`ஏக்கருக்கு ₹30,000; குடும்பத்துக்கு ₹10,000 வேண்டும்!’ – மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அவர்களிடம் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சுமார் 13,500 ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. மழை, வெள்ளத்தால் சேதம் ஏற்பட்ட பயிர்களை கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய அமைச்சகத்தின் உள்துறை இணை செயலாளர் ராஜீவ்சர்மா தலைமையில் விஜய்ராஜ்மோகன், ரஞ்சன்சிங், வரபிரசாத் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று சீர்காழி அருகே புத்தூர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், பயிர்கள், வீடுகள் குறித்த புகைப்படங்கள் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அதனை மத்திய குழுவினர் பார்வையிட்டு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது குழுவினரிடம் மயிலாடுதுறை விவசாயிகள் கொடுத்த கோரிக்கையில், “மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் சம்பா பயிர் சேதம் அடைந்து விட்டது.
நிவாரணம்
எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் வெள்ள நிவாரண தொகையாக ரூ.10,000 வீதம் வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.