ஏப்ரல் – 12 ஆளுநருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாய் பங்கேற்பீர்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் எல்லை மீறிய அத்துமீறல் நடவடிக்கையைக் கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் நாளை, மறுநாள் (12.04.2023) புதன்கிழமை மாலை நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அழைக்கிறது.
ஆளுநர் என்பவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, அமைச்சரவை மற்றும் சட்டமன்றப் பேரவையின் ஆலோசனையைப் பெற்றும், ஏற்றும் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றி வர வேண்டியவர். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, தனது தனித்த விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் மாநில மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தியும், அவமதித்தும் வருகிறார். அவரது நடவடிக்கை மக்களாட்சி முறையைச் சிதைக்கும் அதிகார வர்க்க, சர்வாதிகார முறையில் இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான “நீட்” தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த, மாநில வளர்ச்சி மற்றும் நலன் தொடர்புடைய சட்ட மசோதாக்களை நிராகரித்து விட்டதாகக் கூறியுள்ள ஆளுநர், மாநில அரசிற்கு அது போன்ற சட்டங்களை நிறைவேற்ற உரிமையில்லை என கூறி, ஆணவத்தின் உச்ச நிலைக்குச் சென்றுவிட்டார்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் அதிகாரத்தை அத்துமீறி, ஜனநாயகத்தை மதிக்காதவராக, தமிழக சட்டப்பேரவையைத் தூக்கி எறிந்து பேசும் திமிரோடு, செயல்பட்டு வருவதை அனுமதிக்க முடியாது என்பதை தமிழக மக்கள் ஒன்றுபட்டு எச்சரிக்கும் முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டிய ஆளுநர், ஆர்எஸ்எஸ்- பாஜக குடும்பங்களின் (பரிவார்) சேவகனாக செயல்பட்டு, மக்கள் அமைத்துள்ள அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கம் நடத்துவதை ஒரு வினாடியும் அனுமதிக்க முடியாது. திரு.ஆர்.என்.ரவி ஆளுநராகப் பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளும் சர்ச்சைகளை உருவாக்கும் சர்ச்சைக்குரிய மனிதராக செயல்பட்டு வருகின்றார்.
தூத்துக்குடி மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையைச் சீரழித்த, சுற்றுச் சூழலுக்குக் கேடு செய்த, வேதாந்த நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தையும், உயிர் தியாகம் செய்தவர்களையும் கொச்சைப்படுத்துகின்றார்.
அறிவுலகம் பேரறிவாளர் எனப் போற்றிப், பாராட்டும் காரல் மார்க்ஸ், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் போன்ற தலைவர்களை இழிவுபடுத்துகின்றார். தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றார்.
ஆளுநர் பொறுப்புக்குத் துளியும் பொறுப்பில்லாத ஆர்.என்.ரவி ஆளுநராகத் தொடர தார்மீக உரிமை அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் அவரை உடனடியாகக் குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும், என வலியுறுத்தி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்கள் பெரும் திரளாகப் பங்கேற்று கண்டனம் முழங்க முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.