ஊட்டச்சத்து குறைபாட்டில் இந்தியா!
அ.பாஸ்கர்
கொடிய வறுமையும், கடுமையான பட்டினியும், நமது தாய்மார்களையும் அவர்களது வயிற்றில் வளரும் குழந்தைகளையும் கடுமையாக பாதிக்கின்றது. கருவில் சுமந்த குழந்தையை பிரசவிக்க முடியாமல் தாய் மரணமடைவதும், பிறந்த குழந்தை ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் மடிந்து போவதும் தொடரும் வேதனையாகும். தப்பிப் பிழைக்கும் குழைந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பது இன்னும் கொடுமையானது.
பட்டினியும், ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள், பெண்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பகுதியினரை மட்டுமே பாதிக்கின்றன.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டினி நிலை குறியீட்டு அறிக்கை சில கசப்பான உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
2013 ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும், பல ஆண்டுகளாக உணவு பொருட்களை இருப்பு வைத்துள்ள போதும், இந்தியாவின் பட்டினிப் பட்டியலில் இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாடானது தாயின் வயிற்றில் இருக்கும்போதே தொடங்கி விடுகிறது. காரணம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்காதது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவினைத் தர முடியாதது போன்ற குறைபாடுகள் அதிகரித்திருந்தது.
உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கையில் 50 சதவீத குழந்தைகள் இந்தியாவில் உள்ளன. இது 2015 ல் இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது.
நகரங்களில் வசிக்கும் குழந்தைகளை விட கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான் ஊட்டச்சத்து குறைவில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 6 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காரணமாக மரணம் அடைந்து வருவதாகவும், அதில் பெண் குழந்தைகள்தான் அதிகம் என்றும் யுனிசெப் நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவில் ஆறு மாதத்திலிருந்து இருபத்தி மூன்று மாதங்கள் வரையான வயதுள்ள குழந்தைகளில் 9.6 சதவீதம் மட்டும்தான் மிகக்குறைந்த அளவு உணவுகளை உண்ணுகிறார்கள்.
ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் போதிய உணவு கிடைக்காதவர்கள், போதிய வளர்ச்சி இல்லாதவர்கள், உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாதவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை 20.8 சதமாக உள்ளது. இந்த அறிக்கையில் கிடைத்த விபரங்களின் படி மற்ற நாடுகளை விட, குறிப்பாக பாகிஸ்தான், இலங்கையை விட இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது.
குழந்தைகளின் வளர்ச்சி குறைவு விகிதம் அல்லது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தீவிர ஊட்டச்சத்து குறையை குறிக்கிறது. இதுவும் 37.9 சதமாக உள்ளது. இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் சராசரி இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 37 ஆக உள்ளது.
2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட குழந்தை மரணங்களில் 8 லட்சத்து 82 ஆயிரம் மரணங்கள் அதாவது 69 சதவீத மரணங்கள் பச்சிளம் குழந்தைகள் ஆகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 69 சதவீத குழந்தைகள் மரணம் அடைகின்றன. ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும் ஏதோ ஒரு விதத்தில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது
வளர்ச்சி குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 35%. குறைவான ஊட்டச்சத்து பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 17%. குறைவான எடை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 33% என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
உலக நாடுகளில் பசி பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகிலுள்ள 116 நாடுகளிலும் உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்கள் இப்படி இந்த வருடத்திற்கான ஆய்வுக்கு அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட உலகப் பசி பட்டியல் ஆய்வறிக்கையில் இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 94 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 101 ஆவது இடத்திற்கு பின்தங்கிவிட்டது.
நமது நாட்டிற்கு அடுத்து வரும் கடைசி இடமான 116 வது இடத்தில் சோமாலியா உள்ளது.
அதேபோல பட்டினி மிகவும் கொடூரமாக உள்ள முப்பத்தி ஒரு நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருக்கிறது. இது பற்றியும் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை.
பட்டினி ஒழிக்க முடியாத பிரச்சனை அல்ல, தலையெழுத்து போன்ற கற்பிதக் காரணங்களும் அல்ல. உழைப்பின் ஆற்றலை, அறிவுபூர்வமாக பயன்படுத்தினால் பட்டினிக்கு முடிவு கட்ட முடியும் என்பதை சில நாடுகள் சாதித்து காட்டியுள்ளன.
பட்டினி இல்லாத வாழ்க்கையை உறுதிப்படுத்தியுள்ள முதல் பத்து நாடுகளில் பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளும் உள்ளன.
இந்தியாவின் ஏழைகள் அதிகம் இருப்பார் அவர்களை ஏதாவது சில குறியீடுகளை வைத்து ஏழைகள் இல்லை என்று காட்டி விடும் கண்கட்டு வித்தைக்கு, மோடி அரசு கற்பனைப் புள்ளிவிபரங்களை புனைந்து வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் உர விலை உயர்வு, உற்பத்தி செய்யும் தானியங்களுக்கு உரிய விலை கொடுத்து வாங்குவதற்கு ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை இத்தனை இன்னல்களையும், சந்தித்து இந்திய நாட்டில் உணவு உற்பத்தியை பெருக்கி தருகிறார்கள். விவசாயிகள், அரசு நிர்வாகம் உணவு தானியங்களை பாதுகாக்காமல் மழையிலும், வெயிலாலும், எலி முதலிய பிராணிகளாலும், உணவு பொருள்கள் விரயமாகின்றன.
“ஐ.நா. வெளியிட்ட உணவு விரயக் குறியீடு 2021 என்ற ஆய்வறிக்கையில், இந்தியர்கள் 2019- ஆம் ஆண்டில் மட்டும் 6.80 கோடி டன் அளவில் உணவுப் பொருள்களை, விரயம் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின்தங்கிய நாடுகளிலும் அதிக அளவில் உணவுப் பொருள் விரயம் செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறுகிறது.
உணவு வீணடிக்கப்படும் இதே இந்தியாவில்தான் தினமும் 20 கோடி மக்கள் இரவில் உணவு இல்லாமல் உறங்க செல்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால்தான் நீதிமன்றமே தானாக முன்வந்து ஆட்சியாளர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியது “எலிகளால் வீணாகும் தானியத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்” என்று அரசுக்கு உத்தரவிட்டது.
உணவு தானியத்தை பாதுகாப்பதற்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்திய நாட்டில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கு பதிலாக, கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாப்பதே குறியாக உள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது.
உழைக்கும் மக்கள் ஒரு போதும் ஏழைகள் அல்ல. அவர்களது உழைப்பின் பலனை அட்டை போல் ஒட்டி உறிஞ்சி வரும் கூட்டம் தான் வறுமை வளர்க்கும் கூட்டம் என்பதை உணர வேண்டும்.
எந்த சமயமோ, சாதியோ, அதில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நாம் உற்பத்தி செய்யும் செல்வத்தை சமூகத்திற்கு சமமாக பகிர்ந்தளிக்கும் பொருளாதாரக் கொள்கை உருவாக்க வேண்டும். இதனை செயலாக்க அரசியல் அதிகாத்தை வென்றெடுக்க வேண்டும். மோடியின் வெற்று பேச்சு இனி வெல்லாது.
ஆம், வறுமையில்லா வாழ்வுரிமை காக்கும் ஜனநாயகக் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் தொடரட்டும்…
தொடர்புக்கு: 94884 88339