உலக மகளிர் தினம்: பெண் கட்டுமான தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் 113 இடங்களில் கோரிக்கை மனு!

செய்தித் தொகுப்பு: A P மணிபாரதி
உலக மகளிர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. பெண் கட்டுமான தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கிராம நிர்வாக அலுவலர் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.
மாநிலம் தழுவிய இந்த இயக்கத்தில் கோவை மாவட்டத்தில் 113 இடங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டது. கோவை சங்கனூரில் பெண் தொழிலாளர்கள் மாநில பொதுச் செயலாளர் என்.செல்வராஜ், ஜே.கலா ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து கிராம நிர்வாக அலுவலர் உதவியாளரிடம் மனு அளித்தனர். இதில் விஜயா, இன்பரதி, ராமலட்சுமி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மாநில முதல்வருக்கு கொடுத்துள்ள மனுவில், ‘கட்டுமான தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதியும், விபத்து சிகிச்சையும், சிகிச்சைக்கான பாதுகாப்பும் வேலையில்லா காலத்திற்கு நிவாரணமும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
1994 ஆம் ஆண்டு நலவாரியம் தொடங்கப்பட்டபோது இ.எஸ்.ஐ. மற்றும் பிராவிடண்ட் பண்ட் திட்டங்கள் அமல்படுத்துதல் வாரியத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
பெண் தொழிலாளர்கள் 60 வயதை எட்டுவதற்கு முன்பாகவே மிகவும் தளர்ந்து விடுகிறார்கள். எனவே, அவர்கள் ஓய்வு பெறும் வயதை 50 என அறிவிக்க வேண்டும்.
60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளிக்கு மாதம் ரூபாய் 1000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. முதுமை காலத்தில் மருத்துவ செலவிற்கே இது போதுமானதாக இருக்காது. எனவே, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
அரசுத் துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு பிரசவகால விடுப்பு ஆறு மாத காலம் சம்பளத்துடன் வழங்கப்படுகிறது. அதுபோல, கட்டுமான தொழிலில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு ஆறு மாத காலத்திற்கு சம்பளத்துடன் வழங்க வேண்டும். இந்த நிவாரணம் மாத சம்பளம் ₹15,000 என கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்கள் பண பலன்களுக்காக விண்ணப்பிக்கும் போது, அதிகாரிகள் தேவையற்ற பல்வேறு காரணங்களை கூறி விண்ணப்பங்களை வேண்டுமென்றே நிராகரிக்கிறார்கள். இதனால் வாரியம் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பண பலன்களை மறுக்கும் வாரியமாக மாற்றப்பட்டுள்ளது.
இது மாற்றப்பட வேண்டும் தொழிலாளி விண்ணப்பித்த ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்,’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் அடங்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என். செல்வராஜ், ‘இந்தக் கோரிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. எங்களது சங்கத்தின் சார்பில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற மாநில கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேஷன் அவர்கள். தொழிலாளர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதை ஒப்புக்கொண்டார்.
எனவே தமிழக முதல்வர் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை மாவட்டத்தில் 113 இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 154 இடங்களிலும், சேலம் மாவட்டத்தில் 76 இடங்களிலும், ராமநாதபுரத்தில் 50 இடங்களிலும், நீலகிரியில் 25 இடங்களிலும் என தமிழகத்தில் சுமார் 2000 இடங்களில் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.’ என்றும் கூறினார்.