உலகை அச்சுறுத்தும் உணவுத் தட்டுப்பாடு: ரஷ்யாவின் உதவியைக் கோரும் ஐ.நா.பொதுச் செயலாளர் !
2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச அளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதுபோன்றதொரு உலக நெருக்கடியைத் தவிர்த்திட ரஷ்ய நாட்டின் உரங்கள் மற்றும் உணவு தானியங்கள் எவ்வித தடையுமின்றி சர்வதேச சந்தையைச் சென்றடைய வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் ஆன்டணியோ குட்ரஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவிலான கோதுமை தானிய வழங்கலில் ரஷ்ய மற்றும் உக்ரைனின் பங்களிப்பு 25% ஆகும்.
2020 ஆண்டு புள்ளி விபரங்களின் படி,
கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யாவின் பங்கு சுமார் 20 %, உக்ரைனின் பங்கு 8% ஆகும். கோதுமை இறக்குமதியைப் பொறுத்தவரையில் சுமார் 50 நாடுகள் அவற்றின் மொத்த இறக்குமதியில் 30% அளவிற்கு ரஷ்யா மற்றும் உக்ரைனைச் சார்ந்துள்ளன.
மக்காச்சோள உற்பத்தியில் உக்ரைன் உலக அளவில் 8வது இடத்திலும், ஏற்றுமதியில் 4வது இடத்திலும் உள்ளது. இதுதவிர, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதியில் உக்ரைன் முதலிடம் வகிக்கிறது.
மேற்கண்ட விபரங்கள், உக்ரைனில் நடைபெற்று வரும் இராணுவ மோதல்கள் உலகின் பல நாடுகளில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, சில மாதங்களாகவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், உணவு தானியங்களுக்காக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளைச் சார்ந்துள்ள பல நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மோசமான பின்விளைவுகளை உண்டாக்கக்கூடிய இந்த நெருக்கடியைத் தவிர்த்திட, உலகின் பல நாடுகளை உணவுத் தட்டுப்பாடு பிரச்சினையிலிருந்து பாதுகாத்திட, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஜூலை மாதம் உணவு தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திட கூட்டு ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. ரஷ்யா, உக்ரைன், துருக்கி ஆகிய நாடுகளும், ஐ.நா.சபையும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளன.
ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் நடைமுறையில் இருப்பினும், அந்நாட்டின் வேளாண் விளைபொருட்களையும், அங்கு உற்பத்தி செய்யப்படும் உரங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இதன் நீட்சியாக, ரஷ்ய நாட்டு உணவு தானியங்கள் மற்றும் உரங்கள் தங்கு தடையின்றி சர்வதேச சந்தைகளைச் சென்றடையும். இதுவே இந்த ஒப்பந்தத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதியாகும்.
ரஷ்யா – உக்ரைன் மோதல் காரணமாக கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் நாட்டின் உணவு தானிய ஏற்றுமதி தடைபட்டிருந்தது. இதன் காரணமாக உணவு தட்டுப்பாடு நெருக்கடி ஏற்படும் என்ற அச்ச உணர்வு பரவிக்கொண்டிருந்தது.
கடந்த ஜூலை மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி ஆகஸ்ட் மாதம் தொடங்கி இதுவரையில் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் டன் எடையுள்ள உணவு தானியங்கள் மற்றும் வேளாண் விளைபொருட்கள் உக்ரைன் நாட்டு துறைமுகங்களிலிருந்து இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
உக்ரைன் நாட்டைச் சார்ந்துள்ள பல ஆப்பிரிக்க நாடுகளில் உணவு வழங்கலை உறுதிப்படுத்திட, பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, உக்ரைனிலிருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட ஐ.நா.சபை முயன்று வருவதாக பொதுச் செயலாளர் ஆன்டணியோ குட்ரோஸ் கூறியுள்ளார்.