ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024: மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024ஐ மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஏற்றத்தாழ்வு மற்றும் ஊரகப் பகுதிகளில் உருவாகி வரும் நெருக்கடிகள் ஆகியவற்றை ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024 கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
பொருளாதாரத்தின் எதார்த்த நிலையை முற்றாகப் புறக்கணித்திருப்பதுடன் பொருளாதார நிலை சீராக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை வலுப்படுத்திட நிதிநிலை அறிக்கை முயலுகிறது.
கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் இதர சமூகநலத் திட்டங்கள்/துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் போதுமானவை அல்ல; இந்த நடவடிக்கை, உழைக்கும் மக்களை விளிம்புநிலையின் உச்சத்திற்குத் தள்ளுவதுடன், அவர்களைப் பட்டினிக் கொடுமைக்கும் உள்ளாக்கும்.
விவசாய உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் அவதிக்குள்ளாகி இருக்கும் இந்தச் சூழலில், விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 8,500 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் துயர் துடைக்க இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மானியம் குறித்து தெளிவான கருத்து இடம்பெறவில்லை.
உணவு மானியம் 2.8 இலட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.97 இலட்சம் கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு உயர்த்தப்படவில்லை; பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு கணக்கிட்டால், இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2022 – 2023 ஆண்டில் 85,000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 60,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூகநல திட்டங்கள்/துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேவைகளை நிறைவு செய்திட இயலாத, எதார்த்த நிலைக்கு எதிரான, வளர்ச்சிக்கு எதிரான, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை ஆகும்.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.