உணவு தானிய கொள்முதலை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
வரும் பருவம் முதல் உணவு தானிய கொள்முதலில் தனியாரை ஈடுபடுத்திட உள்ளதாக ஒன்றிய உணவுத்துறை செயலர் சுதான்ஷீபாண்டே செப்டம்பர் 19 அன்று டெல்லி கருத்தரங்கில் கூறியுள்ளார். இது ஒன்றிய அரசின்ஆர்வமிக்க கருத்துருவாகும். இதை நடைமுறைப்படுத்திடும் தீவிர திட்டம் அரசிடம் உள்ளது எனவும் கூறுகிறார்.
நாட்டு மக்களுக்கு உணவு தானியங்கள் சீராக கிடைக்கச் செய்திடவும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கான நியாயமான விலையுடன் கொள்முதல் செய்யும் நடவடிக்கையே அரசு கொள்முதல் திட்டமாகும்.
தனியார்களின் கொள்முதல் மட்டுமே முழுமையாக இருந்து வந்த நிலையில், வியாபாரிகளின் லாப வேட்டைக்கு விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் பலியிடப்பட்டது. கொள்முதல் செய்த உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து, செயற்கையாக உணவு தானிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை ஏற்றம் மூலம் தனியார்கள் லாபவேட்டை அடைந்தார்கள். கொள்முதல் விலையையும் மொத்த வியாபாரிகளே தீர்மானிப்பர். இப்படியான நிலையில்தான் நீண்ட காலமான விவசாயிகளின் போராட்டங்களுக்கு பின், விவசாயிகளையும், நுகர்வோர்களையும் பாதுகாத்திடவே அரசு கொள்முதல் திட்டம் வந்தது.
ஒன்றிய அரசு 23 வேளாண் விளைபொருட்களுக்கு மட்டுமே விலையை நிர்ணயம் செய்கிறது. இவை முழுமையும் அரசு கொள்முதல் செய்வதில்லை. பிற வேளாண் விளைபொருட்களையும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்திட வேண்டும் என்று விவசாயிகள் போராடி வரும் நிலையில், இருப்பதையே தனியாரிடம் விடவே ஒன்றிய அரசு துடிக்கிறது.
பி.எம்.கேர்ஸ் கூட்டாளிகளான பகாசுர கம்பெனிகளை கொள்முதலில் ஈடுபடுத்திடவே இந்த ஏற்பாடு. ஒன்றிய அரசின் உணவு தானிய கொள்முதலைத் தனியார்களிடம் கொடுக்க உள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கருத்துரு நிலையிலேயே இதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.
இதன் மீது ஒன்றிய அரசு, மாநில அரசுகளிடம் கருத்து கேட்க உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதைத் தடுத்திடும் நிலையில் உரிய நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.