தமிழகம்

ஏஐடியூசி-ன் 20 வது தமிழ் மாநில மாநாடு: முதல் நாள் நிகழ்வுகள் குறித்த செய்தித் தொகுப்பு

செய்தித் தொகுப்பு: இதழாளர் இசைக்கும்மணி

ஏஐடியூசி 20வது தமிழ் மாநில மாநாடு நெல்லை கொக்கிரக் குளம் ரோஸ் மஹால் குருதாஸ் தாஸ்குப்தா நகர் ஆர்.ஏ. கோவிந்தராஜன் நுழைவு வாயில் ஜி.மணியாச்சாரி நினைவரங்கில் டிச.01 அன்று காலை சங்கத்தின் மூத்த தோழர் ஏ. சாமி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாநாட்டு வாயிலிலிருந்த தியாகஜோதிக்குத் தலைவர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.

கே சுப்பராயன் MP தலைமையில் தொடங்கிய பொது மாநாட்டில் ஆர். சடையப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். சங்கத்தின் மாநில செயலாளர் இராதாகிருஷ்ணன் மறைந்த தோழர்கள் தா.பாண்டியன், நியூஏஜ் பைசி, ஜி. மணியாச்சாரி, அழகுமுத்து பாண்டியன், சுசிலா, ஜனசக்தி ராஜ்மோகன், பன்னீர்செல்வம், மதுரை நடராஜன், எழுத்தாளர்கள் முகமது மீரான், ஜேக்கப் வாத்தியார், பா.செயப்பிரகாசம், திரைப்பட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன், ஆரூர்தாஸ், லதா மங்கேஸ்கர், சமூக ஆர்வலர்கள் ஸ்டேன்ஸ்சாமி, ஈரோடு டாக்டர் வெ.ஜீவானந்தம் உள்ளிட்ட பலருக்கும் அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நிமிட நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

பொது மாநாட்டை தலைமை ஏற்று கே.சுப்பராயன் பேசியதாவது: தொழிலாளி வர்க்கம் சங்க ரீதியாகப் போராடி உரிமைகளை வென்றெடுத்தது. நீண்ட போராட்டத்தின் வாயிலாகவே அவை அனைத்தும் பெறப்பட்டது. ஒன்றிய அரசு தொழில்கள் அனைத்தையும் பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து வருகிறது. தொழிலாளர் சட்டங்களை முடக்கி வருகிறது. இவற்றையெல்லாம் எதிர்த்திட தொழிற்சங்கத்தைப் போர்குணமிக்கதாக மாற்றி அமைத்திட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: இதற்கு முன்னிருந்த பிரதமர்கள் எல்லாம் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி வளர்த்தெடுத்திருக்கிறார்கள். மோடி ஆட்சி இவற்றிற்கு எதிராகச் செயல்பட்டு பொதுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருகிறது. இதனை இந்திய தொழிலாளி வர்க்கமும் தொழிற்சங்கங்களும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனப் பேசினார்.

உலக தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் பேசியதாவது : பாதுகாப்புத்துறை உற்பத்தியில் சுயசார்பு அடைவதற்குப் பதிலாக பாதுகாப்புத்துறை தொழில்கள் தேக்கமடைய வைக்கப்பட்டு தனியாருக்கு, பெருமூலதனத்தாரர்களுக்கு கைமாற்றப்பட்டு வருகிறது. அத்துறையின் 2 லட்சம் கோடி பெறுமானமுள்ள இந்த நிறுவனங்களும் அவற்றிற்குச் சொந்தமான பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபுலன்களும் விலை பேசப்பட்டு தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இராணுவத்துக்கான ஆள்சேர்ப்பும் அக்னி பாத் அக்னி வீர் என்ற ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைத்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் எதிர்த்திட வேண்டிய கடமையுள்ளவர்களாக தொழிற்சங்கங்களே முன்னிற்க வேணண்டியுள்ளது. வாழ்வதற்காகப் போராடு! போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொள்ளுங்கள் என்கிற குருதாஸ் தாஸ்குப்தாவின் முழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என பேசினார்.

பொது நாட்டுக்குப் பின்னர் பிரதிநிதிகள் மாநாடு மதியம் தொடங்கியது. பொதுச் செயலாளர் அறிக்கை முன்வைக்கப்பட்டு அதன் மேலான விவாதங்களும் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாலை 5:30 மணியளவில் “ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்!” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் அகில இந்திய பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சண்முகம் பேசும்போது தொழிலாளர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வெற்றி அடையச் செய்ய வேண்டும். அதற்கு தொ.மு.ச பேரவை உறுதுணையாக இருக்கும் எனப் பேசினார்.

சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாரன் பேசும் போது, 11 அகில இந்திய தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது போன்ற ஒன்றுபட்ட போராட்டங்கள் நடக்காமல் இருந்திருந்தால் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் என்றைக்கோ விலை போயிருக்கும். ஆகவே, ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு இருக்கும் பௌதிக சக்தியினை உணர்ந்து ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்! நமது கொள்கைகள் வேறானாலும் லட்சியம் ஒன்றுதான் எனப் பேசினார்.

ஹிந் மஸ்தூர் சங்கத்தின் (ஹெச்.எம்.எஸ் ) தமிழ் மாநிலச் செயலாளர் மு.சுப்பிரமணியன் பேசும்போது: எல்லோரும் ஒன்றுபட்டு போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அப்படியான ஒன்றுபட்ட போராட்டங்களையும் விழிப்புணர்வு உள்ளதாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது எனப் பேசினார்.

ஏஐயுடியுசி-யின் மாநிலத் தலைவர் அ.அனவரதன் பேசும் போது: ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்,இல்லையென்றால் எதிரிகளால் வெல்லப்படுவோம்! 28 கோடி தொழிலாளர்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்று இருப்பதானது தொழிற்சங்கங்களின் ஒற்றுமையையே வெளிப்படுத்துகிறது. தொழிலாளர்களாகிய நாம் பின்தங்கிவிடாமல் முன்னேறிச் செல்ல மக்களோடு இணைந்து மேற்செல்ல வேண்டும் எனப் பேசினார்.

ஏஐசிசிடியு-ன் மாநிலப் பொதுச் செயலாளர் க. ஞானதேசிகன் பேசும் போது கார்ப்பரேட்டுகளை மதவாத சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும் 4ஆக சுருக்கப்பட்டு திருத்தப்பட்டதற்கு எதிராக கூட்டு போராட்டமே மேலெடுக்கப்பட்டிருக்கிறது எனப் பேசினார்.

கருத்தரங்க நிகழ்வுக்கு தலைமை ஏற்று ஒருங்கிணைத்து நடத்திய ஏஐடியூசியின் தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் பேசியதாவது: ஒன்றிய அரசானது தொழிலாளர் விரோத அரசாகவே இருப்பதை எதிர்த்திட தொழிலாளி வர்க்கமும், தொழிற்சங்களும் கூட்டமைப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்! வெற்றி பெறுவோம் எனப் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button