உக்ரைன் அரசியல் களத்தில் நவீன தாராளமயம்

அரசியலும் பொருளாதாரமும் பிரிக்க முடியாதவை எனும் மார்க்சிய அடிப்படையை சமகாலத்து உக்ரைன் நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுப் போக்குகள் மீண்டும் நிரூபணம் செய்கின்றன.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ கலகத்தால் அப்போதைய அதிபர் யானுகோவிச் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டதன் நேரடி விளைவாகவே செலன்ஸ்கி உக்ரைனின் அதிபராகப் பொறுப்பேற்றார். பிரேசிலில் அதிபர் தில்மா ரூசெப்-க்கு எதிரான ராணுவ கலகத்திற்கு பின் போல்சோனாரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளும் எதேச்சையாக நடந்தவையன்று. இவற்றின் பின்புலத்தில் தீவிர வலதுசாரி குழுக்களும், நவீன நாஜிக்களும் இருந்தனர். மக்களிடையே குழப்பங்களை உண்டாக்குவது, பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வது ஆகியவற்றை மிகவும் திறம்பட மேற்கொண்டனர்.
அதிபர் யானுகோவிச் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்ட பின் உக்ரைன் நாட்டுக்குள் மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் நுழைந்தது தற்செயலான நிகழ்வன்று. 2012 ஆம் ஆண்டு பராகுவே நாட்டில் நாடாளுமன்ற குழப்பங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாக அதிபர் பெர்னாண்டோ லுகோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அத்தியாயத்திலும் மான்சாண்டோ நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
பிரேசில் நாட்டில் நிகழ்ந்த இராணுவ கலகத்திற்கு பிறகு, தனியார்மயம் மற்றும் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கபளீகரம் செய்வதற்கான கதவுகள் திறந்து விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நவீன தாராளமயம் எனும் அரசியல் நகர்வில் ஷெல், மான்சாண்டோ போன்ற பெருநிறுவனங்களும் தீவிர வலதுசாரி குழுக்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருந்தன.
அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக இருக்கும் பட்சத்தில், அரசை ஆதரிப்பதும், அதிகாரத்தையும், செல்வ வளங்களையும் பகிர்மானம் செய்ய முயன்றாலோ, பொது கல்வி மற்றும் பொது சுகாதாரத்துறைகளை நிறுவிட முயலும் பட்சத்தில் அரசை எதிர்ப்பதும் நவீன தாராளமயத்தின் சாரம் ஆகும்.
தனியார்மய செயல்திட்டத்தைத் திணிக்க வேண்டுமென்றால், முதலில் சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறைகள், பொதுக் கல்வி மற்றும் சுகாதார கட்டமைப்புகள் ஆகியவை தகர்க்கப்பட வேண்டும். இதனை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் சமுதாயத்தில் தற்போது ரகசியமாக இயங்கி வரும் பாசிஸ்டுகள் மற்றும் மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளின் ஆதரவை நவீன தாராளமயம் திரட்ட வேண்டும்.
தெளிவுறச் சொல்வதானால், பாசிசம் என்பது இராணுவ உடை அணிந்துள்ள நவீன தாராளமயம் அல்லது நவீன தாராளமயம் என்பது சாதாரண உடை அணிந்துள்ள பாசிசம் ஆகும்.