உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைபடுத்துக – டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
ஊடகங்களுக்கான செய்தி. நாள் 14.02.2022
** தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் 50% மருத்துவ இடங்களுக்கு மருத்துவ ஆணையச் சட்டத்தின்படி ‘அரசு கட்டணங்களை’ நிர்ணயிக்கக் கோரி…
** உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 % இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பினை நடைமுறை படுத்தக் கோரி..
** “சரகர் உறுதிமொழி”யை மருத்துவ மாணவர்கள் மீது மத ரீதியாக திணிப்பதை கைவிடக் கோரி..
** மருத்துவக் கல்வியை இந்துத்துவ மயமாக்குவதை கைவிடக் கோரி…
** ஒருங்கிணைந்த மருத்துவம் ( Integrated Medicine) என்ற பெயரில் நவீன அறிவியல் மருத்துவத்தின் வளர்ச்சியை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கைவிடக் கோரி…
** சென்னை மருத்துவக் கல்லூரி உட்பட அனைத்து தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளிலும், மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதிகளை மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி…
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத் சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (14.02.2022) வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி.
1.மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடங்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு இணையாக மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால் இதுவரை அதை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியிடப்படவில்லை.மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த கட்டண நிர்ணய ஆணையை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டால்தான், தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேரமுடியும். எனவே, உடனடியாக அரசாணைகளை வெளியிட வேண்டும்.
# தமிழக அரசு உடனடியாக, மத்திய அரசை வலியுறுத்தி,தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூபாய் 13,650 மட்டுமே, தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் நிர்ணயித்து அரசாணையை வெளியிட வேண்டும். இக்கட்டண நிர்ணயம் , கறாராக நடைமுறைப்படுத்தப் படுகிறதா அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவையும் அமைக்க வேண்டும்.
# கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திட வேண்டும். கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தில் தண்டனைகளை கடுமையாக்கிட உரிய திருத்தங்களைச் செய்திட மத்திய மாநில அரசுகள் செய்திட வேண்டும்.
2. உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டு மென்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.தமிழக அரசுக்குச் சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 சதவீத உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் முன்பு இருந்தது போல் தமிழகத்துக்கே வழங்கிட வேண்டும்.
3. ஒன்றிய பாஜக அரசு மருத்துவக் கல்வியை “காவி மயமாக்கி” வருகிறது.மருத்துவக் கல்வியில் இந்துத்துவ சித்தாந்தத்தை திணிக்கிறது.குறிப்பாக மதச்சார்பற்ற ’நவீன அறிவியல் மருத்துவ’த்தை (Modern Scientific Medicine) நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறது. நவீன அறிவியல் மருத்துவம் ஒரு மேற்கத்திய மருத்துவம் ,ஆங்கில மருத்துவம், கிறிஸ்தவ மருத்துவம், அந்நிய மருத்துவம் என்ற புரிந்து கொள்ளலுடன் அம்மருத்துவத்தை ஒழித்திட நினைக்கிறது.நவீன அறிவியல் மருத்துவம் என்பது எந்த ஒரு நாட்டுக்கோ , எந்த ஒரு பண்பாட்டுகோ, எந்த ஒரு மக்கள் பிரிவினருக்கோ சொந்தமானது அல்ல .இன்றைய நவீன அறிவியல் மருத்துவம் என்பது ஒரு உலகளாவிய மருத்துவமாகும். சர்வதேச மருத்துவமாகும்.அதன் வளர்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.நவீன அறிவியல் மருத்துவம் திடீரென்று வானத்திலிருந்து குதித்து வந்ததல்ல.உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிய பண்டைய சமூகங்களின் , பண்டைய மருத்துவ முறைகள் அனைத்தும் நவீன அறிவியல் மருத்துவம் வளர்வதற்கு உதவியுள்ளன.அடித்தளமாக இருந்துள்ளன. பண்டைய மருத்துவ முறைகளில் உள்ள ஏற்கத்தக்க அறிவியல் ரீதியான விஷயங்களை ஏற்று, அவற்றை வளர்த்தெடுத்து நவீன மருத்துவம் பரிணமித்துள்ளது.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியும், அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியும் , இதன் வளர்ச்சி புதிய சிகரங்களை எட்டிட உதவியது.இன்று பல்வேறு அறிவியல் துறைகளில் நிகழ்ந்துள்ள புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் உடனடியாக உள்வாங்கி, நவீன அறிவியல் மருத்துவம் செழுமை பெற்றுள்ளது. பெற்றுவருகிறது. பெறும்.நவீன அறிவியல் மருத்துவம் தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வருகிறது .இந்த நவீன அறிவியல் மருத்துவம் தான் கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலக மக்களை காத்துள்ளது . ஆனால் ஒன்றிய அரசின் சித்தாந்தவாதிகள் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நவீன அறிவியல் மருத்துவம் ஒரு அந்நிய மருத்துவம் எனக் கருதி, அதை ஒழித்துக்கட்ட முயல்கின்றனர்.
மருத்துவத்தை இந்துத்துவா அடையாள அரசியலுக்கு ,மதவெறி அரசியலுக்கு பயன்படுத்த முனைகின்றனர். நவீன அறிவியல் மருத்துவம் என்பது ஒரு மதச்சார்பற்ற மருத்துவமாகும்.# பண்டைய இந்திய மருத்துவரான “சரகர்” அவர்களின், திரிக்கப்பட்ட உறுதிமொழியை மதச்சார்பற்ற நவீன அறிவியல் மருத்துவம் பயிலும் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்து அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. ’சரகர் உறுதிமொழி’’யை இந்துத்துவா அடிப்படையில் மத்திய அரசு கையாள்கிறது. இது மருத்துவம் பயிலும் பல்வேறு சிறுபான்மை பிரிவினரின் உணர்வுகளுக்கும், மதச்சார்பற்ற மருத்துவர்களின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும். இத்தகைய “இந்துத்துவ” கருத்தியலை திணிக்கும் போக்கை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். கொரானா தடுப்புக்காக விளக்கேற்றுதல்,அப்பளம் உண்ணுதல்,சேறு மற்றும் சாணிக் குளியல், கங்கை நீர் சிகிச்சை, கோமியம் குடித்தல் போன்றவை சங்பரிவார அமைப்புகளால் ஊக்கப்படுத்தப்பட்டன. இவற்றை தடுக்க மத்திய அரசு முனையவில்லை.
கோமியம் மற்றும் பஞ்சகவ்ய மற்றும் பசு ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவியலுக்கு புறம்பானாது. மதவாத அரசியல் உள் நோக்கம் கொண்டது.ஒன்றிய அரசு யோகா பயிற்சியையும் மருத்துவ மாணவர்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது . மருத்துவர்களை மத ரீதியாக பிளவு படுத்தும் நோக்கம் இதில் உள்ளது.யோகாவை ஒரு உடற்பயிற்சியாக தனிப்பட்ட நபர்கள் மேற்கொள்வதில் தவறில்லை . ஆனால் யோகாவை இந்துத்துவ அடையாள அரசியலுக்கு கருவியாக பயன் படுத்துவது தவறாகும்.
ஒன்றிய அரசின் இத்தகைய போக்கு நமது அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும், அறிவியல் மனப்பான்மைக்கும், அறிவியல் முன்னேற்றத்திற்கும் எதிரானதாகும். ஒருங்கிணைந்த மருத்துவமுறை ( Integrated Medicine) என்ற பெயரில், நிரூபணமான நவீன அறிவியல் மருத்துவ முறைகளுடன், காலாவதியான மருத்துவமுறைகளை, நிரூபணமாகாத மருத்துவ முறைகளை, போலி மருத்துவ அறிவியலை கலப்பது (Mixing ), ஒருங்கிணைக்க (Integrate ) முயல்வது , நவீன அறிவியல் மருத்துவத்தின் தரத்தை, வளர்ச்சியை மிக மோசமாக பாதிக்கும். இத்தகைய முயற்சிகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
4. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதிகளை மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
5.பழமையும்,பெருமையும் வாய்ந்த சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம்,பல் மருத்துவம்,செவிலியம், ஃபிசியோதெரப்பி,மருந்தியல், துணை மருத்துவப் படிப்புகள் போன்ற பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் என பல்வேறு படிப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு படிக்கின்றனர். இந்த மாணவர்கள் தான் 7000 த்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கும், பல்லாயிரக்கணக்கான புறநோயாளிகளுக்கும் சாதாரண காலத்திலும், அவசர காலத்திலும், பெருந்தொற்று காலத்திலும், 24 மணி நேரமும் 365 நாட்களும் மருத்துவ சேவை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறார்கள். அச்சேவை புரிய அவர்களுக்கு மருத்துவமனை வளாகத்திலேயோ அல்லது அதற்கு மிக அருகிலேயோ பாதுகாப்பான, அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குவதற்கான விடுதி வசதிகளை செய்து தர வேண்டியது அவசியம். இது மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைக்கும் மிக அத்தியாவசியமானது. தேசிய மருத்துவ ஆணையச் சட்ட விதிமுறைகளும் அதையே வலியுறுத்துகின்றன. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கழிவறையுடன் கூடிய தனி அறைகளும் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கான குடியிருப்புகளையும் (Quarters) உருவாக்கிட வேண்டும்.சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவியர் விடுதியை மருத்துவமனை வளாகத்திற்குள்ளோ அல்லது மிக அருகிலேயோ அமைத்துத் தர வேண்டும். #பல்மருத்துவம், செவிலியப் படிப்பு, பிசியோதெரப்பி, மருந்தியல், துணை மருத்துவப் பிரிவுகள் போன்ற பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் விடுதிகளில் இட நெருக்கடி அதிகமாக உள்ளது. இவர்களுக்கு போதுமான விடுதி வசதி அமைத்து தரவேண்டும்.
# சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் , முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்குக் கூட தங்களது வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை. இதனால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அங்கு பணி புரியும் மருத்துவர்களுக்கும், குடியிருப்புகளும் வாகன நிறுத்த வசதிகளும் போதுமானதாக இல்லை.
# சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள்,உறவினர்கள், பொதுமக்கள்,வந்து செல்கிறார்கள். அவர்களுக்காக மருத்துவமனைக்குள் போதுமான எண்ணிக்கையில் உணவகங்கள்,கழிப்பிடங்கள்,காத்திருக்கும் இடங்கள் இல்லை. அவை தேவைப்படுகின்றன. அவர்களுக்கு சாலையை கடக்க உயர் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், வேண்டும். தொடர் சிகிச்சை தேவைப்படும் புற நோயாளிகள்,மற்றும் உறவினர்களுக்கு தங்கி சிகிச்சை பெற விடுதிகளை அருகிலேயே அரசே அமைத்திடல் வேண்டும். மன இறுக்கத்தை குறைக்க பூங்காக்களை அமைக்க வேண்டும்.
# சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த கண் பிரிவு,குழந்தைகள் பிரிவு,மகப்பேறு பிரிவு,மன நல பிரிவு போன்றவைகள் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் நோயாளிகளும், மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் தினம் தோறும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட உள்ள சிறப்பு ,உயர் சிறப்பு மருத்துவத் துறைகளையாவது முடிந்தவரை கல்லூரிக்கு அருகில் நிறுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#பொது மக்கள்,மருத்துவமனையின் நலன்,மாணவர்கள் மற்றும் ,மருத்துவர்கள் நலன் காக்க மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.
# சென்னை மருத்துவக் கல்லூரிக்கு பக்கத்தில் உள்ள ,அனைத்து அரசு இடங்களையும் ஆய்வு செய்து,புதிய இடங்களை தேர்ந்தெடுத்து இயன்ற வரை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை விரிவாக்கத்துப் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை,உயர் சிறப்பு மாணவர்களுக்கான விடுதியை வேறு இடத்திற்கு மாற்றவும் அவ்விடத்தை , மருத்துவம் சாரா வேறு துறைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகைய முயற்சிகள் மக்கள் நலனுக்கு எதிரானது. அம்முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் ,தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
6.அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி உடனிருந்தார்.
இப்படிக்கு, டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் பொதுச் செயலாளர் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.9940664343, 9444181955