ஐஏஎஸ் விதிகள் திருத்தம் கூட்டாட்சி சமநிலையை கேலி செய்கிறது!
புதுதில்லி, ஜன. 28 – மாநில அரசுப் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதலின்றி, ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றிக் கொள்ளும் வகையில், ஐஏஎஸ் விதிமுறைகள் சட்டம் 1954-இல் திருத்தம் கொண்டுவர நரேந்திர மோடி தலை மையிலான பாஜக அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் ஒன்றிய அரசின் பணியாளா், பயிற்சி அமைச்சகம் கடந்த ஜனவரி 12-இல் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, சத்தீஸ்கா், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், கர்நாடகா ஆகிய 11 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், முன்னாள் அகில இந்திய மற்றும் மத்திய சேவை அதிகாரிகளின் கூட்டமைப்பான, ‘அரசியலமைப்பு நடத்தைக் குழு’ (The Constitutional Conduct Group – CCG) சார்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 109 பேர் கையொப்பமிட்டு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப் பிற்குள், ‘பொதுவான அரசியலமைப்பு நோக்கங்களை’ அடைய, ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த கட்டமைப்பிற்குள், இந்த இரண்டு நிலைகளுக்கு இடையே “சம நிலையை” வழங்குவதற்கு அகில இந்திய சேவைப்பணி (All India Services -AIS) ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த சமநிலையைப் பேணுவது நல்லாட்சிக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவில் நிர்வாக சேவைகளின் கருத்தியல் வடிவமைப்பானது, இரண்டு தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக் கிறது. முதலாவது, அகில இந்திய சேவைப்பணி அரசியலமைப்பின் முக்கிய அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அது நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இல்லை. “இந்த அம்சம் அகில இந்திய சேவைப்பணி (AIS) உறுப்பினர்களுக்கு அவர்களின் சுதந்திரம் மற்றும் அவர்களின் மனதைப் பேசும் திறனை உத்தரவாதம் செய்வதற்கு முக்கியமானதாக உள்ளது” என்பது நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் படேலின் கருத்தாகும். இந்த உண்மை அகில இந்திய சேவைப் பணி அதிகாரிகளுக்கு அரசியலமைப்பின் பாது காப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ‘அரசியல் மாறுபாடுகளில்’ இருந்து அரசியல் சட்டத்தை தனிமைப்படுத்தவும் ‘ஆட்சி நிலைத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை வழங்கவும்’ அதிகாரிகளை பணிக்கிறது. அகில இந்திய சேவைப்பணியின் இரண்டா வது தனித்துவமான அம்சம், பணியாளர்கள் ஒன்றிய மற்றும் மாநில அதிகாரங்களுக்கு இடையே உள்ளனர்.
ஆனால், கேடர் விதிகளுக்கு முன்மொழி யப்பட்ட திருத்தம் இந்த உறவை அடிப்படை யில் மாற்றுகிறது மற்றும் அகில இந்திய சேவைப்பணிகளைப் பராமரிக்க வடி வமைக்கப்பட்ட நுட்பமான கூட்டாட்சி சம நிலையை கேலி செய்கிறது. இந்தப் பதவிகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம், நடுநிலையான ஆட்சேர்ப்பு மூலம் பாரபட்சமற்ற தேர்வையும், ஒரே மாதிரியான உயர் தரத்தையும் உறுதி செய்வதாகவும், இரண்டாவதாக, மாநிலங்களின் சுயாட்சி யைப் பறிக்காமல், பிளவுபடுத்தும் போக்கு களுக்கு எதிராகச் செயல்படுவதுமே ஆகும். அகில இந்திய சேவைப் பணியாளர்கள் பற்றி வேறு என்ன சொன்னாலும், நிர்வா கத்தில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்த உணர்விற்கு அவர்களின் பங்களிப்பு தனித்தன்மை வாய்ந்தது. ஆனால், தற்போதைய விதிகளில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இந்த தனித்துவமான வடிவமைப்பு அம்சத்தை மோசமாக பாதிக்கும். மாநிலத்தில் பணிபுரியும் அகில இந்திய சேவைப்பணி அதிகாரிகள், ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு அங்கு தாங்கள் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில், ஒன்றிய அரசில் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியின் விருப்பத்திற்கு எதிராக எந்த முடிவும் அல்லது நடவடிக்கை யும் எடுக்கத் தயங்குவார்கள்.
மாநிலங்களும் அகில இந்திய சேவைப்பணிக்கான பிரத்தியேகமான பதவி களைக் குறைத்து, அவற்றை அரசு சேவை களுக்குத் திறந்துவிடலாம். அவ்வாறு செய்யும்பட்சத்தில், அது எந்த பிராந்திய சார்புகளும் இல்லாமல், நாடு முழுவதும் ஒரே மாதிரியான உயர் நிர்வாகத் தரங்களைப் பராமரிக்கும் அம்பேத்கரின் நோக்கத்தை கடு மையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம். மாநிலத்தில் அகில இந்திய சேவைப் பணியின் பங்கு குறைவது கூட்டாட்சி பன்முகத்தன்மையின் சூழலில் அவர்கள் வகிக்கும் ‘ஒருங்கிணைக்கும் பாத்திரத்தை’ பாதிக்கும். இது, மாநில அரசு மீது அதிருப்தி அடையும் போதெல்லாம், ஒன்றிய அரசு தங்கள் அதீத அதிகாரத்தை துஷ்பிர யோகம் செய்வதற்கு தலைமைச் செயலா ளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல், முதன்மை தலைவர் காடு களின் தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய மான பதவிகளை வகிக்கும் அதிகாரிகளை பலிகடா ஆக்கும் நிலையை ஏற்படுத்தும்.
எனவே, ஐஏஎஸ் கேடர் விதிகளில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் தன்னிச்சை யானது, நியாயமற்றது மற்றும் அரசிய லமைப்பிற்கு விரோதமானது. நாட்டின் ஒற்று மைக்கு மிகவும் முக்கியமானதாக சர்தார் படேல் கருதிய ஒரு கட்டமைப்பிற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. 1949 அக்டோபரில் அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றிய படேல், “பேசும் சுதந்திரம் கொண்ட நல்ல அகில இந்திய சேவை இல்லாவிட்டால் ஒன்றுபட்ட இந்தியா இருக்காது” என்றார். “சுதந்திர இயக்க வர லாற்றில் வேறு யாரையும் விட சர்தார் படேலை உயர்வாக மதிக்கும் அரசாங்கம் அவ ருடைய வார்த்தைகளுக்கு செவிசாய்த்து, ஏஐஎஸ் கேடர் விதிகளை மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்.” இவ்வாறு முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.