒன்றிய இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசுப் பணியிடங்களை உருவாக்குவதும் நிரப்புவதும் சம்பந்தப்பட்ட அமைச்சகம்/துறையின் பொறுப்பாகும். மேலும் இது ஒரு தொடர்ச்சியான செயலாகும். காலியிடங்கள் – பணியாளர்களின் பணி ஓய்வு, பதவி உயர்வு, ராஜினாமா, இறப்பு போன்றவற்றின் காரணமாக எழுகின்றன. எனவே இவை கடந்த பல ஆண்டுகளாக நிரப்பப் படாததாலேயே காலிப் பணியிடங்கள் குவிந்துள்ளன.

கோடிக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி அலையும் நாட்டில், அரசு நிர்வாகமே பொறுப்பு தவறுவது நாட்டில் வேலை இன்மை பல்கிப் பெருகவே வழி வகுக்கும்.

மற்றொரு பதிலில், தொழிலாளர் அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்தால் வெளியிடப்பட்ட மத்திய அரசு ஊழியர் தொகை கணக்கெடுப்பின்படி, பல்வேறு மத்திய அமைச்சகங்கள்/துறைகளில் உள்ள நிரந்தர ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை மார்ச் 2011 நிலவரப்படி 30,87,278 என்றும், இவர்களுள் 3,37,439 பணியாளர்கள் மட்டுமே பெண்கள் என்றும் அமைச்சர் ஜீதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஒன்றிய அரசுத் துறைகளே பாலினப் பாகுபாட்டுடன் செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

செய்திக்குறிப்பு–ஆனந்த் பாசு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button