கட்டுரைகள்

உக்ரைன் – ரஷ்ய போர் 15வது நாள்

ரஷ்ய எரிசக்தி அமைச்சர் அலெக்சாண்டர் நோவக் இந்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்சிங் தீப் பூரியுடன் பேசினார். இரு தேசங்களும் எரிசக்தி துறையில் செய்ய வாய்ப்புள்ள ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. அதாவது அமெரிக்கா வாங்க மறுத்த ரஷ்ய எண்ணெய்யை இந்தியாவுக்கு தர தயாராக இருப்பதாக இதன் பொருள். மேலும் இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிக்க உள்ள வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மருத்துவ கல்வி பாதிக்கப்பட்ட உக்ரைன் மாணவர்கள் ரஷ்யாவில் அனுமதிக்கப்படுவார்களா எனும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்த நிகழ்வுகளை கவனியுங்கள்

உக்ரைனில் உயிரி ஆயுதங்கள் அமெரிக்கா வைத்திருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டுகிறது.
அமெரிக்கா மறுக்கிறது. ஆனால் அமெரிக்க அதிகாரி விக்டோரியா நுலண்ட் தடுமாறி ஆம் என கூறுகிறார்.
அது ரஷ்யாவின் கைகளுக்கு சென்று ஆபத்து வரப்போகிறது என நுலண்ட் புலம்புகிறார்.
பின்னர் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்த பொழுது இந்த வைரசை உக்ரைன் பெற்றிருக்கலாம் என புரூடா விடப்படுகிறது.
எதுவும் எடுபடாததால் இதனை அம்பலப்படுத்திய டுவிட்டர் வாசியின் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கிவிடுகிறது.
வாழ்க அமெரிக்க ஜனநாயகம்; வாழ்க டுவிட்டரின் சேவை!

சமூக ஊடகங்களில் உலவும் நகைச்சுவை

8 ஆண்டுகளாக உக்ரைனுக்கு நேட்டோ சொன்னது: “கவலைப்படாதே சகோ! ரஷ்யாவை எதிர்த்து களம் இறங்கு! நாங்கள் இருக்கிறோம்” 
இப்பொழுது நேட்டோ உக்ரைனுக்கு சொல்வது: “நாங்கள் உனக்காக ரஷ்யாவுடன் போரிட முடியாது. உனக்கு ஆயுதங்கள் தருகிறோம். கவலைப்படாதே”
போருக்கு பிறகு சொல்லப்போவது: “நீ இப்போழுது எங்களுக்கு தேவை இல்லை. சீனாவுக்கு எதிராக தைவானை கொம்பு சீவும் பணி எங்களுக்கு காத்து கிடக்கிறது” 

உக்ரைன் – ரஷ்ய போர் 15வது நாள்

மாஸ்கோவில் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் எனவும் மீறி தங்கினால் பின்னால் எந்த உதவியும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடாது எனவும் அமெரிக்க தூதர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரித்துள்ளார். 
உக்ரைன் ராணுவத்தினர் சிறைபிடிக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பல இடங்களில் ஹிட்லர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாஜி பதாகைகள் மற்றும் இதர அடையாளங்களை ரஷ்ய ராணுவமும் டோன்பாஸ் பகுதி ராணுவமும் கைப்பற்றி உள்ளன.
ஸ்காடோவாஸ்க் எனும் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது.  உக்ரைன் படைகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உக்ரைன் ராணுவத்தின் உத்தி என்ன? அனைத்து படைகளும் தலைநகரான கீவ் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனவா என பலர் ஐயம் எழுப்புகின்றனர்.
ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் உக்ரைன் அரசியல்வாதிகள் தேச துரோகத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மரணதண்டனை கூட விதிக்கப்படும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான வி.டி.பி. வங்கி தனது வாடிக்கையாளர்கள் சீன நாணயமான யுவானை பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனை செய்யலாம் என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நிதி தடைகளை தவிர்க்க புதிய முயற்சிகள் உருவாக்கப்படுகின்றன. இது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நேட்டோவுடன் இணையும் வாய்ப்பு இல்லை என சுவீடன் பிரதமர் அறிவித்துள்ளார். அவ்வாறு இணைந்தால் வட ஐரோப்பாவில் பல விரும்பத்தகாத பிரச்சனைகள் உண்டாகும் எனவும் அவர் தெரிவித்தார். 
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக பிரிட்டனில் ஒவ்வொரு குடும்பமும் 2500 பவுண்ட் ஸ்டெர்லிங் அதாவது 2,50,000 ரூபாய் கூடுதலாக செலவு செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போல அமெரிக்க மக்களும் 2000 முதல் 2500 டாலர்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அபாய சங்கு ஊதப்பட்டுள்ளது.
பார்லி/கோதுமை/சர்க்கரை/உப்பு/ மாமிசம் ஆகியவற்றின் ஏற்றுமதியை உக்ரைன் அரசாங்கம் மறுஅறிவிப்பு வரை தடை செய்துள்ளது. 
ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி வளைக்கின்றன எனவும் பிற பகுதிகளிலிருந்து அதன் ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் கீவ் நகரை நோக்கி நகர்கின்றன எனவும் அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் தாக்குதல் தொடங்கும் எனவும் சில ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அனைத்து நேட்டோ நாடுகளும் உக்ரைனுக்கு விமானங்கள் தராமல், தான் மட்டும் தரப்போவது இல்லை என போலந்து தெளிவாக கூறியுள்ளது. உக்ரைன் பெரும்பான்மையான  விமானங்களை போரில் இழந்துவிட்டது. இருக்கும் சில விமானங்களை இயக்க விமான தளங்களும் இல்லை. அவை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டன. எனவே சில நாட்களாக போலந்து தனது விமானங்களை உக்ரைனுக்கு தருமாறு அமெரிக்கா நிர்பந்தித்து வந்தது. இந்த ஆலோசனையில் உள்ள ஆபத்தை போலந்து உணர்ந்துள்ளதாக தெரிகிறது.
சி-14 எனும் நாஜி அமைப்பு, உக்ரைன் பொது மக்களுக்கு ஆயுத பயிற்சி வழங்குவதை பி.பி.சி. ஒளிபரப்பி உள்ளது. தீவிர வலதுசாரி கட்சியான சுவொபோடாவின் இளைஞர் அமைப்புதான் சி-14. நாடோடி மக்கள் மீதும் இடதுசாரி ஆதரவாளர்கள் மீதும் வன்முறை ஏவி படுகொலை செய்தது இந்த அமைப்பு. இவர்கள் துணை ராணுவத்தினராக ஜெலன்ஸ்கி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
சுலோவாக் தேசத்தில் உள்ள இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த செஞ்சேனை வீரர்களின் கல்லறைகளை சில விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த செஞ்சேனை வீரர்கள் சுலோவாக்கை ஹிட்லர் படைகளிடமிருந்து விடுவிக்க உயிர் தியாகம் செய்தவர்கள். இதனை ரஷ்ய அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
உக்ரைன் அப்பாவி மக்களுக்கு ரஷ்ய ராணுவத்திடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை எனவும் பல நகரங்களில்  உக்ரைன் நாஜிக்களும் வலதுசாரிகளும்தான் மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் எனவும் ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தொழில்நுட்ப பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை செமி கண்டக்டர் எனப்படும் முக்கிய சில்லு பாகம் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்படும் எனவும் இதன் விளைவாக மேற்கத்திய நாடுகளும் இழப்பை சந்திப்பர் எனவும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக எரிபொருள் பிரிட்டனுக்கு வருவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குளிர் காலத்தில் வெப்பம் உருவாக்கும் எந்திரங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு பிரிட்டன் அதிகாரிகள் மக்களை கோரியுள்ளனர். அப்படியானால் வெப்பம் குறைந்து குளிர் காரணமாக பல உடல் உபாதைகளை ஏற்படுத்துமே அதற்கு யார் பொறுப்பு என சில குரல்கள் எழுந்துள்ளன.
அமெரிக்கா விதிக்கும் தடைகள் காரணமாக மக்கள்தான் மனிதப் பேரழிவுகளை சந்திக்கின்றனர்.  சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் எந்த பாதிப்பையும் எதிர்கொள்வது இல்லை எனும் உண்மையை அங்கீகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஓமர், ஜனாதிபதி பைடனை வற்புறுத்தியுள்ளார்.
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் சீன நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் தனது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை சாத்தியம் உள்ள அனைத்து வழிகளிலும் சீன அரசாங்கம் பாதுகாக்கும் என சீனா பதிலடி தந்துள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நேரடியாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேசுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார். வேண்டுமானால் ஜூம் வழியாக பேச ஏற்பாடு செய்யலாம் என அவர் கூறினார். ஏமாற்றமும் கோபமும் கொண்ட உக்ரைன் அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது. இஸ்ரேல் யூத தேசம் என்பதும் ஜெலன்ஸ்கி ரஷ்யாவில் பிறந்த யூதர் என்பதும் கூடுதல் தகவல்கள்.
ரஷ்ய படைகள் மரியபோல் எனும் நகரில் குழந்தைகள் மற்றும் பிரசவ மருத்துவமனையை தாக்கியது என மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த மருத்துவமனையில் உக்ரைன் நாஜிக்கள் ஆயுதங்களுடன் ஊடுருவியுள்ளனர் என்பதை கடந்த 7ஆம் தேதியே ரஷ்யா ஐ.நா.வுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த மருத்துவமனையில் உள்ள பலரை நாஜிக்கள் வெளியேற்றிவிட்டனர். சிலரை மனித கேடயமாக பயன்படுத்தினர் என்பதையும் ரஷ்ய ராணுவம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ரஷ்ய எதிர்ப்பை பார்த்து அமெரிக்காவுக்கு தப்பித்து வந்த பல உக்ரைன் குடும்பங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் தங்களின் செலவுகளை ஏற்றுக்கொள்வார்கள் என உறுதி அளித்தும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த இரட்டை வேடம் அமெரிக்காவுக்கு இருக்கலாமா என சிலர் கேட்கின்றனர். இரட்டை வேடம் இல்லை எனில் அது அமெரிக்க ஏகாதிபத்தியமே இல்லை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது?
ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள ஒரு மருத்துவமனை “ரஷ்யர்களுக்கும் பெலோரஷ்ய தேசத்தவர்களுக்கும் இங்கே மருத்துவ சிகிச்சை தரப்படாது” என அறிவித்துள்ளது. பல மருத்துவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் மருத்துவர்கள் எடுக்கும் “ஹிப்போகிரடஸ்” உறுதி மொழிக்கு இது முரண்பாடானது. கடும் எதிர்ப்புக்கு பின்னர் அந்த மருத்துவமனை தனது அறிவிப்பை அகற்றியுள்ளது.
  • தொகுப்பு : அ.அன்வர் உசேன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button