ஈரோடு மாவட்டத்தில் AITUC போராட்டம் வெற்றி! QPMS ஒப்பந்த நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்பட்டது!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது QPMS ஒப்பந்த நிறுவனத்திற்கும், AITUC தொழிற் சங்கத்திற்கும் நேற்றும், இன்றும் (08.02.2023) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஒப்பந்த விபரம் வருமாறு:
1947 – ஆம் வருடத்திய தொழிற்தகராறுகள் சட்டம், பிரிவு 18 (1)-ன் படி செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம்
நாள்: 08-02-2023
தொழிற்தாவாவில் சம்பந்தப்பட்டவர்கள்:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்ததாரர் நிறுவனமாக QPMS என்ற குவாலிட்டி பிராப்பர்ட்டி மேனேஜ்மெண்ஔட் சர்வீசஸ் (பி) லிட்., நிர்வாகமும், இங்கு பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சார்பில் AITUC – ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கமும்
நிர்வாக தரப்பு பிரதிநிதிகள்:
1) திரு.பீட்டர் கோம்ஸ் அவர்கள்
பொது மேலாளர்
2) திரு. ஆதி நாராயணன் அவர்கள்,
மேற்கு மண்டல மேலாளர்
3) திரு.சி.வினோத் அவர்கள்
மேலாளர், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை
குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (பி) லிட். (QPMS),
எண்:86, சுதர்சன் பில்டிங், 3-வது தளம்,
சாமிர்ஸ் சாலை, நந்தனம், சென்னை – 600018
தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள்:
1) எஸ்.சின்னசாமி
தலைவர் மற்றும் ஏஐடியுசி மாநிலச் செயலாளர்
2) டி.ஏ.செல்வம்
ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர்
3) ஏ.கல்பனா
சங்க உறுப்பினர்
ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் (AITUC),
எம்.கல்யாணசுந்தரம் இல்லம் 15,கருப்பண்ண வீதி, ஈரோடு-638001
தொழிற்தாவாவின் சுருக்கம்:
ஈரோடு, தந்தை பெரியார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களின் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த 25-01-2023 அன்று ஈரோடு, வருவாய் கோட்டாட்சியர், ஈரோடு நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவிற்கிணங்க, QPMS ஒப்பந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் திரு. ஆதி நாராயணன் அவர்கள், ஏஐடியுசி – ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.சின்னசாமி அவர்களுக்கு கடிதம் மூலம் அளித்த உறுதிமொழிப்படி, ஏ.கல்பனா உள்ளிட்ட 16 ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு முழுச் சம்பளத்துடன் 30-01-2023 அன்று வேலை வழங்கப்படாமல், புதிய நிபந்தனைகள் விதி்க்கப்பட்டது. குறிப்பாக, இடைநீக்கம் செய்யப்பட்ட ஏ.கல்பனா உள்ளிட்ட 6 தொழிலாளர்களுக்கும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பதிலாக வேறு அரசு மருத்துவமனைகளில் வேலை வழங்குவதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தின் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்து, ஈரோடு, வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் உறுதியளித்தபடி ஏ.கல்பனா உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு முழுச்சம்பளத்துடன் இதே மருத்துவமனையில் பழையபடி வேலை வழங்க வேண்டும், ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707/-ஐ முன்தேதியிட்டு வழங்க வேண்டும்; தொழிலாளர் நலச்சட்டங்களின் படியான நலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும்… என வலியுறுத்தி கடந்த 31-01-2023 காலை 10.00 மணி முதல் 2-2-2023 பகல் 12.30 மணி வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திலும், பின்னர், 2-2-2023 பகல் 12.30 மணிக்கு பிறகு தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 40 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே, 07-02-2023 மற்றும் 08-02-2023 தேதிகளில் ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனை மீட்டிங் ஹாலில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் நிறைவாக பின்வரும் ஒப்பந்த ஷரத்துகள் கொண்ட சுமூக உடன்பாடு ஏற்பட்டது
ஒப்பந்த ஷரத்துக்கள்:
1). ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களின் காத்திருப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த 25-01-2023 அன்று ஈரோடு, வருவாய் கோட்டாட்சியர், ஈரோடு நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை அதிகாரிகள் முன்னிலையில் கடிதங்கள் மூலம் அளித்த உறுதிமொழிகளை முழுமையாக செயல்படுத்துவதென இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2). ஏ.கல்பனா, கே.சிவகாமி, கே.ராமசாமி, எம்.ஜெமீலா, எஸ்.ஜோதி, டீ.வளர்மதி ஆகிய 6 தொழிலாளர்களின் கடிதத்தின் அடிப்படையில் அவர்களது பணியிடை நீக்க உத்தரவுகள் (Suspension Orders) ரத்து செய்யப்படுவதாக நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
3). ஈரோடு, வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் உறுதியளித்தபடி, ஏ.கல்பனா உள்ளிட்ட 16 தொழிலாளர்களுக்கும் கடந்த 10-01-2023 முதல் வேலை வழங்கும் நாளதுவரை வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு முழுச் சம்பளத்துடன் இன்று (8-2-2023) முதல் இதே மருத்துவ மனையில் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் பணி வழங்க நிர்வாகத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
4). மேற்கண்ட 16 தொழிலாளர்களோடு இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜி.கோவிந்தன் உள்ளிட்ட 20 ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட வேலை நாட்களுக்கு முழுச் சம்பளமும், பணிபுரிந்த இடத்திலேயே வேலையும் வழங்க நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
5). தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக கடிதப்படியும் (கடித எண்:697/DMS – OUTSOURCING/ TNMSC/ENGG/2022 -1, நாள்:25-03-2022), இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், சென்னை அவர்களின் கடிதங்கள் படியும் (ந.க.எண்: 18877/OHSS/1/2022, நாள்: 06-06-2022 மற்றும் ந.க.எண்:18879/OHSS/1/2022, நாள்:29-08-2022) ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சட்டபூர்வ நலன்கள் வழங்கப்பட வேண்டும் என்ற ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் மீது தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் தீர்வுகாண நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
6). இந்தச் சுமூக ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள் மீது எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என நிர்வாகத் தரப்பிலும், பணிகளை சிறப்பாக மேற்கொண்டு நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என தொழிலாளர் தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
8) இந்த ஒப்பந்தம் இன்று (08-02-2023) ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனையில் கையெழுத்தானது.