எழுத்தாளர் அம்பை சாகித்திய அகாடமி விருது வென்றார்
புதுதில்லி, டிச.30- 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பிரபல பெண் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் தில்லியில் வியாழக் கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 20 மொழிகளில் சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்டவற்றுக்கு விருதா ளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், தமிழ் மொழியில் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாதெமி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழின் சிறந்த பெண் படைப்பாளர்களில் அம்பை குறிப்பிடத்தக்கவர். இவரது இயற்பெயர் சி.எஸ். லட்சுமி. அவருக்கு வயது 77.1960 ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, நாவல்களை எழுதி வருகிறார். பெண்களின் மனங்களை வெளிப்படுத்தும் கதை களை அதிகம் எழுதியுள்ளார். சொந்த ஊர் கோயம்புத்தூர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். 1962-ஆம் ஆண்டிலிருந்து எழுத்துப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
பால சாகித்திய புரஸ்கார் விருது
குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்பாளிகளுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கு வழங்கப்பட்டது. தமிழில் இந்த விருதை மு.முருகேஷ் வென்றுள்ளார். இவர் எழுதிய அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதைக்கு வழங்கப்பட்டுள்ளது. மு.முரு கேஷின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம். 6.10.1969-ஆம் பிறந்தார். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதியுள்ளார்.