‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை எதிர்க்கும் பா.ம.க வின் வன்மச் செயலுக்கு கண்டனம்
புராணங்களில் மூழ்கி கிடந்த தமிழ் திரையுலகில், சுயமரியாதை, சமதர்ம சிந்தனையாளர்களால் சமூக சீர்திருத்தக் கருத்துக்களும், மனித மாண்புகளை மதிக்கும் பண்புகள் வளர்க்கும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு, பெரும் சாதனை படைத்துள்ளது.
அண்மை காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, குரலற்றவர்களின் குரலை சில திரைப்படங்கள் முழங்கி வருகின்றன. இதில் “குறவர்” சாதிப் பிரிவை சேர்ந்த ராஜகண்ணுவுக்கு இந்த சமூகமும், விசாரணை அமைப்புகளும் இழைத்த அநீதியை திரைக் கலைஞர் சூர்யாவின் “ஜெய்பீம்” திரைப்படம் வெளிப்படுத்தியது. இத்திரைப்படம் உருவாக்கிய ஆக்கப்பூர்வமான நேர்மறை சிந்தனைகளைத் தடுத்து, திசைதிருப்பும் முறையில் சில குறுக்குப் பார்வை அமைப்புகள் மோதலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், அது மக்களால் நிராகரிக்கப்பட்டது.
இப்போது திரைக்கலைஞர் சூரியா நடித்த “எதற்கும் துணிந்தவன்” என்ற திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடக்கூடாது என பாமகவும், அதன் ஆதரவாளர்களும் “கலகம்” செய்வது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறிக்கும் அத்துமீறலாகும். இது மாற்றுக் கருத்துக்களை, விமர்சனங்களை எந்த வகையிலும் சகித்துக் கொள்ளாத பாசிசத் தன்மை கொண்ட பகைமைச் செயலாகும்.
இந்தச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட தணிக்கைத் துறையின் அனுமதியோடு திரைக்கு வந்துள்ள “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் எந்தவித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல், மக்கள் பார்வைக்கு செல்ல தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.