உதகை தாவரவியல் பூங்கா போராட்டம்: முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
உதகை தாவரவியல் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளி அங்கம்மாள் மரணமடைந்துள்ள செய்தி ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.
அங்கம்மாள் போல் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்களும், அரசின் தோட்டக்கலைத்துறையிலும், ஆராய்ச்சி பண்ணைகளிலும், தினக்கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அரசின் வேளாண்மை துறையின் கீழ் உள்ள அரசுப் பண்ணைகளிலும், வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி பண்ணைகள், தோட்டக்கலைத்துறை பிரிவுகளிலும் குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படாத அவல நிலை தொடர்கிறது.
காலமுறை ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் நடந்து வரும் போராட்டத்தில் அரசு காலத்தில் தலையிட்டு பேசித் தீர்வு கண்டிருந்தால், மூத்த தொழிலாளியின் சாவு தடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போராட்டத்தில் அரசின் அணுகுமுறை தொழிலாளர்களிடம் எதிர்மறை கருத்துக்களை உருவாக்கியிருப்பது வேதனையளிக்கிறது. உதகையில் நடைபெறும் போராட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதுடன், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.