ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2022 – 23 பேரழிவுகரமானது : டி.ராஜா கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பிப்.1 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2022-23 மிகவும் பேரழிவுகரமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
பிப்.1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகரிக்கக்கூடிய பேரழிவுகரமான நிதிநிலை அறிக்கையாக இருக்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கருதுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக முன்பே பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நமது நாட்டின் பொருளாதாரம், பெருந்தொற்று சூழல் காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்புகள் பெரும் ஏமாற்றத்தைத் தருவதாகவும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றன.
தேசத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு தீர்க்கமான அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
பொருளாதார வளர்ச்சி 9.2 சதவிகிதமாக உயரும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது உண்மையில் சாத்தியமாகும் என்று நம்புவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.
பெருந்தொற்று காலம் முழுவதும், உழைக்கும் மக்கள் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த போது, அவர்களுக்கு நிதியுதவி அளித்து அவர்களின் நுகரும் சக்தியை அதிகரிக்க வழிவகை செய்யாமல் தொழிலதிபர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வழங்குவதிலேயே இந்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. சலுகைகள் வழங்கப்பட்ட பின்பும் கூட உற்பத்தி பெருக்கம் ஏற்படவில்லை என்பதை தொழிற்துறை உற்பத்தி குறியீடு அம்பலப்படுத்தியுள்ளது.
வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிதி நிலை அறிக்கையில் அதற்கான திட்டம் எதுவும் இல்லை.
விலையேற்றம் தொடர்கிறது; பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் மற்றுமொரு முதன்மையான பணியாகும். ஆனால், நிதிநிலை அறிக்கையில் இப்பிரச்சினை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் நிகர லாபம் கடந்த ஆண்டில் மட்டும் 93,000 கோடி ரூபாய் என்று அரசாங்கம் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது கேலிக்குரிய செயலாக உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. எல்.ஐ.சி. நிறுவனப் பங்குகள் விரைவில் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் என்று நிதியமைச்சர் பெருமிதம் கொள்கிறார். நீலாஞ்சல் இஸ்பத் நிறுவனமும் குறிவைக்கப்பட்டுள்ளது.
ஐந்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு ‘சென்டர் ஆப் எக்ஸெலன்ஸ்’ என்ற சிறப்பு நிலை வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்புகள் உயர்கல்வித் துறையில் தலித்துகள், பழங்குடி மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை மறுக்கக்கூடிய வர்க்கப் பிளவை மேலும் அதிகரிக்கவே வகை செய்யும்.
சுகாதாரம் மற்றும் சமூகநலன் சார்ந்த இதர துறைகளிலும் அரசாங்கத்தின் அணுகுமுறை இவ்வாறாகவே உள்ளது.
வேளாண்துறைக்கான மொத்த ஒதுக்கீடு 4.26 சதவிகிதத்தில் இருந்த 3.84 சதவிகிதமாக குறைந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து உறுதிமொழி எதுவும் வழங்கப்படவில்லை.
நிதிப்பற்றாக்குறை நிச்சயமாக உயரும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. வரிச்சலுகைகள் எதுவும் வழங்கப்படாததால் மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த மக்களின் பாதிப்பு தொடரும்.
இந்த நிதிநிலை அறிக்கை தற்போது தேசத்தை சூழ்ந்துள்ள எந்தவொரு பொருளாதாரப் பிரச்சினைக்கும் தீர்வு கூறுவதாக இல்லை. கார்ப்பரேட் மற்றும் பெருநிறுவனங்களின் கொள்ளைக்கு அடிமை சேவகம் புரிந்திடவே புனையப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.