கட்டுரைகள்

என்று தீரும் அவர்களின் இன்னல்கள்…!

கோவை சதீஸ் கார்க்கி

மனிதக்கழிவை அகற்ற மனிதர்களைப் பணியமர்த்த தடை மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டம்  2013 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் மனிதக்கழிவை வெறும் கையால் சுத்தம் செய்ததால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. ஆனால், கழிவு நீர் குழாய்களையும், கழிவு நீர் தொட்டிகளையும் (septic tank) சுத்தம் செய்யும் போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 340.  ஆனால், இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. இது எவ்வாறு நடந்து கொண்டு இருக்கிறது என்பதைத் திரைப்படமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் தீபக்.  அத்திரைப்படம் தான் விட்னஸ். திரையரங்குகளில் வெளியாகமல் OTT தளத்தில் சோனி லைவ்வில் வெளியாகி இருக்கிறது.

‘இந்திரா’ என்கிற தூய்மை பணியாளரின் மகனான பார்த்திபன் கல்லூரியில் படித்து வருகிறான். மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற அக்கறையில் கடன் பெற்று படிக்க வைக்கிறாள். மகனும் நன்றாகப் படித்து, அம்மாவை நல்ல நிலையில் கவனிக்க வேண்டும் என்று படித்துக் கொண்டே பகுதி நேர வேலையாக நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக வேலை செய்கிறான். 

ஒருநாள் இரவில், பார்த்திபன் வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட இந்திரா பக்கத்து வீட்டில் விசாரித்து கொண்டு இருக்கிற நேரத்தில், பாரத்திபனின் நண்பன் சூர்யா இந்திராவிற்குப் போனில் அழைத்து, பார்த்திபன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான். விரைவாக வரவும் என்கிறான். பார்த்திபனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது. அதற்கு காரணம் யார்? இந்திரா, பார்த்திபனின் மரணத்திற்கு நீதி கேட்டு என்ன செய்தாள்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா ? அல்லது தப்பித்துவிட்டார்களா? என்பது தான் படத்தின் கதை.

இனி படத்தில் இருக்கும் சிறப்பான விசயங்களையும், நடைமுறையில் தூய்மை பணியாளர்கள் நிலை என்ன? ஒன்றிய அரசு புதிதாக மாற்றி அமைத்து இருக்கும் தொழிலாளர் சட்டங்கள் என்ன சொல்கின்றன? இச்சட்டங்கள் தூய்மை பணியாளர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில் இருக்கிறதா? இப்பிரச்சனைக்குக் காரணம் என்ன? அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண எந்த அரசியல் உதவும்? இதில் சாதி ஒடுக்குமுறைகள் எவ்வாறு அரங்கேற்றப்படுகிறது?  உழைப்பு மற்றும் பொருளாதார சுரண்டல் எவ்வாறு நிகழ்கிறது? உள்ளிட்ட விசயங்களைப் படத்தின் காட்சிகளோடும் இதர விசயங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

படத்தின் ஆரம்ப காட்சிகளில் மாநகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டும் இடங்களில் கான்ட்ராக்ட் எடுத்து இருப்பவர்கள், சப் கான்ட்ராக்ட் விட்டு இருப்பார்கள், சப் கான்ட்ராக்ட் நிறுவனத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் இரவு நேரங்களில் சாலைகளைத் தூய்மை செய்து கொண்டு இருப்பார்கள், இரவு நேரங்களில் வாகனம் தொழிலாளர்கள் மீது மோதாமல் இருக்க மிளிரும் தன்மை உள்ள (high visibility jacket) ஆடையைத் தூய்மை பணியாளரிகளில் ஒருவர் மட்டுமே அணிந்து இருப்பார், மீதம் உள்ள தொழிலாளர்கள் அத்தகைய ஆடை இல்லாமல் பணிபுரிவார்கள், சாலையில் இருக்கும் குப்பைகளை அகற்ற பெரிய கைப்பிடியுடன் கூடிய வளையும் தன்மையில் உள்ள (முதுகுவலி வாரமல் இருக்க) சாதனங்கள் இல்லாமல் சீமார் குச்சிகளைக் கொண்டு குனிந்து கொண்டே தூய்மை செய்வார்கள், கையுறை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகாரணங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில்தான் வேலை செய்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் தூய்மை செய்த பின்பு சூப்பர்வைசர் செல்போனில் புகைப்படம் எடுப்பார். அவ்வாறு எடுத்தால் தான், தொழிலாளர்களது வருகை உறுதி செய்யப்படும், அவ்வாறு இல்லையென்றால் அவர்களுக்கு அன்று வருகை ரத்து செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வேலைக்கு வரமால் இருந்தால், சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இதனால், தொழிலாளர்கள் உடல்வலி, உடல்நலக் குறைவு பிரச்சனைகள் இருந்தாலும் வேலைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்கிற நிலை உருவாக்கப்பட்டு இருப்பதையும், வேலை நேரங்களில் உடல் வலி காரணமாக சற்று ஒய்வு எடுப்பதை சூப்பர்வைசர் பார்த்தால் ஒருமையில் திட்டுவதும், பெண் தொழிலாளர்களிடம் பாலியல் ரீதியாக கேலி செய்வதும் தினசரி இயல்பான நிகழ்வாக நடந்து கொண்டு இருப்பதை இயக்குனர் நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

அரசு பணியாளர்களாக மாநகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்காமல் இருப்பதைக் கண்டித்து இடதுசாரி தொழிற்சங்கம் போராட்டம் நடத்துவதையும் படத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். நடைமுறையிலும், இத்தகைய பிரச்சனை இருக்கிறது.  இடதுசாரி தொழிற்சங்கங்கள் இத்தகைய போராட்டங்களை நடத்தி வருவதை பத்திரிக்கை செய்திகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்து கொண்டு வருகிறோம்.

இந்த நிலையில், ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கும் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பில் தூய்மை பணியாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அம்சங்கள் இருக்கின்றனவா? என்பதை பார்த்துவிட்டு பிறகு படத்தின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பில் இருக்கும் சிக்கல்கள்:

இந்தியாவில் இருக்கும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை வழங்கவில்லை, இதன் மூலம் இந்திய அரசாங்கம் தனது கடமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இருக்கிறது..

எந்த ஒரு நிறுவனம், தொழிற்சாலை 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு இருக்கிறதோ அவர்களுக்குத் தான் PF செல்லுபடியாகுமாம்!

இதனால் 10க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்டு உள்ள  நிறுவனங்களில் இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு PF என்பது இல்லாமல் போகும்.

அமைப்பு சாராத தொழிலாளர்கள் இதனால் பெரிய அளவில் பாதிப்படைவார்கள்.இந்தியாவில் 90% தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொழிற்சங்கம், போராடும் உரிமையை நாம் பெற்று இருந்திருக்கிறோம். அத்தகைய உரிமையைச் சிதைக்கும் வகையில் பல திருத்தங்களைச் செய்து மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது ஒன்றிய அரசு.

தொழிற்சங்க உரிமை அதன் செயல்பாடுகள், அதிகாரங்கள் என அனைத்தையும் முடக்கி இருக்கிறது ஒன்றிய அரசு..

இனிமேல், தொழிலாளர்களுக்கு சம்பள பிரச்சனை, பாதுகாப்பு பிரச்சனை, ஓவர் டைம் பிரச்சனை, இழப்பீடு பிரச்சனை போன்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் நேரடியாக கம்பெனி நிர்வாகத்தை மட்டுமே அணுக முடியும். கம்பெனி நிர்வாகம் தொழிலாளர் குறை தீர்க்கும் குழு அமைத்து இருக்க வேண்டும், அந்த குழுவில் தான் இப்பிரச்சனை பற்றி பேச முடியும்.

அக்குழுவில் பத்து நபர்கள் இருப்பார்கள், ஐந்து நபர்கள் தொழிலாளர் சார்பாக அல்லது பிரதிநிதியாகவும்  மீதி ஐந்து நபர்கள் கம்பெனி நிர்வாக பிரதிநிதிகளாவும் இருப்பார்கள். இக்குழுவிற்கான தலைவர் பதவி ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். எவ்வாறு என்றால் முதல் ஆறு மாதம் தொழிலாளர்கள் பிரதிநிதி என்றால் அடுத்த ஆறு மாதம் கம்பெனி நிர்வாக பிரதிநிதி. இந்த குழுவில் தான் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இதை மீறி தொழிற்சங்கம் அமைத்து தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் முறையிட்டு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒரு பயனும் இல்லை. ஏன் என்றால் தொழிலாளர் நலத்துறை அதிகாரியின் உரிமைகளை, அதிகாரங்களை முடக்கி இருக்கிறார்கள். அவரால் ஒன்றும் செய்ய முடியாது. தொழிலாளிக்கு கடைசியாக இருக்கும் வாய்ப்பு நீதிமன்றம் மட்டுமே. தொழிலாளி நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றால் அந்த மாவட்டத்தில் இருக்கும் நீதிமன்றங்களை அணுக முடியாதாம், மாநில அளவில் இருக்கும் ஒரு சில தீர்ப்பாயத்தை தான் அணுக முடியும்.

ஒரு கிராமத்தில் இருக்கும் தொழிலாளியோ அல்லது சாமனிய தொழிலாளியோ இதற்கு என்று பணத்தையும் நேரத்தையும் செலவிட முடியுமா?

இனி ஒரு முதலாளி நினைத்தால் எந்தவித முன் அறிவிப்புமின்றி FTE fixed term employment முறையில் பணி அமர்த்தப்பட்ட தொழிலாளியை நீக்க முடியும். எந்த விதமான நோட்டீஸ் வழங்கவும் தேவையில்லை. வேலை நீக்கத்திற்கான சம்பள தொகையும் வழங்கத் தேவையில்லை.

அதாவது FTE முறையில் 100 தொழிலாளியை ஒரு முதலாளி பணி அமர்த்துகிறார் என்று வைத்துக் கொள்வோம், முதலாளி அவர்களை தொடர்ந்து கூடுதல் நேரத்திற்கு வேலை செய்ய நிர்பந்தம் செய்கிறார். இதனை, ஒரு கட்டத்திற்கு மேல் தொழிலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றால் அவர்களில் 20 நபர்களை நீக்கி மீதி 80 நபர்களை நேரடியாக நிர்பந்தம் செய்ய முடியும். சரியாக போனஸ் வழங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு எவ்வித காரணம், அறிவிப்பு இன்றி நீக்கவும் முடியும்.

ILO வழிகாட்டுதலை நிராகரித்து இருக்கிறதது இந்த புதிய தொழிலாளர் சட்ட மசோதா. ILO-International Labour Organisation வழிகாட்டுதல்படி தொழிலாளர்களுக்கு உரிமையை வழங்குவது, தீர்மானிப்பது அரசின் கடமையாகும். அதனை தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் சொல்கிறது.எனவே தான் முத்தரப்பு என்ற அம்சம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. தொழிலாளர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தொழிலாளர் தரப்பு, முதலாளி தரப்பு, அரசு தரப்பு – இந்த முத்தரப்பு கலந்து, அதனை பேசி தீர்க்கும். இதில் அரசு தரப்புக்கு என்று அதிகாரங்கள் பல இருந்தன. இது பழைய தொழிலாளர் நலச் சட்டத்தில் இருந்தது..

புதிய தொழிலாளர் சட்ட திருத்த மசோதா 2020இல் முத்தரப்பு என்ற அம்சத்தை நீக்கி இருக்கிறது ஒன்றிய அரசு, அரசு தரப்பிற்கு இனி அதில் பெரிய பங்கு இல்லை, இனி தொழிலாளர் தரப்பு, முதலாளி தரப்பு மட்டுமே. அவர்களே பேசி பிரச்சனையை தீர்த்து கொள்ள வேண்டும். ஒரு அரசு தனது குடிமகனுக்கு ஜனநாயக ரீதியாக செய்ய வேண்டிய கடமையை ஒன்றிய அரசு முடக்கி இருக்கிறது. இது ILO விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

தொழிலாளி தரப்பு, முதலாளி தரப்பைத் தாண்டி தொழிலாளி நீதிமன்றத்தை நாடுவதில் கூட சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. 

இச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் தூய்மை பணியாளர்களது நிலை மிக மோசமான கட்டத்தை அடையும். இதனைக் கண்டித்து சென்ற ஆண்டு தொழிற்சங்கள் சார்பாக தேசிய அளவில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி படம் வெளிப்படுத்தி இருக்கும் முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.

தொழிலாளர்கள் குடிக்கும், அதிக பணத்திற்கும் ஆசைப்பட்டுத் தான் கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்கிறார்கள். இதனால் தான் மரணம் நிகழ்கிறது என்ற ஒரு கட்டமைக்கப்பட்ட கருத்தைப் படத்தின் ஒரு காட்சியில் வைத்து இருக்கிறார் இயக்குனர். அடுக்குமாடி குடியிறுப்பு கழிவுநீர் தொட்டியில் இருக்கிற அடைப்பை இயந்திர லாரியைக் கொண்டு சரி செய்திட முடியும். ஆனால், அவ்வாறு இல்லாமல் ஒரு தொழிலாளியைப் பணியமர்த்தக் காரணம் பொருளாதாரம் தான். இயந்திர லாரியை பயன்படுத்தினால் ஐந்தாயிரம் வழங்க வேண்டும், ஒரு தொழிலாளியைப் பயன்படுத்தினால் ஆயிரம் ரூபாய் வழங்கினால் போதும், இதனால் அவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும். தொழிலாளியை கழிவுநீர் தொட்டியில் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி இறங்க வைப்பது சட்டப்படி தவறு என்று தெரிந்து தான் இந்த வேலையை தொழிலாளிக்கு வழங்குகிறார்கள். 

எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளி கழிவுநீர் தொட்டில் இறங்கி விஷவாயு தாக்கி மரணமடைகிறான். இத்தகைய மரணத்தை வைத்துக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் மரணமடைந்த குடும்பத்திற்கு உதவாமல் வழக்கு பதிவு செய்யாமல் சமரசம் செய்தால் பணம் கிடைக்கும், நீதிமன்றம் சென்று வழக்கு நடத்துவது கடினம் என்று நயவஞ்சமாக பேசி பணத்தை பெற்றுக் கொண்டு அதில் ஒரு பகுதியை அபகரித்து கொள்கிறார்கள். 

மேலும் இத்தகைய மரணங்கள் பெரும்பாலும் மாநகராட்சியால் ஒப்பந்தம் விடப்படும் இடங்களில் தான் அதிகமாக நடைபெறுகின்றன. இதனை கான்டிராக்ட் எடுப்பவர்கள், சப் கான்டிராக்ட் எடுப்பவர்களுக்கு விடுகிறார்கள். யார் குறைவான தொகைக்கு ஒப்பந்தம் செய்ய முன் வருகிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. கான்டிராக்ட் எடுத்தவர் சப் கான்டிராக்ட் எடுப்பதற்கு  யார் குறைவான தொகைக்கு ஒப்பந்தம் செய்ய வருகிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்குவார். இத்தகைய ஒப்பந்தகளில் பிரதான அம்சமாக இருப்பது பொருளாதாரம் மட்டுமே, கான்ட்ராக்ட், சப் கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனங்களிடம்  பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறதா? இயந்திரங்கள் இருக்கிறதா? என்பதை பற்றி எல்லாம் அக்கறை இல்லை. லாபம் ஒன்று தான் அவர்களது இலக்கு. தொழிலாளர் நலன் குறித்த அக்கறை எல்லாம் கிடையாது, இத்தகைய நிலைகளும் இந்த மரணத்திற்கு காரணமாக அமைகின்றன.

மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை பணியமர்த்த தடை மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டம்  2013படி கையாள் மலம் அள்ளுவது ,எந்த விதமான பாதுகாப்பும் இன்றி கழிவு நீர்க் குழாய், கழிவு நீர் தொட்டியில் இறங்கி வேலை செய்வது தான் தவறு என்று சட்டம் சொல்கிறது தவிர இறங்கவே கூடாது என்று கூறவில்லை, அது சாத்தியமில்லை என்று படத்தில் வருகின்ற வசனம் மிக முக்கியமானது. இந்த வேலை முழுமையாக இயந்திரமாக்கப்படவில்லை. மேலும் 

இன்றைய காலக்கட்டத்தில் நூறு நபர்கள் வசிக்கும் பகுதிகளில் இன்று ஐநூறு நபர்கள் வசிக்கிறார்கள் இதற்கு ஏற்றவாறு கழிவு நீர் மேலாண்மை கட்டமைக்கப்படவில்லை. பல பகுதிகளில் பழமையான குழாய்களே இருக்கின்றன. அத்தகைய குழாய்களில் இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. அத்தகைய இடங்களில் தொழிலாளி இறங்குவதை தவிர மாற்று முறைகள் இல்லை. இந்த கட்டமைப்பை மாற்ற அரசு முனைப்பு காட்டுவதில்லை.

இத்தகைய சிக்கலை சரி செய்ய இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக சிக்கல் கிடையாது, இங்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் கட்டமைப்பும் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களிடம் இத்தகைய செயலை முறியடிக்க வேண்டும் என்கிற அக்கறையும், முனைப்பும் கிடையாது. மேலும் இத்தகைய வேலை செய்ய ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். ஒரு நாளும் இத்தகைய வேலையை நாம் செய்யப் போவதில்லை என்கிற மனிதநேயமற்ற உணர்வு தான் முக்கிய காரணம் என்கிற வசனம் படத்தின் மிக முக்கியமான வசனங்களில் ஒன்றாகும். 

மேலும் இன்று நவீன அப்பார்ட்மெண்ட, நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல வசதிகளை கொண்ட அப்பார்ட்மெண்ட பற்றிய செய்திகளையும்,விளம்பரங்களையும் பார்க்கிறோம். ஆனால் ஒரு அப்பார்ட்மெண்டில் கூட நவீன முறையில் கழிவு நீர் மேலாண்மை கொண்ட வசதிகளை பயன்படுத்தவில்லை, இது எல்லாம் நவீனம் கிடையாது, இதற்கு போய் ஏன் பணத்தை செலவு செய்ய வேண்டும்? இதற்கு பதிலாக டென்னீஸ் கோர்ட் அமைத்திவிடாலம் அது தான் நவீன அப்பார்ட்மெண்ட் என்கிற மனநிலை தான் ஆதிக்கம் செய்கிறது. 

இதே நிலை தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் தொடர்கிறது. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து எடுப்பதும் நவீன வளர்ச்சி என்கிற நிலையில் இருக்கிறார்கள். கழிவு நீர் மேலாண்மையை நவீன முறையில் அமல்படுத்துவது பற்றி இம்மி அளவு கூட அக்கறை இல்லை. இத்தகைய ஸ்மார்ட் சிட்டி  வளர்ச்சி திட்டத்திலும் தூய்மை பணியாளர்கள் மரணத்தைத் தடுக்க எந்த முனைப்பும்,வசதியும் இல்லை என்பது நடைமுறை எதார்த்தம். இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாக பார்வதி என்கிற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தூய்மை பணியாளர்கள் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட சாதி மக்களே வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். பிற சாதி மக்கள் இதற்கு விண்ணப்பிப்பது கூட இல்லை. படித்துக் கொண்டு இருக்கும் பார்த்திபன் நீச்சல் குளத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறான். அங்கு பார்த்திபனது சாதி ஆராயப்படவில்லை. ஒடுக்கப்படவில்லை. ஆனால் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு எடுக்கும் வேலைக்கு பார்ப்த்திபனை ஏன் தேர்வு செய்யப்பட்டான்? படித்துக் கொண்டு இருக்கும் பார்த்திபனுக்கு வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்படாமல் ஏன் இதற்கு மட்டும் வற்புத்தி வேலை வழங்க வேண்டும்? இங்கு சாதி எவ்வாறு பார்க்கப்படுகிறது? பிறப்பின் அடிப்படையிலா?

வேலைப் பிரிவினை தான் இங்கு சாதி உருவாகுவதற்கு அணிவேர்க் காரணமாக இருந்து இருக்கிறது. சுத்த வேலை, அசுத்த வேலை, உடல் உழைப்பு, மூளை உழைப்பு என்கிற பிரிவினையே சாதி என்கிற அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது. மேலும் இத்தகைய வேலையை இவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்கிற உழைப்பு பிரிவினையும், சுரண்டலும், சுரண்டுகிற அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளுதலும், உற்பத்தி கருவிகளை இவர்கள் வசம் செல்லவிடமால் இருப்பது உள்ளிட்ட காரணங்களே  சாதியைத் தொடர்ந்து நீடிக்கச் செய்து வருகிறது  அல்லது அத்தகைய அமைப்பு முறை வலுக்கட்டயமாக தொடரச் செய்யப்படுகிறது. அசுத்த வேலை செய்யும் மக்கள் ஏக்காரணத்தினாலும் உற்பத்தி கருவிகளுக்கு எஜமானகர்களாக ஆகிவிடக்கூடாது. இவர்களது உழைப்பைத் தொடர்ந்து சுரண்ட வேண்டும். மேலும், இம்மக்களது சந்ததியறும் இத்தகைய வேலை செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு நம்மை சுரண்டுகிறார்கள், இத்தகைய வேலையைத் திணித்து வருகிறார்கள் என்பதை உணராமல் இருக்க, பிறப்பின் அடிப்படையில் தான் சாதி பார்க்கப்படுகிறது என்ற கருத்து தொடர்ந்து மக்களது எண்ணங்களில் திணிக்கப்படுகிறது. எக்காரணத்தை கொண்டும் உழைப்பு பிரிவினை, சுரண்டல் இவற்றைப் பற்றி சிந்திக்க கூடாது, உணர்ந்து கொள்ள கூடாது, பிற உழைப்பாளர்களுடன் இணைந்துவிடக் குடாது என்கிற நோக்கத்தில் தான் பிறப்பின் அடிப்படையில் சாதியைத் தொடரச் செய்கிறார்கள். இது கருத்துமுதல்வாதமாகும். பிறப்பின் அடிப்படையில் தான் சாதி பார்க்கப்படுகிறது என்பது கருத்து முதல்வாதம், வேலை பிரிவினையின் அடிப்படையில் தான் சாதி பார்க்கப்படுகிறது என்பது பொருள்முதல்வாதமாகும். 

மேலும் இவர்களைத் தொடர்ந்து உழைப்பு சுரண்டல் பற்றி சிந்திக்காமல் இருக்க அடையாள அரசியல் இங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தம், சட்டம் ஆகியவற்றின் மூலம் இவர்களது துயரங்களை, சுரண்டலை, வலுக்கட்டாயமான வேலை திணிப்பை வென்று எடுக்க முடியாது என்பது நடைமுறை அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. வர்க்கப் போராட்டம் மட்டுமே உழைக்கும் மக்களுக்கு விடுதலை வழங்கும் என்பது வரலாறு.

தூய்மை பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்க ஆட்சியாளர்களுக்கும், கான்ட்ராக்டர், சப்-கான்டிராக்டர்களுக்கு விருப்பம் இல்லை, ஆனால் சட்டத்திற்கு புறம்பாக வேலைக்கு அமர்த்தப்பட்டு மரணமடைந்த பின்னர் பணத்தை வழங்கி சமரசம் செய்கிறார்கள், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க விருப்பமில்லாதவர்கள் தான் மரணத்திற்கு பணம் வழங்க முன் வருகிறார்கள். அரசு நிர்வாகத்தின் ஒரு அமைப்பான காவல்துறை ஒருபோதும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. மேலும் சமரசம் என்கிற பெயரில் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் கூட ஒரு பங்கை  அபகரித்துக் கொண்டு தான் வழங்குகிறார்கள்.

வளர்ச்சி திட்டம், புனரமைப்பு என்கிற பெயரில் உழைக்கும் மக்களை நகரத்தில் இருந்து வெளியேற்றுகிறது அரசு நிர்வாகம்.  இவ்வாறு சென்னையில் மட்டும் பல இடங்களில் வெளியேற்றப்பட்டு இருப்பதை செய்திகளில் பார்த்து இருக்கிறோம். ஆக மொத்தம் வளர்ச்சி திட்டத்தால் தூய்மை பணியாளர்களின் வேலை நெருக்கடியில் ஒரு மாற்றமும் இல்லை. வசிப்பதற்கு இடமும் இல்லை. ஆனால் குப்பைகளை அகற்றவும், கழிவு நீர் குழாய்களை தூய்மை செய்யவும், கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்ய மட்டும் உழைக்கும் மக்கள் வேண்டும்.

மேலும் உழைத்தால் மாநகராட்சி தொடர்ச்சியாக ஊதியத்தை சரியாக வழங்காது. ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள் நிலைமை இவர்களை காட்டிலும்  மோசமாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1920களில் “The Royal Commission” என்ற ஒன்று அமைக்கப்பட்டு தொழிலாளர்களை பற்றி ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வழங்கியது. 

அந்த அறிக்கையில் Contract ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்க வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை, அவர்களது உழைப்பை சுரண்டுவதற்கு அது பயன்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தது.

சரியாக 102 ஆண்டுகள் ஆயிற்று  இன்று கூட ஒப்பந்த தொழிலாளர் முறை நீக்கப்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைத்து வரும் சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இன்றும் உழைப்பை சுரண்டுவதற்கு ஒப்பந்த தொழிலாளர்முறை பயன்படுத்தப்படுகிறது..

அரசு நிர்வாகம், அரசின் செயல்பாடுகள், காவல்துறை, சாதிய முறையை பின்பற்றும் சமூக அமைப்பு, உழைப்பு சுரண்டல், அதிகார பலம், பண பலம், நீதிமன்ற செலவீனங்கள், கழிவு நீர் மேலாண்மையை நவீன மயமாக்காமல் இருப்பது ஆகிய காரணங்களால் தான் 340 தொழிலாளர்கள் ஓரே வருடத்தில் இறந்தும் கூட இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படாமல் இருக்கிறார்கள். 

கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்கள் பாதங்களை கழுவி மரியாதை செய்ததை எல்லாம் செய்திகளில் பார்த்தோம். இத்தகைய மரியாதை செயல்களால் அவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. தூய்மைப் பணியாளர்களின் உரிமைக்கும் உழைப்பு சுரண்டலுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியதே முதன்மையானது.

சுவட்ச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தாலும் தூய்மை பணியாளர்களுக்கு எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. இடதுசாரி தொழிற்சங்கம் ஏன் அவசியமானது. அவை தொழிலாளர்கள் பிரச்சனை எவ்வாறு எதிர்கொள்ள தொழிலாளர்கள் எந்த அளவிற்கு முனைப்பாக இருக்கிறார்கள் என்பதை பெத்தராஜ் கதாபாத்திரம் உணர்த்துகிறது. 

லஞ்சம் வாங்குவது குற்றம், லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற பாதாகைள் மாட்டப்பட்டு இருப்பதை போல அடுக்கு மாடி குடியுறுப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்திட  இயந்திங்களை மட்டுமே பயன்படுத்தப்படும், சட்டத்திற்கு புறம்பாக தொழிலாளர்களை கழிவுநீர் தொட்டியில் இறக்கப்படமாட்டார்கள் என்கிற பாதாகை எங்கேயாவது இருக்கிறதா? இல்லை இவ்வாறு ஒரு தீர்மானம் குடியுறுப்பு நலச்சங்கத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா?

ரோகிணி அவர்கள் கதாபத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். பல காட்களில் நடிப்பில் அசத்தி இருக்கிறார். வசனம் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்து இருக்கிறது. படத்தில் இரண்டு பாடல்கள் படத்தின் மைய கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. பரபரப்பான காட்சிகள், திடீர் திருப்புமுனைகள் என எதுவும் இல்லாமல் திரைக்கதை இயல்பாக அமைத்து இருப்பது சிறப்பாக அமைந்து வலுச் சேர்த்து இருக்கிறது.

முதல் படத்திலே தூய்மை பணியாளர்களின் துன்ப துயரங்களை பதிவு செய்த இயக்குனர் தீபக் அவர்களுக்கு செவ்வணக்கம்! விட்ன்ஸ் திரைப்படத்தின் மூலம் சமூகத்தை eye witness ஆக மாற்றி இருக்கிறார் இயக்குனர் தீபக். 

இறுதியாக உழைக்கும் மக்களின் தோழன் பேராசான் ஜீவா எழுதிய 

காலுக்கு செருப்பும் இல்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா என் தோழனே
பசையற்றுப்போனோமடா என் தோழனே

என்ற பாடல் இன்றும் பொருத்தமாக அமைகிறது.

வர்க்க போராட்டமே தீர்வை வழங்கும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button