உலக தொழிற்சங்க சம்மேளன செய்திகள்
ஐ.நா சபை மனித உரிமைகள் மாநாடு: உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் நிலைப்பாடு.
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையில் (ECOSOC) உலக தொழிற்சங்க சம்மேளனம் நிறுவன உறுப்பினர் பொறுப்பு வகித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற ஐ.நா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் உலக தொழிற்சங்க சம்மேளனம் பங்கேற்றது. அதன் பிரதிநிதியாக, நிர்வாக செயலாளர் அனஸ்டசக்கி கலந்து கொண்டு, மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் நிலைப்பாட்டைச் சமர்ப்பித்தார். அதன் சுருக்கமான விவரம் பின்வருமாறு:
ஐ.நா சபை மனித உரிமைகள் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது போல், விளிம்பு நிலை மக்களைப் பாதுகாப்பது என்பது மனித உரிமைகள் பாதுகாப்பில் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்க அமைப்புகளும், கொள்கைத் திட்டங்களும் அவசியம் என்ற போதிலும், அவற்றை உறுதிப்படுத்த நாம் அரசுகளை நம்பியிருக்க முடியாது. மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது பல்வேறு சமூகங்களின் ஒற்றுமை மற்றும் அவற்றின் நடவடிக்கைகளைச் சார்ந்துள்ளது. எனவே, மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது வன்முறை நடவடிக்கைகள் இன்றி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, சிவில் சமூகம் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்துவது மூலம் கட்டமைக்கப்படும் அமைதிப் பண்பாட்டைச் சாரும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள, அமைதிப் பண்பாட்டை உருவாக்க, ஐ.நா பொதுச் சபை சில அடிப்படைகளை வலியுறுத்துகிறது. இந்த அறிக்கை, அந்த அடிப்படைகளுக்கு இடையேயான சார்புத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்புகள், சமுதாய ஒற்றுமை ஆகியவற்றின் மீதான சார்புத்தன்மையை ஆய்வு செய்கிறது. மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான தீர்க்கமான நடவடிக்கைகளை இந்த அறிக்கை முன்மொழிகிறது.
ஐ.நா சபை மனித உரிமைகள் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது போல் மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என்றால், விளிம்பு நிலை மக்களை நாம் பாதுகாக்க வேண்டும். சர்வதேச அளவிலான, இலட்சிய நோக்குடைய விதிகளின் தொகுப்பை நிறுவிட மேற்கொண்ட முயற்சியே ஐ.நா சபை பிரகடனம் ஆகும்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்களுக்கு இனவாதம், இன அடிப்படையிலான பாகுபாடு, பாசிசம், நவீன பாசிசம், நவீன காலனியம் ஆகியவையே முக்கியமான காரணங்களாக உள்ளன என்பதை 20 ஆம் நூற்றாண்டின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இது போன்ற போக்குகளுக்கு எதிராகப் போராடுவதே அமைதி இயக்கத்தின் முக்கியமான பணி ஆகும்.
“அமைதிப் பண்பாட்டிற்கான சர்வதேச ஆண்டு” மற்றும் “அமைதிப் பண்பாட்டிற்கான சர்வதேச தசாப்தம்” ஆகிய ஐ.நா சபை பிரகடனத்தை உலக தொழிற்சங்க சம்மேளனம் ஆதரிக்கிறது. அமைதி, ஆயுத பரவல், மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தகவல்களின் பங்கு மற்றும் மனித உரிமைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் கல்விக்கான நமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அமைதி, பாதுகாப்பு, தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்குப் பயங்கரவாதம் (எந்தவொரு மதம், குழு அல்லது நாட்டில் இருந்து வந்தாலும்) ஓர் அச்சுறுத்தல் ஆகும். பயங்கரவாதத்தை ஒழித்திடப் போராடுவது அமைதி இயக்கத்தின் ஒரு கடமை ஆகும்.
நிலம் மற்றும் சுய-நிர்ணய உரிமைக்கான பூர்வகுடிமக்களின் போராட்டத்திற்கு உலக தொழிற்சங்க சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கிறது.
போர் மற்றும் ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு எதிராக, 21 ஆம் நூற்றாண்டில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள 5 கண்டங்களிலும் உள்ள 130 நாடுகளைச் சார்ந்த நண்பர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 17 வது ஆசிய-பசிபிக் பிராந்திய கூட்டத்தில் உலக தொழிற்சங்க சம்மேளனம் பங்கேற்பு
சிங்கப்பூரில் டிசம்பர் 6-9 வரை நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 17 வது ஆசிய-பசிபிக் பிராந்திய கூட்டத்தில் உலக தொழிற்சங்க சம்மேளனம் பங்கேற்றது.
இந்தக் கூட்டத்தில், உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையக பிரதிநிதிகள் கலந்து கொண்டு இருதரப்பு கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்தனர். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வர்க்கப் பார்வை கொண்ட தொழிற்சங்க இயக்கத்தின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் துணை பொதுச் செயலாளருடன் சிலோன் வங்கி ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி சந்திப்பு
தொழிற்சங்க செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க சிலோன் வங்கி ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி கார்த்திக் உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் துணை பொதுச் செயலாளர் தோழர் ஸ்ரீகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவர்களின் தொழிற்சங்க செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்தனர். OCFWU சார்பாக சிலோன் வங்கி ஊழியர்கள் சங்கப் பிரதிநிதி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் திரளாகக் கூடியிருந்த OCFWU உறுப்பினர்கள் மத்தியில் அவர் எழுச்சியுரை ஆற்றினார்.
தமிழில் – அருண் அசோகன்