ஐதராபாத்தை சாய்த்த தமிழ்நாடு; தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது…!
முஷ்டாக் அலி கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் ஐதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
13-வது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடந்த முதலாவது அரையிறுதியில் தமிழ்நாடு – ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தமிழக அணிக்கு எதிராக அந்த அணி வலுவான ரன்களை குவிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி நடையை கட்டினர். இதனால் அந்த அணி ரன்கள் சேர்க்கவே தடுமாறியது.
7வது விக்கெட்டுக்கு பிறகு வந்த தனய் தியாகராஜன் மட்டும் 1 சிக்ஸர் 1 பவுண்டரி என 24 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். இதனால், 18.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஐதராபாத் அணி 90 ரன்னில் சுருண்டது.
பந்து வீச்சில் மிரட்டிய தமிழக அணி தரப்பில் மிகத்துல்லியமாக பந்துகளை வீசிய சரவண குமார் 5 விக்கெட்டுகளையும், முருகன் அஸ்வின் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 91 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய தமிழக அணிக்கு நல்ல தொடக்க கிடைக்கவே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து நிர்ணயித்த இலக்கை எளிதில் எட்டியது. அணியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விஜய் சங்கர் 40 பந்துகளில்,1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், அவருக்கு கைகொடுத்த சாய் சுதர்சன் 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் குவித்தனர்.
எனவே, ஐதராபாத் அணிகெதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தலான வெற்றி மூலம் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தொடர்ந்து 3வது முறையாக தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்த தொடருக்கான இறுதிப்போட்டி வருகிற திங்கள் கிழமை மதியம் 12:00 மணிக்கு (நவம்பர் 22ம் தேதி) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் (கர்நாடகா vs விதர்பா) தகுதி பெறும் அணியை தமிழ்நாடு அணி எதிர்கொள்ளும்.