ஐ. நா. பொதுச் சபையில் முதலாளித்துவத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய கியூபா!
அண்மையில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபையின் 77வது கூட்டத்தில் கியூப அயலுறவு துறை அமைச்சர் உரையாற்றினார். அவர்தம் சிறப்புரையை ஊடகத்துறையின் பெருநிறுவனங்கள் இருட்டடிப்பு செய்யவே முனைப்புடன் பணியாற்றின.
கடந்த மூன்றாண்டுகளில், முதல் முறையாக நடைபெற்ற உலக தலைவர்களின் உயர்மட்ட கூட்டத்தில் பேசிய கியூபாவின் அயலுறவு துறை அமைச்சர் புரூனோ ரோட்ரிக்ஸ், கோவிட்-19 பெருந்தொற்று, தற்போதைய சர்வதேச சமூக அமைப்பின் நியாயமற்ற மற்றும் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்தி உள்ளது என்று பகிரங்கமாகப் பதிவு செய்தார்.
தற்போது உள்ளதைப் போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளங்களை மனிதகுலம் இதுநாள் வரையில் பெற்றிருந்ததில்லை. செல்வங்களை உருவாக்கவும், மக்கள் நலனைப் பாதுகாப்பதற்குமான அசாதாரணமான ஆற்றலை மனிதகுலம் இதுநாள் வரையில் கொண்டிருந்ததில்லை என்று கூறிய அவர், மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதையும், உலகில் ஏற்றத்தாழ்வு அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
828 மில்லியன் (1 மில்லியன் – 10 இலட்சம்) மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள். 50 மில்லியன் குழந்தைகளின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் வேலையின்மை காரணமாக, 207 மில்லியன் நபர்கள் பாதிக்கப்படுவார்கள். இலட்சக்கணக்கான கோடிகள் இராணுவத்திற்காகச் செலவழிக்கப்படுகிறது. ஆனால், தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 6.5 மில்லியன் மக்கள் இறந்துவிட்டனர். குறைந்த வருவாய்ப் பிரிவில் உள்ள நாடுகளில், கோடிக்கணக்கான மக்களுக்கு கோவிட் பெருந்தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதற்கான தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவில்லை.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் உலகம் முழுவதும் நடைமுறைக்கு வரவேண்டும் என்று பாடுபட்டு வரும் வேளையில், உலக அளவில் இராணுவ செலவினங்கள் முதல் முறையாக 2 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் – 1 இலட்சம் கோடி) அமெரிக்க டாலரையும் மிஞ்சிவிட்டது. இது போன்ற பெருந்தொகை சுகாதாரம் மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடப்பட்டிருந்தால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு காப்பாற்றப்பட்டு இருக்கும்.
பருவகால மாற்றம் நெருக்கடி பற்றிக் குறிப்பிட்ட அவர், ஏழை, பணக்காரன் என்று அனைவருக்குமான ஒற்றை இல்லமாக இப்பூமண்டலம் திகழ்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
சர்வதேசிய நிகழ்வுப் போக்குகள் ஆபத்தான பாதையில் நகர்ந்து வருவதாகக் கூறிய அவர், அமெரிக்காவின் கொடூரமான இராணுவ, பொருளாதார, அரசியல் தலையீடுகளை இகழ்ந்துரைத்தார். கியூபாவிற்கு எதிரான தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கு முன், ஐ.நா பொதுச் சபை முதல் முறையாகத்
தீர்மானம் நிறைவேற்றியதை அவர் நினைவு கூர்ந்தார். சமாதானத்தைக் கோரும் காலச் சூழலில், கியூபாவிற்கு எதிரான பொருளாதாரப் போரை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
பயங்கரவாதத்தை ஆதரித்துப் பரப்பும் நாடாக கியூபாவை வகைப்படுத்தியுள்ள அமெரிக்காவின் இரட்டை வேடம் மற்றும் சீரற்ற நிலைப்பாடு ஆகியவற்றை அவர் கண்டித்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், 48 நாடுகளுக்கு 58 மருத்துவ குழுக்களை கியூபா அனுப்பி வைத்ததை அவர் ஐ.நா பொதுச் சபையில் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்.
வெனிசுலா மற்றும் நிகாரகுவா நாட்டு அரசாங்கங்களுக்கு ஆதரவு, காலனி ஆதிக்க எதிர்ப்பு, பியோர்டோ ரிக்கோவின் விடுதலை மற்றும் ஹெய்தியின் புனர்நிர்மாணம் ஆகியவை குறித்த கியூபாவின் ஆதரவு மற்றும் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கொலம்பியாவில் அமைதி திரும்ப வேண்டும்; சிரியாவில் அந்நிய தலையீடுகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்; மத்திய கிழக்குப் பகுதியில் நீடித்து வரும் மோதலுக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும்; பாலஸ்தீனக் பிரதேசத்தில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்புகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
உக்ரைனில் நிலவி வரும் போர் சூழல் குறித்து பேசிய அவர், போருக்கான எதார்த்தமான தீர்வு என்பது அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
உலகின் மீது ஒற்றைப் பண்பாடு மற்றும் வளர்ச்சிக்கான மாதிரியைத் திணிக்கும் முயற்சிகள், மேலாதிக்கம், எதேச்சதிகார போக்கு ஆகியவற்றுக்கு எதிராக கியூபா தொடர்ந்து உரத்த குரலில் முழக்கமிட்டுப் போராடும் என்று கூறி தனது உரையை கியூப அயலுறவு துறை அமைச்சர் நிறைவு செய்தார்.