உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் வேதனையைப் போக்குக! – தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் (ஏஐடியுசி) சார்பில் 20.04.2022 அன்று சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, சிற்றூராட்சிகளில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், மலேரியா தடுப்பு பணியாளர்கள், தெரு விளக்கு பராமரிப்பு பணியாளர்கள் உட்பட சுமார் 3000 க்கும் அதிகமான உள்ளாட்சி தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஏஐடியூசி துணைப்பொதுச் செயலாளர் கே.இரவி, சம்மேளன தலைவர் ஆர்.ஆறுமுகம், பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன:
1) மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஒப்பந்தம், வெளிச்சந்தை, தினக்கூலி, சுய உதவிக்குழு போன்ற முறைகளை முற்றாகக் கைவிட்டு, சேவை கட்டணம் என்ற பெயரிலான நிதி விரயத்தை தடுத்து, பணியமர்த்தப்பட்ட அனைவரையும் நேரடி பணியாளர்களாக்க வேண்டும்.
2) மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவர்கள் எந்தப் பெயரில் வைக்கப்பட்டிருந்தாலும் ஊதியம் வழங்கிய வங்கி கணக்கு ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும். பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
3) அதுவரை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
4) அரசு நிர்ணயித்த அரசாணை எண் 62, 2017 இன் படி குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.
5) அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியம் வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயிக்கும் ஊதியம் உள்ளிட்ட அனைத்துவித உத்தரவுகளையும், அரசாணைகளையும் ரத்து செய்ய வேண்டும்.
6) மாவட்ட ஆட்சியர்கள் தொழிலாளர் ஆணையரின் கடித எண் செ1/26752/2021 நாள்: 22.04.2021 ஐ கணக்கில் கொண்டு அரசாணைக்கு குறைவாக ஊதியம் நிர்ணயிக்கக் கூடாது.
7) ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களின் பிஎஃப், இஎஸ்ஐ போன்ற திட்டங்களுக்கு பிடித்தம் செய்து அதன் பலன் உரிய தொழிலாளிக்கு கிடைக்காமல் செய்யும் மோசடிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8) பிடித்தம் செய்த தொகைக்கு உடனடியாக ரசீது, இஎஸ்ஐ குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
9) முன்களப் பணியாளர்கள் என அறிவித்து மருத்துவத் துறை பணியாளர்களுக்கு வழங்கிய பெருந்தொற்று கால நிவாரணங்களை வழங்க வேண்டும்.
10) கையால் மலம் அள்ளும் தடைச்சட்டம் 2013 இன் படியான பாதுகாப்பு உபகரணங்கள், தொழில் கருவிகள் தந்து உரிய பயிற்சி அளித்து பயன்படுத்தச் செய்ய வேண்டும்.
11) மக்கள் தொகை பெருக்கம், கழிவுகளின் அளவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப வேலை அளவுகோல் நிர்ணயித்து, காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி, புதிய பணியிடங்களைத் தோற்றுவித்து மக்களின் பொது சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
12) நடைமுறைக்கு பொருத்தமற்ற வேலைப்பளுவை அதிகரித்து, ஊதியத்தை குறைத்து நகராட்சிகளின் இயக்குநர் வெளியிட்டுள்ள சமூக நீதிக்கு எதிரான சுற்றறிக்கை ந.க.21787/2021/ இ.ஏ.2 நாள்: 02.10.2021 ஐ ரத்து செய்ய வேண்டும்.
13) அதுவரை அரசாணை (நிலை) எண்101 நாள்: 30.04.1997 இல் கண்டுள்ள வேலை அளவை உறுதி செய்ய வேண்டும்.
14) ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வு கால பலன்கள் காலத்தே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
15) புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
16) கிராம ஊராட்சிகளில் ரூ.250/- ரூ. 1000/- ரூ.3600/- ரூ.4000/- என அற்ப தொகையை மாத ஊதியமாக வழங்கும் கொடுமையான சுரண்டலுக்கு முடிவுகட்ட வேண்டும்.
17) தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் முழுநேர பணியாளர்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
18) அதுவரை அரசாணை 62 இல் கண்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
19) அந்தந்த மாத ஊதியம், அந்தந்த மாதம் 5 ஆம் தேதிக்குள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.