உலக சமாதான கழகத்தின் தலைவராகத் தோழர் பல்லப் சென் குப்தா தேர்வு!
உலக சமாதான கழகத்தின் 22 வது மாநாடு வியட்நாம் நாட்டின் தலைநகரமான ஹனோயில் நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்றது. இதற்கு முந்தைய மாநாடு ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரேசில் நாட்டில் நடைபெற்றது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், உலக அமைதிக்காகவும் தொடர்ந்து போராடி வரும் 60 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் எண்ணற்ற சகோதர அமைப்புகளை சார்ந்த பிரதிநிதி குழுக்கள் வியட்நாமில் ஒன்று கூடின. இம்மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான தோழர் பல்லப் சென் குப்தா மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜாவும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், உலக அமைதி மற்றும் சமூக நீதிக்கான ஆதரவை வலுப்படுத்துவோம் என்ற முழக்கம் இந்த மாநாட்டின் மையக் கருவாகத் திகழ்ந்தது.
1950 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த அமைப்பின் முதல் தலைவராக வியட்நாம் நாட்டின் புரட்சித் தலைவரான ஹோ சி மின் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்த மாநாட்டில், உலக சமாதான கழகத்தின் தலைவராகத் தோழர் பல்லப் சென் குப்தா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தோழர் ரொமேஷ் சந்திராவுக்குப் பின், இந்தப் பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாவது இந்தியர் தோழர் பல்லப் சென் குப்தா ஆவார்.