ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான புதிய விதிகள் திருத்தம் – இந்தியக் கூட்டாட்சி முறையைத் தகர்த்தெறியும்
த.லெனின்
சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள அகில இந்திய பணிகளுக்கான விதிகள் திருத்தம் நமது நாட்டின் நிர்வாகத்துறையை நிர்மூலப்படுத்தும் அடிப்படைகளைக் கொண்டது.
ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள விதிகள் திருத்தம் ஏற்கனவே உள்ள இந்திய ஆட்சிப் பணிக்கான விதிகள் 6(1) குறித்ததாகும். அதாவது 1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விதியின்படி ஒரு மாநிலத்தில் இருந்து டெபுடேசன் மாற்றுப் பணிக்காக ஒன்றிய அரசுக்கோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கோ, மற்ற மாநிலங்களுக்கோ செல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்றுதான் மாற்ற முடியும் என்பதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரியின் விருப்பமும் அவசியம் என்பது மரபாக உள்ளது. இந்த விதியை மாற்றி மாநில அரசு ஒப்புதல் அளிக்க வில்லை என்றாலும் ஒன்றிய அரசே இதில் தீர்மானிக்க ஜன.25, 2022க்குள் கொண்டு வரப்படவுள்ள இந்தச் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
கொண்டு வரப்படவுள்ள நான்கு சட்டத்திருத்தங்களில் இரண்டு சட்டத்திருத்தங்கள் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே ஒன்றிய அரசு செயல்பட வழிவகுக்கிறது. அத்துடன், மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒன்றிய அரசுக்கு நிலையாக அனுப்பியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
இந்தச் சட்டத்திருத்தம் சம்மதப்பட்ட அலுவலரின் விருப்பத்தையும் மீறக்கூடியதாக உள்ளது. எனவே, இது நமது ஜனநாயகத்திற்கு பெரும் சீர்குலைவையே ஏற்படுத்தும்.
பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமனறத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்ட 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்துகூட்டுறவு கூட்டாட்சி முறையைக் (Cooperative Federalism)கொண்டு வருவேன் என்று தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், இப்போது கிழக்கிந்திய கம்பெனி வைஸ்ராய்களைப் போல மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதும், அரசு நிர்வாகம் முழுவதையும் தன் ஒற்றை விரலுக்கு கட்டுப்பட்டதாக மாற்றுவதற்குமான முயற்சியில் இறங்கியுள்ளது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில்தான் இந்தியாவில் குடிமைப் பணி அதிகார முறை கொண்டு வரப்பட்டது. அதற்கு அவர்கள் இட்ட பெயர் – மாண்புமிகு கிழக்கிந்திய கம்பெனி சிவில் சர்வீஸ் (பிணிமிசிசிஷி) என்பதாகும். 1858க்குப் பிறகு இந்த சிவில் குடிமைப் பணியில் மாற்றம் கொண்டு வரப்பட்டு ஐ.சி.எஸ். என்று பெயர் மாற்றப்பட்டது. இதுவே 1947 வரை நடைமுறையிலும் இருந்தது.
1919 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்திய அரசாங்க சட்டத்தின் மூலம் இந்திய சிவில் சர்வீஸ், இந்திய அரசு செயலரின் பொது மேற்பார்வையின் கீழ் அனைத்திந்திய சேவைகள் மற்றும் மத்திய சேவைகள் சட்டம் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டன.
1946ல் பிரிமியர் மாநாட்டில் இந்திய சிவில் சர்வீஸ் ஆட்சிப் பணிகள் நிர்வாகச் சேவையை உருவாக்க அன்றைய மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இதன் அடிப்படையில் இம்பீரியல் காவல்துறை அமைப்பையும் இந்திய காவல் பணிக்காக அது உருவாக்கியது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கடந்தகால காலனி ஆதிக்க கொடூர நிகழ்வுகளுக்கு காரணமாக வெகுமக்களால் சொல்லப்பட்ட தண்டலாக்காரர்கள் அல்லது வரி வசூலிப்போர் என்று நடைமுறையில் அழைக்கப்பட்ட இந்த ஐ.சி.எஸ். பணியின் மீது பல சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் வெறுப்பு இருந்தது.
பண்டித ஜவஹர்லால் நேரு இந்த ஐ.சி.எஸ்.பணியே இருக்கக் கூடாது என்றும் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அரசியல் நிர்ணய சபையில் பேசினார். அந்த அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் பல்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள ஒரு பன்மைத்துவ நாட்டிற்கு அகில இந்திய அளவிலான சேவை இல்லையென்றால் ஒன்றியம் இல்லாது போய்விடும், நாட்டை ஒருங்கிணைக்க முடியாது என்றார். அத்துடன் இந்தப் போக்கை நீங்கள் ஏற்கவில்லை என்றால் இதற்கு மாற்றாக வேறு ஒன்றும் இல்லை. இவர்கள் தான் கருவிகள். இவற்றை அகற்றினால் நாடு முழுவதும் குழப்பத்தைத்தவிர வேறு எதையும் பார்க்க முடியாது என்று வல்லபாய் பட்டேல் அரசியல் நிர்ணய சபையில் அகில இந்திய சேவைகளின் பங்கு பற்றி பேசியபோது குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற ஆட்சி முறை உள்ள எல்லா நாடுகளிலும் தேசிய அளவில் ஒரு நிரந்தர நிர்வாகத்துறை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே இந்தியாவிலும் இந்த நிர்வாகத்துறை அமைக்கப்பட்டது. ஐ.சி.எஸ். என்பது பெயர் மாறி இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) என்று ஆனது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரி மாவட்ட நிர்வாக நீதிபதியாகவும் செயல்படுகிறார். எனவே, அரசியல் நடுநிலையோடு இவர்கள் செயல்படுவதற்கு இந்த முறைகள் எல்லாம் உருவாக்கப்பட்டன.
இந்த முறையை ஏற்றுக் கொள்ளாத நேருவையே ஏற்க வைத்த பெருமை வல்லபாய் பட்டேலுக்கு உரியது. ஒரு நாட்டின் திட்டங்கள் நிறைவேற்றப்பட ஒரு வலிமையான நிர்வாக முறை மிக மிக அவசியம். இதை உணர்ந்துதான் ஜனநாயக நாடுகள் அனைத்திலும் இந்த முறை வலிமையாக உருவாக்கப்பட்டு நடுநிலையோடு செயல்பட வைக்கப்படுகிறது.
எதற்கெடுத்தாலும் வல்லபாய் பட்டேலை தனது முன்னுதாரணத் தலைவராகச் சித்தரிக்கும் மோடி உலகிலேயே அவருக்கு மிகப் பெரிய சிலை எழுப்பி அழகு பார்த்தவர். இப்போது அவர் கொண்டு வர உள்ள உத்தேச விதிகள் திருத்தத்தில் மாநிலங்களின் உரிமையை அலட்சியப்படுத்துவதும் அன்னியப்படுத்துவதும் எங்கெனம்? நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு இந்திய ஆட்சிப் பணி மிக உதவிகரமாக அமையும் என்று சொன்ன லல்லபாய் பட்டேல் எங்கே, இன்று அதனை முழுவதுமாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுபோகும் மோடி எங்கே? இது பட்டேலுக்கு செய்யும் துரோகம் அல்லவா?
டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மற்றும் பிற அரசு ஊழியர்களின் தங்களது நம்பகத்தன்மையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிவுரையின்படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் மாநிலங்கள் அரசியலமைப்புச் சட்டப்படியான ஒரு தனித்த, சுதந்திரமான இருப்பைப் பெற்றுள்ளது. ஒன்றிய அரசைப் போலவே, மக்களுடைய கல்வி, சமூக, அரசியல் மற்றும் பண்பாடு வாழ்வில் மாநில அரசுகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. மாநில அரசுகள் ஒன்றிய அரசின் ஏஜெண்டாகவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியதையும் நினைவில் கொண்டால் மோடியின் அரசு மோதிப் பார்ப்பது நமது நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது என்பது விளங்கும்.
தான் கொண்டிருக்கிற இந்துத்துவ வெறுப்பு கருத்தியலுக்கு இணக்கமாக செயல்படும் ஒரு போட்டி நிர்வாகமுறையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சங்கப் பரிவாரங்களும் செயல்படுகிற இந்த நேரத்தில் கொண்டு வருகிற இந்த விதிகள் திருத்தம் அதற்காகவே பயன்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த 2001ஆம் ஆண்டு மாநில அரசின் ஒப்புதலைக் கேட்காமல் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக, அரசியல் காரணங்களுக்காக மாற்ற முடிவு செய்தது. இதை அன்றைய தமிழ்நாடு அரசு எதிர்த்தது. டிசம்பர் 2020ல் மேற்கு வங்க ஐ.பி.எஸ். அதிகாரிகளை இதே போன்று ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ள முயன்றபோது, இதில் தலையிட்டு மேற்கு வங்க அரசு தடுத்து நிறுத்தியது.
ஏன்? கடந்த 2021ல் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளரை மத்தியப் பணிக்கு தன்னிச்சையாக மோடி அரசு எடுத்த போதும், அதனை அம்மாநில அரசு மிகக் காத்திரமாக எதிர்த்தது.
இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கிற அகில இந்தியப் பணி விதிகள் 6(1)ஐ தான் இன்று ஒன்றிய அரசு மாற்ற முனைகிறது என்றால் அவர்களது எண்ணம் நிர்வாகத்தை மேம்படுத்துவது அல்ல. மாறாக அதை செயல்படவிடாமல் நிர்மூலமாக்குவதே ஆகும். குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநில உரிமைகளுக்காக வாதாடிய மோடி, இன்று பிரதமரான பிறகு மாநில முதல்வர்களை, மாநில அரசுகளை தனக்கு விசுவாசமான எடுபிடிகளாய் மாற்றவே முயற்சிக்கிறார். இந்தப் போக்கு நாம் ஏற்றுக்கொண்ட மக்களாட்சி கொள்கைகளுக்கு நேர் விரோதமானது.
சர்வாதிகார நாடுகளின் வரலாற்றில் ஹிட்லரும், முசோலினியும் தத்தமது நாடுகளின் நாடாளுமன்றங்களை முதலில் முடக்கினர். பின்பு நீதிமன்றங்களை தனக்கான பிரச்சார மன்றங்களாக மாற்றினர். அதன் பின்பு நிர்வாகத்துறையை தனது நம்பகமான சகாக்கள் நிறைந்த துறையாக மாற்றிய பிறகுதான் தான் விரும்பிய வெறுப்பு அரசியல் இனப் படுகொலைகள், யூதர்களை கூட்டம், கூட்டமாக கொன்று பழி தீர்த்த சம்பவங்கள் அடுக்கடுக்காக நடந்தேறின. சட்டமும் காவல்துறையும் நிர்வாகத்துறையும் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை. இம்மாபாதக படுகொலைகளை தன்னால் இயன்ற அளவும் நடத்தியது.
எனவே நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும், பண்பாட்டு பன்மைத்துவமும் உள்ள இந்தியாவில் ஜனநாயகம் மேலும் வலுப்பட வேண்டுமானால் இதுபோன்ற சர்வாதிகார முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். அது முறியடிக்கப்படவில்லை என்றால், நமது ஜனநாயகம் ஊனப்படுவதுடன் நாட்டை பாசிச சர்வாதிகாரம் நோக்கி அழைத்துச் செல்லவே பயன்படும். சமூக நீதியும், வேலைவாய்ப்பும் தாய்மொழி உரிமைகளும் காக்கப்பட வேண்டுமானால் ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள திருத்தத்தை ஒருங்கிணைந்து பெயர்த்தெறியும் பெரும் போராட்டங்களை நடத்தியாக வேண்டும். இளைய தலைமுறையே இதற்காக எழு! முழு சக்தியைத் திரட்டிப் போராடு!
தொடர்புக்கு: 94444 81703