ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் திருத்தம்? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) ஐபிஎஸ் – (இந்தியக் காவல் பணி) அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்யும் வகையில் ஒன்றிய அரசு விதிகளை திருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும். கூட்டாட்சி கோட்பாட்டை தகர்கும் செயலாகும்.
மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும் சட்டமன்றங்கள் மற்றும் அமைச்சரவைகளின் அதிகாரத்தையும் பறிக்கும் எதேச்சதிகார முறையாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சீர்குலைக்கும் வஞ்சக எண்ணத்தோடு அணுகும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் ஒன்றுபட்டு ஒன்றிய அரசுக்கு வலுவான நிர்பந்தம் தரும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதமைச்சர் முன் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.