கட்டுரைகள்

ஏழைகளுக்கு எதிரான, கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட் 2022 – 2023

 டி.ராஜா

கார்ப்பரேட் மற்றும் பெருநிறுவனங்களிடம் பா.ஜ.க அரசாங்கம் கொண்டிருக்கும் விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்கிறது ஒன்றிய பா.ஜ.கஅரசாங்கத்தின் 2022 – 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை.

அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு, புதிய தாராளமய கொள்கைகளே தேசத்தின் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்றும், பா.ஜ.க அரசாங்கத்தின் பொருளியல் நிலைப்பாட்டையும், அதன் கொள்கை திசைவழியையும் இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

தனியார்துறை வளர்ச்சிக்கு அதிக உத்வேகம் வழங்கப்படுவதும், பொதுத்துறை மற்றும் சமூகநலன் சார்ந்த துறைகள் முற்றாகப் புறக்கணிக்கப்படுவதும் இந்த அரசாங்கம் ஸ்தாபிக்க விரும்பும் பொருளாதார மாதிரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

இந்த அரசாங்கம் யாருக்கு சேவை புரிந்திட விழைகிறது என்பதையும், அதன் உள்நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அணுகும் போது, இந்த நிதிநிலை அறிக்கை முன்னிறுத்தும் அரசியலை நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய வேலைவாய்ப்பு கட்டமைப்பு மிகப்பெரிய அளவிற்கு விவசாயம் மற்றும் அது சார்ந்த இதர தொழில் நடவடிக்கைகளைச் சார்ந்துள்ளது. ஆனால், தற்போது விவசாயத் துறையின் நிலை மோசமடைந்து வருகிறது. கடந்த 2020 -21 ஆம் ஆண்டில் 20.2 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறையின் மொத்த மதிப்பு சேர்ப்பு (Gross Value Added) 2021 – 22 ஆம் ஆண்டில் 18.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஊரகப் பொருளாதாரம் இடர்பாடுகளின்றி இயங்கிட, தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட, விவசாயத் துறையில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆனால், இந்த அடிப்படைப் புரிதலுக்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜ.க அரசாங்கம் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைத்துள்ளது. விவசாயத்துறை நெருக்கடியை எதிர்கொண்டு சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2021 – 22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் திருத்திய மதிப்பீட்டின்படி 4,74,750.47 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீடு 3,70,303 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, நிதி ஒதுக்கீடு சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நெல் மற்றும் கோதுமை கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 10,000 கோடி ரூபாய்க்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்ட இயக்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தைப் பற்றி நிதியமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை. சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்ற நமது நாட்டின் விவசாயிகளிடம் தோல்வியுற்றதை பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை விவசாயிகள் திரும்பப் பெற வைத்தனர். இதற்குப் பதிலடியாக, பழிவாங்கும் நடவடிக்கையாக, பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் ஊரகப் பொருளாதாரத்தை முடக்குகிறது.

மக்களை பிரதிநிதிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஒரு அரசாங்கத்திற்கு பழி உணர்ச்சியானது உரிய தகுதிப்பாடாக இருக்க முடியாது.

பெருந்தொற்று காரணமாக உண்டாகியுள்ள பொருளாதார பேரழிவு மற்றும் பெருந்தொற்று காலத்திற்கு முன்பாகவே, அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு ஆகியவற்றில் இருந்து மீண்டெழ இந்திய பொருளாதாரம் இப்போதும் முயன்று வருகிறது. ஆனால், இந்த அரசாங்கத்திற்கு நுகர்வோர் நிலை தேவை (Demand) பற்றிய, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள நிலை தேவைப் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லை என்றே தோன்றுகிறது. ஊரக மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு 5.59 சதவிகிதத்தில் இருந்து 5.23 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

பெருந்தொற்று காலத்தின் போது அதீத வறுமை காரணமாக, ஆதரவற்றுக் கிடந்த கோடிக்கணக்கான மக்களை ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்’ பாதுகாப்பு அரணாக நின்று காத்தது. 2021 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்கான நிலை தேவை 4.59 கோடி நபர்கள் என்ற அளவில் இருந்தது. இருப்பினும், நிலவி வரும் வேலையின்மை குறித்த எண்ணிக்கை நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது தவறான பொருளியல் நிலைப்பாடு மட்டுமின்றி, தவறான அரசியல் நடைமுறையும் ஆகும். வேலைகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் மீது அரசாங்கத்திற்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதையே இந்தப் போக்கு அம்பலப்படுத்துகிறது. 2021 – 22 ஆம் ஆண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு 98,000  கோடியாக இருந்தது. ஆனால், 2022 – 23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு 73,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையும், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளும் கடந்த ஆண்டில் பலமுறை தலைப்புச் செய்திகளாக வெளியான போதும், பா.ஜ.க அரசாங்கத்தின் செவிட்டுக் காதுகளில் விழுவதாக இல்லை. சமூகச் செல்வத்தின் உண்மையான உற்பத்தியாளர்களான இந்நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை இந்த அரசாங்கம் அதன் வசதிக்கேற்ப மறந்துவிட்டு, கார்ப்பரேட் எஜமானர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து வருகிறது.

‘சமத்துவமின்மை வதைக்கிறது’ (Inequality Kills) என்ற தலைப்பில் ஆக்ஸ்பேம் இண்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை அண்மையில் வெளியானது. நமது நாட்டில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவது குறித்து இந்த அறிக்கை எச்சரித்துள்ளது. மேலும், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு:

“2020 ஆம் ஆண்டில் 102 ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெருந்தொற்று காரணமாக, மோசமான ஆண்டாக அமைந்துவிட்ட 2021 ஆம் ஆண்டிலும் கூட 142 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,2021 ஆம் ஆண்டில், நாட்டின் மக்கட்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்களின் பங்கு தேசிய சொத்துக்களில் வெறும் ஆறு சதவிகிதம் ஆகும்.”

தற்போதைய அபாயகரமான சூழலை மாற்றிட, இந்தியாவின் பணக்காரர்களுக்கு ஆதரவான வரிவிதிப்பு கொள்கைகளில் மாற்றங்கள் செய்திடவும், ஏழை மக்கள் தங்களுக்கான சேவைகளை எளிதில் பெற்றிடவும், இந்த அறிக்கையில் சில சிறிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.

இந்தியாவில் உள்ள 98 பணக்கார குடும்பங்களின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் 4 சதவிகித வரி, இரண்டு ஆண்டுகளுக்கும் கூடுதலாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்திட, 17 ஆண்டுகளுக்கு நாட்டின் மதிய உணவு திட்டத்தையும் செயல்படுத்த வழிவகை செய்யும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுபோலவே, 98 கோடீஸ்வர குடும்பங்களின் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் 1 சதவிகித வரி, 7 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதித் தேவையை நிறைவு செய்யும் அல்லது இந்திய அரசின் பள்ளி கல்வித் துறையின் நிதித் தேவையை ஓராண்டு காலத்திற்கு நிறைவு செய்யும்.

துரதிர்ஷ்டவசமாக, மக்கள் விரோத போக்கைக் கொண்டுள்ள இந்த அரசாங்கம், அதன் பணக்கார மற்றும் முதலாளித்துவ நண்பர்கள் கொஞ்சமும் பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது.செல்வ வளங்களை மறுபகிர்மானம் செய்யும் தொலைநோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றாலும், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கூட பா.ஜ.க அரசாங்கத்தால் மேற்கொள்ள முடியவில்லை.

பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் பொது சுகாதார கட்டமைப்பு மிக மோசமாகத் தகர்ந்து போனதுடன் பொறுப்புடைத்தன்மையற்ற, பாகுபாடு கொண்ட மற்றும் ஏழை மக்களுக்கு எட்டாத தனியார் மருத்துவத் துறையின் மீது உள்ள அதீத சார்பு என்னும் அரசாங்கத்தின் மூடத்தனத்தையும் வெளிப்படுத்தியது. பெருந்தொற்று காலத்தின் மூன்றாவது அலையின் போதுகூட, அரசாங்கம் படிப்பினைகளைப் பெற மறுக்கிறது.

மக்களின் சுகாதாரமும், நலமும் நிதிநிலை அறிக்கையின் 6 தூண்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு மிக அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற இந்தத் துறைக்கான நடப்பு ஆண்டு ஒதுக்கீடு மிகச் சொற்பமான அளவுக்குத் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு 0.96 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடு 3.90 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைய இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல. மேலும், துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்தப் புதிய அறிவிப்புகளும், சொற்ப நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்பும், பொது சுகாதார உள்கட்டமைப்பு மூலமாக தனியார் துறைக்குப் பயனளிக்கக் கூடியதாகவே உள்ளன.

கோவிட் தடுப்பூசிக்கான நிதி ஒதுக்கீடு 87 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று அபாயத்தில் இருந்து நாம் மீண்டுவிட்டதாக அரசாங்கம் கருதுவதைத் தான் இது சுட்டிக் காட்டுகிறது. பசி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து சமூக குறியீடுகளில் இந்தியாவின் வீழ்ச்சியானது மோடி ஆட்சிக்காலத்தின் சிறப்பம்சமாகத் துலங்குகிறது. இவற்றை சீர்படுத்துவதற்குப் பதிலாக, பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை 11,500 கோடி ரூபாயில் இருந்து 10,233 கோடி ரூபாயாக (11 சதவிகிதம் ) குறைந்திருப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

பள்ளி கல்வியில் சேர்க்கப்படாத குழந்தைகள் (6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட ) 2018 ஆம் ஆண்டில் 2.5 சதவிகிதம் என்றும், 2021 ஆம் ஆண்டில் 4.6 சதவிகிதம் என்றும் ASER (Annual Status of Education Report ) கூறுகிறது. கல்வி பெரும் உரிமை புதைகுழியில் தள்ளப்படுவது தெளிவாகத் தெரிகிறது. இந்த அறிக்கையின்படி உற்று நோக்கினால், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கிறது. பொது சுகாதாரம், கல்விமற்றும் வேலைவாய்ப்பு இவையனைத்தும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க ஆட்சியின் கீழ் தேசத்தின் வருங்காலம் ஒளி வீசக்கூடியதாக இல்லை.

அரசியல் ஆதாயத்திற்காக, பிற்படுத்தப்பட்ட சமூக நிலையில் இருந்து உயர்ந்திருப்பதாகத் தன்னைப் பற்றிப் பிரதமர் பெருமை பொங்க தம்பட்டம்அடித்துக் கொள்கிறார். ஆனால், சமூகநீதி மறுக்கப்படுவதே அவரது ஆட்சியின் அம்சமாகத் திகழ்கிறது. பெருந்தொற்றினால் சாதாரண மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பகுதியினராக உள்ள தலித்துகள் மற்றும் இதர விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை நிவாரணம் எதுவும் வழங்கவில்லை.

போட்டிக்கான சமதள வாய்ப்பு குறைவாக இருக்கும் சூழலில், அதனை மேலும் சீர்குலைப்பது போல், எவ்வித மேற்பார்வையும் இன்றி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கல்வி நிறுவனங்களைத் திறந்திட வழிவகை செய்ய அரசாங்கம் உத்தேசிக்கிறது. இத்தகைய பல்கலைக்கழகங்கள், அவற்றின் கட்டணமுறை மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் சமூகநீதிக்கு எதிரான போக்கு ஆகியவை வசதி படைத்தோருக்கு மேலும் பயனளிக்கும் என்பதோடு தலித்துகள் மற்றும் இதர விளிம்புநிலை சமூகத்தவருக்கு மேலும் பாதிப்புகளை உண்டாக்கும். அதிகரித்து வரும் தனியார்மயம் சமூகநீதி கோட்பாட்டின் வேர்கள் மீது பலமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. ஆனால், அரசாங்கம் எவ்வித தயக்கமும் இன்றி, அதற்கே உரித்தான பிரத்தியேக கார்ப்பரேட் ஆதரவு செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.   

நமது சமுதாயத்தின் விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை. சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மைச் சமூக நலத்துறை ஆகிய அமைச்சகங்களுக்கு மிகச் சொற்பமான அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவருக்கான திட்டம், பழங்குடி இனத்தவருக்கான துணை திட்டம் ஆகியவை இல்லாத நிலையில், மோடி அரசாங்கமும், நிதி ஆயோக் அமைப்பும் அந்த மக்கள் திரளை அண்டிப் பிழைக்கும் கூட்டம் என இழிவுபடுத்தி வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை’ கூட இல்லாதவர்களாக அந்த மக்கள் இழிவுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

நுகர்வோர் நிலை தேவையை உருவாக்கிட, பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், நேரடி நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தன. ஆட்சியில் உள்ளவர்களின் சிந்தனைக்கு இந்தக் கோரிக்கை எட்டவில்லை. வறுமை, சமத்துவமின்மை, வேலையின்மை மற்றும் நோய் ஆகியவற்றின் பிடியில் தேசம் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த அரசாங்கமோ, ‘மூலதன செலவினம்’ வளர்ச்சியை உருவாக்க இருக்கிறது என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.

மூலதன செலவினத் தொகையில் பெரும் பகுதி ஏர் இந்தியா நிறுவன கடன் மற்றும் ராணுவ செலவினங்களுக்கானத் தொகை ஆகும். ‘தேசியமயமாக்கப்பட்ட நஷ்டங்கள் மற்றும் தனியார்மயமாக்கப்பட்ட லாபங்கள்’ என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஏர் இந்தியா விவகாரம் உள்ளது. இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மோடி அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது. ஆனால், நிதியமைச்சரோ 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக மீண்டும் வாக்குறுதி அளிக்கிறார்.

இவர்களின் வானளாவிய வாக்குறுதிகளும், முடிவான தோல்விகளும் ஜேம்ஸ் பால்டுவினின் கூற்றை நமக்கு நினைவூட்டுகிறது:

“நீங்கள் உரைப்பதை என்னால் நம்ப இயலவில்லை ஏனென்றால் நீங்கள் செய்வதை நான் காண்கிறேன்.”

சமுதாயத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் அரசாங்கம் மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது. அனைவரும் இதைக் கண்டுணர்ந்து வெகுண்டெழ வேண்டும்!

தமிழில் – அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button